ஒரு பிரமிப்பை ஏற்படுத்திய படம் அடிமைப்பெண்
சினிமா
1969ல்தான் தங்க சுரங்கம், அடிமைப்பெண், நம்நாடு, மற்றும் சிவந்த மண் ஆகிய எம்ஜிஆர்,சிவாஜி ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்கள் வெளியானது. இதில் தங்க சுரங்கம் மார்ச் மாதம் 28ம்தேதி சார்லஸ் திரையரங்கில் வெளியாகி 18 நாளில் படம் தூக்கப்பட்டது. சிவாஜி ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது. சிவாஜி ரசிகர்களால். ரொம்பபில்ட் அப் கொடுத்த படம் தங்க சுரங்கம். அது முடிந்தவுடன் சிவாஜி ரசிகர்கள் தங்கள் ஒட்டு மொத்த கவனத்தையும் சிவந்த மண் மீது வைத்தார்கள்.்
தலைவருக்கு 1969ம ஆண்டு ஏப்ரல் வரை எந்த படமும் வெளியாகவில்லை.எம்ஜிஆருக்கு கடைசியாக வெளியான படம் 1968ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியான காதல் வாகனம். அந்த நேரம் எம்ஜிஆரின் 100வது படம் ஒளிவிளக்கு ஓடிக்கொண்டிருந்ததால் அதன் தரத்திற்கு சற்று குறைவான காதல் வாகனம் சுமாரான படமானது. ஆக நீண்ட நாட்கள் எம்ஜிஆர் ரசிகர்கள் படம் பார்க்காமல் பரிதவித்து கொண்டிருக்கும் போது வெளியான படம்தான் அடிமைப்பெண். 1969 மே 1ம் தேதி. தூத்துக்குடி பாலகிருஷ்ணா தியேட்டரில் வெளியானது.
அடிமைப்பெண்ணுடன் காவல்தெய்வம் என்ற சிவாஜி கெஸ்ட் ரோலிலும் சிவகுமார் லட்சுமி ஜோடியாக நடித்த படமும் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு முன்னால் பல தடவை இதோ வருகிறது அதோ வருகிறது என்று பலமுறை தேதி அறிவித்து விளம்பரங்கள் வந்தது.
ஆனால் அந்த நேரத்தில் உள்ளாட்சி தேர்தல் நடக்கவிருந்ததால் அது முடிந்தவுடன் படம் வெளியாகும் என்று உறுதியான தேதியாக மே 1ம் தேதி வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டது. அன்று தொழிலாளர்கள் தினம். இப்போது போல் அப்போது விஷேசமாக கொண்டாட மாட்டார்கள் கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்கள். ஒரு 100 அல்லது 200 பேர்கள் ஒன்று சேர்ந்து அமைதியாக ஒரு ஊர்வலத்தை நடத்தி விட்டு சாயந்தரம் ஒரு மீட்டிங் நடத்துவார்கள். அவ்வளவு தான் மே தினம் முடிவடைந்து விடும்.
ஆனால் 1969 மே தினம் எம்ஜிஆர் ரசிகர்களால் வெகு விமரிசையாக அடிமைப்பெண் வெளியான திரையரங்குகளில் கொண்டாடப்பட்டது. ரசிகர்களும் உள்ளாட்சி தேர்தலை விட அடிமைப்பெண் வெளியாகும் தேதியைத்தான் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தார்கள். எனவே ஆரம்ப காட்சி அடிமைப்பெண் பார்ப்பதென்பது கனவிலும் நினைத்து பார்க்க முடியாத ஒன்று என்று தெரிந்து விட்டது. இனி என்ன செய்வது என்று தெரியவில்லை.
அதற்காக எம்ஜிஆர் ரசிகர்கள் மீனவர்கள் பலருடன் பழகியிருந்ததால் அவர்களிடம் நீங்கள் போகும் போது என்னையும் கூட்டிச் செல்லுங்கள் என்று கேட்டிருந்தேன். அவர்களும் உறுதியாக கூட்டிச் செல்கிறேன் என்று சொல்லியிருந்தார்கள். மீனவ நண்பர்கள் ரொம்ப பலசாலிகள் நாட்டு படகு பணி நிறைவடைந்தவுடன் கடலிலே செலுத்தும் போது பெரிய பெரிய வடக்கயிறுகளை கட்டி இழுக்கும் போது அவர்களின் புஜத்தை பார்த்தால் மேரு மலை போல் காட்சியளிக்கும். தரை மேல் பிறக்க வைத்தான் என்ற படகோட்டியின் பாடல்தான் அவர்களின் சமூக பாடலாக மாறிப்போனது. இன்று வரை அது தொடரந்து கொண்டுதான் இருக்கிறது. தலைவருக்காக தன் இன்னுயிரையும் மனமுவந்து தருவார்கள். அவர்கள் கூட்டத்தில் நின்று விட்டால் யாரும் அவர்களை தாண்டி செல்ல முடியாது. அவர்கள் என்னை நடுவில் நிற்க வைத்து கொண்டு சுற்றி நின்று கொண்டார்கள். ஆனால் கவுண்டர் திறந்தவுடன் அத்தனை பேரும் முண்டியடித்துக் கொண்டு முன்னேறும் போது எனக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு விட்டது.. நான் மூச்சு திணறுவது கண்டு அவர்கள் தம்பி நீ முதலில் போய்விடு என்று அனைவரையும் அணை போட்டு தடுத்தது போல தடுத்து என்னை உள்ளே அனுப்பி விட்டார்கள். எனக்கு மூச்சு நின்று திரும்பி வந்தது போல இருந்தது.
