படத்திற்கு படம் நடிப்பில் வித்தியாசம் காட்டி இருந்தாலும், தமிழ் சினிமாவில் பலரும் அறியப்படாத ஸ்டைலிஷ் மன்னன் என்றால் அது சிவாஜி கணேசன் தான்.
தமிழ் சினிமாவில் நடிப்பு பல்கலைகழகம் என்று அழைக்கப்படும் சிவாஜி கணேசன், பலதரப்பட்ட கேரக்டர்களில் நடித்திருந்தாலும், அவரது நடிப்பை பார்ப்பதை விட, நடையை பார்க்கத்தான் ரசிகர்கள் வருவார்கள் என்று அவரே ஒரு இயக்குனரிடம் கூறியுள்ளார்.
1952-ம் ஆண்டு வெளியான பராசக்தி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் சிவாஜி கணேசன். நாடக நடிகராக இருந்து தமிழ் சினிமாவின் உயரிய அந்தஸ்தை பெற்ற சிவாஜி, பராசக்தி படத்திற்கு பிறகு, பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். மேலும் வில்லன், குணச்சித்திரம், என பலதரப்பட்ட கேரக்டர்களில் தனது நடிப்புத்திறமையை வெளிப்படுத்தியுள்ள சிவாஜி கிருஷ்ணன் பஞ்சு தொடங்கி தனுஷ் அப்பா கஸ்தூரி ராஜா வரை பல இயக்குனர்களுடன் பணியாற்றியுள்ளார்.
நடிப்பு என்றால் சிவாஜி தான். அவரின் நடிப்பை தான் இன்றைய நடிகர்கள் பின்பற்றி வருவதாக பலரும் கூறி வருகின்றனர். நடிப்புக்கு பெயர் பெற்ற சிவாஜி சவாலியே விருதை பெற்றிருந்தாலும் கூட, தனது நடிப்பை பார்க்க என் ரசிகன் தியேட்டருக்கு வரமாட்டான், என் நடையை பார்க்கத்தான் வருவான் என்று அவரே ஒரு இயக்குனரிடம் கூறியுள்ளார். படத்திற்கு படம் நடிப்பில் வித்தியாசம் காட்டி இருந்தாலும், தமிழ் சினிமாவில் பலரும் அறியப்படாத ஸ்டைலிஷ் மன்னன் என்றால் அது சிவாஜி கணேசன் தான்.
இன்றைய தமிழ் சினிமாவில் ஸ்டைல்-க்கு பெயர் பெற்றவர் ரஜினிகாந்த். ஆனால் இவரின் பெரும்பாலான ஸ்டைல்களை சிவாஜி கணேசன் பிளாக் அண்ட் வொயிட் காலக்கட்டத்திலேயே செய்துவிட்டார் என்பது இப்போது அவரது படத்தை பார்த்தால் தெரிந்துகொள்ளலாம். ஸ்டைலுடன் சேர்த்து சிவாஜி ஒவ்வொரு படத்திற்கு தனித்தனியான நடை அசைவுகளை வெளிப்படுத்தியிருப்பார். திருவிளையாடல் உள்ளிட்ட பல படங்களில் சிவாஜி கணேசனின் நடை என்பது வித்தியாசமான கோணத்தில் இருக்கும். இந்த நடையை பார்க்கவே ரசிகர்கள் வருவார்கள் என்று அவர் கூறியுள்ளார்.
இயக்குனர் சி.வி.ஸ்ரீதரின் சகோதரர் சி.வி.ராஜேந்திரன் ஒருமுறை, சிவாஜி நடித்த ஒரு படத்தில் அவர் ஸ்விம்மிங் போல் பக்கமாக நடந்து சென்று, உள்ளே போய் பேசுவது போன்ற காட்சி படமாக்கியுள்ளார். படம் எடிட்டிங்கில் வந்தபோது படத்தின் நீளத்தை கருதி சிவாஜி, தொடங்கிய காட்சியை மட்டும் வைத்துக்கொண்டு உள்ளே சென்று பேசும் காட்சியை இணைத்துள்ளார். நடுவில் அவர் ஸ்விம்மிங் போல் பக்கமாக நடந்து சென்ற காட்சி இல்லை. டப்பிங் பேச வந்த சிவாஜி கணேசன், அந்த காட்சி இல்லாததை பார்த்துள்ளார்.
அப்போது இயக்குனரிடம் ஏண்டா அண்ணன் (சிவாஜி) இங்கு ஒரு நடை நடந்திருப்பேனே அது எங்கடா என்று கேட்க, அது நீளம் காரணமாக கட் பண்ணியாச்சுப்பா என்று கூறியுள்ளார் இதை கேட்ட சிவாஜி, போடா என் நடையை பார்க்கத்தான் என் ரசிகன் வருவான் என்று கூறியுள்ளார். சிவாஜி தன்னை உணர்ந்து இதை சொன்னதாக ஊமை விழிகள் இயக்குனர் அரவிந்த் ராஜ் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
தமிழச்சி கயல்விழி


