தமிழ்த் திரைப்பட உலகில் 1974ம் வருடம் ஒருவராலும் மறக்க முடியாத வருடம்.இது வரை கதை சொன்ன முறையை மாற்றி அமைத்து ஒரு திரைப்படம் வெளிவந்த வருடம். முழுவதும் முற்றிலும் புது முகங்களைக் கொண்டு ஆனால் அவர்கள் அனைவருமே ஏதோ நூறு படங்கள் நடித்தவர்கள் போல திறமையைக் காட்டி நடித்த படம் அது. முற்றிலும் ஒரு இயக்குனரின் ஆளுமையின் கீழ் தமிழ் திரையுலகைக் கொண்டு வந்து விட முடியும் என்ற நம்பிக்கையைக் கொடுத்தப் படம். இதுவரையில் பெண்களின் மிக அந்தரங்கமான வேதனைகளை மிக உள்ளார்ந்த பரிவுடன் சொல்லிய படம். பெண்கள் வேலைக்குப் போக வேண்டிய நிர்பந்தத்தையும் கல்வியும் வேலைவாய்ப்பும் பெண்களின் கண்ணியத்தை அதிகரிக்கச் செய்யும் என்று முழங்கிய படம். கே.பாலச்சந்தர் என்ற உன்னதக் கலைஞனின் கைவண்ணத்தில் வெளிவந்த அவள் ஒரு தொடர்கதை என்ற திரைப்படம்தான் அது. இவற்றோடு சேர்த்து சுஜாதா என்ற அற்புத நடிகையை நமக்கு அளித்த படம்.
அவள் ஒரு தொடர்கதை, அவர்கள், நூல் வேலி மூன்றுமே சுஜாதாவின் பெயர் சொல்லும் படங்கள் என்றாலும் கே.பாலச்சந்தர் தொடர்ந்து ஒரு நடிகைக்கு இவ்வளவு படங்கள் கொடுத்தார் என்றால் அது சுஜாதா ஒருவருக்காகத்தான் இருக்கும். சரிதா என்று நீங்கள் மறுக்கலாம். ஆனால் சரிதாவிடம் இருக்கும் மிகை நடிப்பு சுஜாதாவிடம் இல்லை.
சுஜாதாவிற்கும் எம்.ஜி.யாருக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. இருவருமே மலையாளத்தைத் தாய் மொழியாகவும், ஸ்ரீலங்காவை பிறந்த மண்ணாகவும், தமிழ் மண்ணைப் புகழ் மண்ணாகவும் கொண்டவர்கள். நடிகைகள் என்றால் சாவித்திரி பத்மினி தேவிகா என்று தமிழ் ரசிகர்களிடம் ஒரு இஷ்ட லிஸ்ட் உண்டு. அந்த லிஸ்டில் சுஜாதா மிக எளிதாக நுழைந்து விட்டார். சுஜாதாவின் தந்தை ஒரு பேராசிரியர் அவர் கணவர் ஜெயகர் போன்ற சாதாரண குறிப்புகள் போதும் என்று நினைக்கிறேன்.
இந்தப் பாடலை பற்றி சொல்வதென்றால் விஸ்தாரமாக சொல்வதைத் தவிர எனக்கு வேறு வழி கிடையாது 1976ல் அன்னக்கிளி படம் வெளிவந்து சுசீலா அவர்கள் ஜானகி அம்மா அவர்களால் முற்றிலும் புறம் தள்ளப் படக் கூடிய நிலை உருவாகிக் கொண்டிருந்த நேரம். அதன் பிறகு இது போல காட்சிக்குத் தகுந்த பாடல்கள் இல்லாது போகும் காலமும் உருவாகத் தொடங்கியது. பி.சுசீலா அவர்கள் ஒரு நடிகைக்கு ஏற்றபடி பாடிய கடைசிப் பாடல் இதுவாகத்தான் இருக்க வேண்டும். எம்.எஸ்.விக்கு ஒரு பி.சுசீலா இளையராஜாவுக்கு ஒரு ஜானகி என்ற நிலை உருவாகத் தொடங்கிய காலம்.
