வங்கதேசத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் பாராளுமன்ற தேர்தல் - இடைக்கால அரசு அறிவிப்பு
வங்கதேசத்தில் மாணவர் அமைப்பினர் நடத்திய போராட்டத்தின் எதிரொலியாக, பிரதமர் பதவியில் இருந்து ஷேக் ஹசீனா விலகி இந்தியாவில் தஞ்சமடைந்தார். இதையடுத்து, அங்கு பாராளுமன்றம் கலைக்கப்பட்டது.
அதன்பின், ராணுவத்தின் கண்காணிப்பில் முகமது யூனுஸ் இடைக்கால தலைவராக அறிவிக்கப்பட்டார். அவரது தலைமையிலான இடைக்கால அரசு அங்கு அமைந்தது.
கடந்த ஆண்டு முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்தி, ஆட்சியை கவிழ்த்து ஒரு வருடம் கடந்துவிட்டது.
இந்நிலையில், வங்கதேசத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரி 12ம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் என இடைக்கால அரசு அறிவித்துள்ளது.
ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் கட்சி தடை செய்யப்பட்ட நிலையில், அந்நாட்டின் ஒரே பெரிய கட்சியான வங்கதேச தேசியக் கட்சி தேர்தலில் வெற்றி பெறும் சூழல் உள்ளதாக கூறப்படுகிறது.























