TamilsGuide

இராணிமார்கள் பிறக்கவில்லை, அவர்கள் உருவாக்கப்படுகிறார்கள்..

இராணித் தேனீ

இராணிமார்கள் பிறக்கவில்லை, அவர்கள் உருவாக்கப்படுகிறார்கள்..

இது தேனீ உலகில் ஒரு அற்புதமான கதை! ஒரு இராணித் தேனீ இறந்துவிட்டால் கூட, ஒரு நாட்டைப் போலவே தேனீ கூட்டத்தில் குழப்பம், அரசியற்ற நிலை ஏற்படுவதில்லை. அதற்கு பதிலாக, முழு கூட்டமும் அமைதியாக ஒரு இலக்கிற்காக ஒன்றிணைகிறது.. தேனீ கூட்டம் உடையாது. அது ஏற்கின்றது. அத்துடன், புதிய இராணி ஒருவருக்காக ஒரு குட்டி தேர்ந்தெடுக்கப்படுகிறது. சாதாரண தோற்றமுள்ள குட்டிகள் பலரிலிருந்து சிலரை தேர்வு செய்கின்றார்கள். அவர்கள் சிறப்பானவர்கள் என்பதாலல்ல, அவர்கள் சிறப்பானவர்களாக மாறும் வாய்ப்பு இருப்பதால் தான்.

எந்த குட்டி எதிர்கால இராணியாக மாறும் என்பதை தீர்மானிப்பது விதியோ ஜீன்களோ அல்ல. அது அவருக்குக் கொடுக்கப்படும் உணவாகும். அதாவது, அவருக்கு வழங்கப்படும் சிறப்பு உணவான ராயல் ஜெல்லி (Royal Jelly) காரணமாகும். இந்த அடர்த்தியான, ஊட்டச்சத்து நிறைந்த திரவம் தான் மாற்றத்தின் அமிர்தமாக விளங்குகிறது. அதுவே ஒரு சாதாரண குட்டியை அசாதாரணமான இராணியாக மாற்றும் மாயாஜாலம். இங்கே முக்கியமானது விதியல்ல, ஊட்டச்சத்துதான்.

ராயல் ஜெல்லி என்பது தேனீகள் தயாரிக்கும் ஒரு தனிப்பட்ட திரவமாகும். இது வெண்மையான, கிரீம் போன்ற தோற்றம் கொண்டதாகும். தேனீ உலகில், இந்த ராயல் ஜெல்லி தான் இராணி தேனீயின் வாழ்க்கையும் வளர்ச்சியிலும் முக்கிய ரகசியமாக இருக்கிறது.

இது பெரும்பாலும் நீர், புரதங்கள், சர்க்கரை வகைகள் (பிருக்டோஸ் மற்றும் கிளூகோஸ் உட்பட), கொழுப்புகள், B வகை வைட்டமின்கள், கனிமங்கள் மற்றும் அமினோ அமிலங்களைக் கொண்ட கலப்பாகும். இதில் உள்ள மிக முக்கியமான தனித்துவம் வாய்ந்த சேர்க்கை 10-HDA (10-hydroxy-2-decenoic acid) எனப்படும். இது ராயல் ஜெல்லியில் மட்டுமே காணப்படும், சுகாதார நன்மைகளுக்குத் தோற்றம் தரும் தன்மை கொண்டது.

ராயல் ஜெல்லி தயாரிக்கப்படுவது இளம் வேலைக்கார தேனீக்களால் (worker bees). அவற்றின் உடலில் உள்ள pharyngeal மற்றும் mandibular glands என்பவற்றின் ஸ்ராவங்களை கலப்பதன் மூலம் இந்த ஜெல்லி உருவாகிறது. குறிப்பாக 5 முதல் 15 நாட்கள் வயதுடைய இளம் வேலைக்கார தேனீகள் இந்த பணிக்குத் தனிப்பட்டவை. அவர்கள் தங்கள் உடலில் உள்ள கொழுப்பு சுரப்பிகளில் இருந்து ஊட்டச்சத்துக்களை உறிஞ்சி, பின் அதை pharyngeal gland மூலம் ஜெல்லியாக மாற்றுகிறார்கள்.

ஒரு புதிய இராணித் தேனீ உருவாக்க வேண்டியபோது, வேலைக்கார தேனீக்கள் விசேட இராணி அறைகள் (Queen cells) கட்டுகிறார்கள். அவற்றில் முட்டை இடப்பட்ட பிறகு, அந்த குட்டிக்குத் தொடர்ந்து அதிகளவில் ராயல் ஜெல்லி வழங்கப்படுகிறது. மற்ற சாதாரண குட்டிகள் ராயல் ஜெல்லி பெறுவது வாழ்நாளின் ஆரம்ப 2–3 நாட்களுக்கு மட்டுமே. பின்னர் அவர்கள் Bee Bread எனப்படும் தேன் மற்றும் மகரந்தக் கலவையை உண்ணுகிறார்கள்.

ராயல் ஜெல்லியில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஹார்மோன் போன்ற சேர்மங்கள் அந்த குட்டியின் மரபணு செயல்பாடுகளை மாற்றி, சாதாரண தேனீவைக் காட்டிலும் பெரியதாகவும், நீண்ட நாட்கள் வாழக் கூடியதாகவும், முட்டை இடக் கூடியதாகவும் மாற்றுகின்றன. இது ஊட்டச்சத்துக்களால் உயிரினரின் விதியை மாற்ற முடியும் என்பதற்கான அபூர்வமான எடுத்துக்காட்டாகும்.

ராயல் ஜெல்லி தொடர்ந்து பெறும் ஒரே குட்டி தான் இராணியாக மாறுகிறாள். அவள் பெரிதாக மாறுகிறாள், நீண்ட காலம் வாழ்கிறாள், கூட்டத்தின் தலைமை பொறுப்பை ஏற்கிறாள், அதை மறுபடியும் கட்டியெழுப்புகிறாள். குழப்பமிருந்த இடத்தில் ஒழுங்கும் ஒற்றுமையும் ஏற்படுத்துகிறாள். அவள் அதிகாரத்துக்காக பிறக்கவில்லை, ஆனால் அதற்கேற்ப உருவாக்கப்படுகிறாள் 
 

Leave a comment

Comment