அவள் ஒரு தொடர்கதையைப் பற்றி பலரும் பேசி முடித்திருப்பார்கள். கவிதா என்ற குடும்பத்தின் மூத்த பெண் தன் அண்ணனின் குடிப் பழக்கத்தால் வீட்டிற்காக ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து சம்பாதிக்கும் நிர்பந்தத்திற்கு ஆளாவதைச் சொன்ன படம். இதுமுற்றிலும் பெண்கள் முன்னேறப் படம் என்றோ , பென்சிந்தனையை சிறப்பாகக் கூறும் படம் என்றோ கூற மாட்டேன். இருப்பினும் ஒரு மத்தியதர வர்க்கத்தைச் சார்ந்த தன்மானமுள்ள ஒரு பெண்ணின் சில நுணுக்கமான உணர்வுகளை மிகச் சிறப்பாகச் சொல்லும் படம்.
தான் காதலித்த திலக் என்கிற காதலன் தன் தங்கையின் கரம் பிடித்து அவளுடைய வளைகாப்பிற்கு வந்திருக்கும்பொழுது கதாநாயகி பாடுவது போன்ற பாடல். இது போல ஒரு இடம் கல்யாணப் பரிசு படத்தில் இடம் பெற்றிருந்தாலும் பட்டுகோட்டையார் மற்றும் ஸ்ரீதர் இருவரும் நல்ல சந்தர்ப்பத்தை நழுவ விட்டிருப்பார்கள்.
ஒரு பாடலை இத்தனை சிறப்பானதாக இத்தனை உயிரோட்டமாக எந்த இயக்குனராவது காட்சிப் படுத்தியிருக்கிறார்களா என்றால் எனக்குத் தெரிந்து இல்லை என்றுதான் கூற வேண்டும். ஊஞ்சலில் போவது போல எம்.எஸ்.வியின் ஆயிரம் வயலின்கள் இழைய பூச்சூடல் என்பதற்கு சாட்சியாக ஸ்ரீப்ரியாவின் பின் சிகையில் பெண்களின் கரங்கள் பந்து பந்தாகப் பூவை வைத்துக் கொண்டே செல்ல கூடவே பாட்டின் இறுக்கத்தையும் சோகத்தையும் அதிகப் படுத்த ஒரு ஷெனாய் வயிற்றைப் பிசையும் வண்ணம் ஒலிக்க சுஜாதா அவ்வளவு ஒயிலுடன் பாட ஆரம்பிப்பார்.
கவிஞருக்குத் தனியாக சொல்ல வேண்டுமா என்ன?
ஆடுமடி தொட்டில் இனி ஐந்து திங்கள் போனால்
அழகுமலர் அன்னை என ஆனாள். ஆதரித்தாள் தென் மதுரை மீனாள்.
என்று களை கட்டும் சரணத்துடன் பாடல் தொடங்கும். மீனாள் என்ற பெயர் நகரத்தாருக்கென்றே உரிய பெயர். தென் மதுரை மீனாள் சீர் கொடுத்தாள் என்று வேறு ஒரு பாடலில் கவிஞர் பாடுவார்.
தேடுதடி என் விழிகள் செல்லக் கிளி ஒன்று
சிந்தையிலே நான் வளர்த்தக் கன்று-உன் வயிற்றில் பூத்ததடி இன்று.
இது இயக்குனரின் காட்சிக்காக எழுதப் பட்ட பாடலா? இல்லை கவிஞரின் பாடல் வரிகளை இயக்குனர் காட்சிப் படுத்தினாரா என்று தெரியாது. தேடுதடி என் விழிகள் செல்லக் கிளி ஒன்று சிந்தையிலே நான் வளர்த்தக் கன்று என்று சுசீலா ஒரு சோக பாவத்தில் ஒரு இழை இழைத்துப் பாடியிருப்பார்.. பாடல் குரல் காட்சி மூன்றும் உச்சத்தை அடையும்.
மந்திரத்தில் மயங்குகிறாள் சந்தனத்தைப் பூசு
மல்லிகைப் பூ விசிறி கொண்டு வீசு –அவள்
மணவாளன் கதைகளையே பேசு.
