எம்.ஜி.ஆரின் பலமே - அண்ணன் எம்.ஜி.சக்கரபாணிதான்
சினிமா
சென்னை: மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் அமரர் எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி.சக்ரபாணியின் நினைவு நாளை ஒட்டி எம்.ஜி.ஆரின் விசுவாசி ஒருவர், அன்றைய நாளிதழில் வெளியான செய்தியை பகிர்ந்துள்ளார்.
எம்.ஜி.ஆரின் பலமே அவருடைய அண்ணன் பெரியவர் எம்.ஜி.சக்கரபாணி தான். அவர் சொன்னதை தட்டாமல் கேட்பவர். எம்.ஜி.ஆரின் வெற்றியில் பெரும்பங்கு இவருக்குண்டு. சிறுவயதிலேயே தந்தையை இழந்ததால் தன் அண்ணனைத் தான் எல்லாமுமாக நினைத்து வந்தார் எம்.ஜி.ஆர்.
தன் அண்ணனின் திடீர் மறைவை எம்.ஜி.ஆரால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. தன்னுடைய பலம் அத்தனையும் திடீரென காணாமல் போய்விட்டது போல் உணர்ந்தார். அதன் காரணமாகவோ என்னவோ அண்ணன் மறைந்த ஒரு வருடத்திலேயே தானும் விண்ணுலகை அடைந்துவிட்டார்.
எம்.ஜி.ஆரின் அண்ணன் பெரியவர் எம்.ஜி.சக்கரபாணி மறைந்த அன்று ஒரு பத்திரிக்கையில் வெளியான செய்தியை எம்.ஜி.ஆரின் விசுவாசி இப்போது வெளியிட்டுள்ளார். அதில்:
முதல் அமைச்சர் எம்.ஜி.ஆரின் அண்ணன் திரு. எம்.ஜி.சக்கரபாணி அவர்கள் கடந்த சில மாதங்களாகவே உடல் நலமின்றி இருந்தார். ஒருவாரத்திற்கு முன்பு சென்னையில் உள்ள லேடி வெலிங்டன் ஹாஸ்பிட்டலில் அனுமதிக்கப்பட்டார். 10 நாட்கள் தீவிர சிகிச்சைக்குப் பின்னும் உடல் நிலை சீரடையாமல் 1986 ஆகஸ்ட் 17ஆம் நாள் இரவு 12.00 மணி அளவில் உயிர் பிரிந்தது.
அண்ணனின் உடல்நிலை மோசமடைந்ததை அறிந்த முதல்வர் எம்.ஜி.ஆர் தன் மனைவி ஜானகி அம்மையாருடன் அன்று இரவு 8 மணிக்கு மருத்துவமனை வந்தடைந்தார். அண்ணன் உயிர் பிரியும்போதும் அருகிலேயே இருந்த எம்ஜிஆர் கண்ணீர் விட்டு கதறி அழுதார்.
எம்.ஜி.ஆருடன், சக்கரபாணியின் மனைவி மீனாட்சி அம்மாளும், அவர்களது மகன்கள் மற்றும் மகள்களும் கதறி அழுதனர். சற்று நேரத்தில் உறவினர்கள் மற்றும் பொதுமக்களின் அஞ்சலிக்காக ராயப்பேட்டையிலிருந்த சக்கரபாணியின் இல்லத்திற்கு அவரின் உடல் எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு எம்ஜிஆர் ஒரு பெரிய மலர் மாலையை தன் அண்ணனின் உடல்மேல் சார்த்திவிட்டு மீண்டும் கதறி அழுதார். கவர்னர் குரானா எம்ஜிஆரை தேற்றினார். பின் எம்.ஜி.ஆரை அருகில் உள்ள அறையில் அமர வைத்தனர்.
மறுநாள் உடல் அடக்கத்தின் போது பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், நடிகர்களும் வந்தனர். திரு.கருப்பையா மூப்பனார் அவர்கள் எம்ஜிஆருடனேயே கடைசி வரை இருந்தார். இறுதிச் சடங்கின் போது சக்கரபாணிக்கு வாய்க்கரிசி போடும் நிலையில் எம்.ஜி.ஆர் மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்தார்.
அவர் கையிலிருந்த அரிசியை அண்ணனின் வாயில் போட எம்.ஜி.ஆரால் இயலவில்லை. சூழ்நிலையை உணர்ந்த மூப்பனார் அவர்கள், எம்.ஜி.ஆரின் கையை பிடித்து தட்டிவிட அரிசி அண்ணனின் வாயில் விழுந்தது. பிறகு எம்ஜிஆரை கைத்தாங்கலாக அழைத்துச்சென்றனர்...
Chandran Veerasamy






