ஒருவழியாக தியேட்டருக்குள்ளே சென்று அவர்கள் கூடவே இருந்து படத்தை பார்த்தேன். படம் பார்த்ததை விட ரசிகர்களின் ஆரவாரத்தை கண்டு களித்தேன் என்று தான் சொல்ல வேண்டும்.. வசனத்தையோ பாடல்களையோ எதையுமே என்னால் கேட்கவோ பார்க்கவோ முடியவில்லை. ரசிகர்களின் ஆரவாரம் தியேட்டரை தாண்டி ரோடு வரை ஆக்கிரமித்தது. ஒரே ஆட்டம்,விசில் சத்தம் என்று பயங்கரமாக இருந்தது. அந்த சத்தத்தில் அசோகனின் குரல் கூட எடுபடவில்லை. படம் ஒன்றுமே புரியாமல் மீண்டும் அடுத்த காட்சி பார்க்க முயற்சி செய்தும் பார்க்க முடியாமல் இரவுக்காட்சிக்கு நண்பர்கள் பிளாக்கில் எனக்கும் சேர்த்து டிக்கெட் வாங்கியிருந்தார்கள்.
2வது முறையாக பார்த்தும் திருப்தி ஏற்படாததால் கிட்டத்தட்ட 14 முறை பார்த்தேன். அப்படி ஒரு பிரமிப்பை ஏற்படுத்திய படம் அடிமைப்பெண். ஓபனிங் காட்சியில் ஒற்றை காலில் சண்டை செய்யும் போதே தலைவரின் புதுமையான சிந்தனை வெளிப்பட்டது. ஒவ்வொரு காட்சியிலும் ஒரு பிரமாண்டம், புதுமை என்று படம் பார்ப்பவர்களை பிரமிக்க வைத்தது.குறிப்பாக ஜெய்ப்பூர் அரண்மனை, பாலைவனத்தில் ஒட்டகம் சுற்றி வளைக்கும் காட்சி,சிங்க சண்டை என்று ரசிகர்கள் ஆனந்த தாண்டவம் ஆடினார்கள் இப்போது உள்ளது போல் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் காட்சிகள் இல்லாமல் ஒரிஜினலாகவே தலைவர் சிரமப்பட்டு எடுத்திருப்பார். இப்போது வந்த பாகுபலி போன்ற படங்கள் சிஜி வேலைக்காக பல நூறு கோடிகள் செலவு செய்து விட்டு ஆஹா பிரமாண்டம் என்று கூறும்போது தலைவரின் தொழில் நுட்ப திறமையை யாரும் பாராட்டாமல் இருக்க முடியாது.
அந்த வருடம் மே மாத லீவுக்கு மக்கள் ஊருக்கு போவதை நிறுத்தி விட்டு குடும்பத்தோடு அடிமைப்பெண்ணை கண்டு ரசித்தார்கள்.50 நாட்களில் சனி,ஞாயிறு காலை காட்சி செவ்வாய்,வெள்ளி மாட்னி ஷோ தவிர மற்ற அனைத்து காட்சிகளும் கிட்டத்தட்ட அரங்கம் நிறைந்தே ஓடியது. 50 நாட்களில் மட்டும் ரூபாய் 78678.23வசூலாக கொட்டியது. 100 நாட்களில்ரூபாய் 105816.13. வசூலாக கலெக்ட் செய்து ஒரு மாபெரும் சாதனையை உண்டாக்கியது.
இனிமேல் இதுபோல் ஆகக்கூடாது என்பதற்காக எம்ஜிஆர் மன்றத்தில் சேர்ந்தால் ஓபனிங் ஷோ டிக்கெட் வாங்கி கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டதால் நடிகப் பேரரசர் எம்ஜிஆர் கலைக்குழுவில் உறுப்பினராக சேர்ந்தேன். இப்போது உள்ளது போல் ரசிகர் ஷோ வெல்லாம் தரமாட்டார்கள். எத்தனை பேருக்கு டிக்கெட் வேண்டும் என்று கேட்டு எம்ஜிஆர் மன்றத்தினர் டிக்கெட்டுகளை வாங்கி மன்ற உறுப்பினர்களுக்கு கொடுப்பார்கள்.
நம்நாடு படத்திலிருந்து மன்றத்தின் மூலமாக தள்ளு முள்ளு இல்லாமல் டிக்கெட் பெற்றாலும் தியேட்டருக்குள் நுழைந்து செல்வதும் ஒரு கஷ்டமான விஷயம்தான். இதை எல்லாம் தாண்டி நடிகப் பேரரசர் எம்ஜிஆர் படம் பார்ப்பதே தீபாவளி சிறப்பாக கொண்டாடியதை போலதான்.
மீண்டும் அடுத்த பதிவில்.
நன்றி நடிகப் பேரரசர் கலைக்குழு...