என்ன அற்புதமாக கவிஞருக்கு வார்த்தைகள் வந்து விழுகின்றன. சுசீலாவும் அந்த FLOW மாறாமல் பாடியிருப்பார்.
வெற்றிமகள் கையிரண்டை பற்றி விட்டான் திருடன்
நெற்றியிலும் திலகம் இட்டான் நீராடும் கண்ணன்-ஒரு
நெஞ்சினிலும் திலகம் இட்டான் காதலிலே மன்னன்.
இதில் வெற்றிமகள் கையிரண்டைப் பற்றி விட்டான் திருடன் என்று சுசீலா ஒரு சின்ன மௌன இடைவெளி விடுவார். அவருடைய மௌனம் கூட அந்த கட்சியில் ஆயிரம் அர்த்தம் சொல்லும். வெற்றிமகள் என்றது தன்னை முந்திக் கொண்டு தங்கை தன் காதலனைக் கரம் பிடித்தது. திருடன் என்று சொன்னது அக்காவுடன் காதல் புரிந்து சந்தர்ப்பம் பார்த்து தங்கையை மணந்து கொண்டக் காதலனைக் கூறியது. நெற்றியில் திலகம் இட்டது ஒரு விதவைப் பெண்ணிற்கு வாழ்வளித்தது. நெஞ்சில் திலகம் இட்டது அவனுடைய அந்த நல்லதனமைக்கு காதலி கொடுக்கும் அங்கீகாரம். நான் முற்றிலும் கண்ணதாசனின் திறமையைக் கண்டு மிரண்டு போன பாடல் இது. சுசீலா கவிஞரின் வரிகளுக்கு உயிர் கொடுத்திருப்பார்.
காட்சி மாறுகிறது.கவிதா தன் காதலனுடன் ஆடிப்பாடிய இடங்கள் அவன் வீடு என்று மீண்டும் அந்த இடத்திற்குத் தன் காதலனைத் தங்கையின் கணவனாகக் காண வருகிராள். இங்கே எம்.எஸ்.விஸ்வநாதன் ஷெனாய் இசை மூலம் அந்த சோகத்தை கண் முன் நிறுத்துவார்.
கண்ணம்மா என்றைழைக்கும் பாரதியின் பாட்டு
கண் எதிரே நீ எனக்குக் காட்டு
பிற்கால பாலச்சந்தர் படங்களில் பாரதியார் ஒரு பிரதான அம்சமாக கட்சிப் படுத்தப் பட்டிருப்பார். ஆனால் இந்தப் படத்தில் எங்கும் பாரதியாரின் புதுமைப்பெண் குறித்து வராது எனினும் இந்த மொத்த கவிதாவின் பாத்திரமே ஒரு பாரதி கண்ட புதுமைப் பெண் என்றால் மிகை இல்லை. இருப்பினும் இந்தக் கண்ணம்மா என்றழைக்கும் பாரதியின் பாட்டு வரிகள் இயல்பாக கவிஞருக்கு வந்ததா இல்லை இயக்குனர் கேட்டு வாங்கினாரா தெரியாது.
அடுத்த வரிகளும் அதில் மொத்தக் கதையையும் சொன்ன கவிஞரின் திறமையையும், அதை காட்சிப் படுத்திய இயக்குனரின் திறமையையும், பாடலின் கனத்தைத் தன் குரலில் கொண்டு வந்த சுசீலாவின் திறமையையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும். படத்தோடு ஒன்றுபவர்கள் தங்கள் வாழ்க்கையையும் ஒரு கவிதாவோடு ஒப்பிட்டுக் கண் கலங்காமல் இருப்பது கடினம்.
இப்பொழுது கூட இந்தப் பாடலின் ஆரம்ப வரியைக் கேட்டதும் எனக்கு இது போன்ற சமூக நிர்பந்தங்களுக்காக முதிர் கன்னிகளாக வலம் வரும் பெண்களுக்காக ஒரு முறை கலங்கி நிற்கும்—பிரபாகர் சர்மா அவர்களுக்கு நன்றி .


