வலது கை கதவில் இருக்க இடது கை ஸ்டியரிங் பிடிக்க அநாயசமான டிரைவிங்!
சினிமா
அது 1981, மே மாதம் தேதி 3.மதியம் சாப்பாட்டை முடித்து கொஞ்சம் ரெஸ்ட்!.. நாலு மணிவாக்கில் போலாம்பா!..வீட்டு முன்பு நிறுத்தப்பட்டிருந்த காருக்குள் தேவையான சாமான்கள் ஏற்றப்படுகிறது.தனது மகனை துணைக்கழைத்துக்கொண்டு காரில் ஏறுகிறார் அந்தப் பெண்மணி!..ஏறுவதற்கு முன்பாக அந்த வீட்டை ஒரு முறை பார்த்துக்கொள்கிறார்.தான் இனிமேல் இங்கே திரும்பப்போவதில்லை என்பதை உள்ளுணர்வு சொன்னதோ என்னவோ !..தீர்க்கமான பார்வை!.. ஒரு ஏக்கப் பெருமூச்சு!..ஏறும்மா!.. பையன் குரல்!.. ஏறும்போது ஒரு தடுமாற்றம்!.. இவனுக்காகத் தான் இந்தப் பயணம்.இருக்கிற கொஞ்ச நஞ்ச காலத்தில் எப்படியாவது இவனுக்கொரு வாழ்க்கையை அமைத்துத் தரணும்!.. அந்தத் தாயின் கடைசி ஆசை அது தான்.அந்தத் தாயின் பெயர் சாவித்திரி என்கிறது திரையுலக வரலாறு.எஸ்!.. நமது நடிகையர் திலகம் தான்.!..அவரது பிறந்த தினத்தை கொண்டாடச் சொல்கிறது நமது இசைக் குழு!..
அன்றைய உச்ச நட்சத்திரம் அமிதாப்பிடம் நிருபர் கேட்டார்.இந்தியாவின் அழகு முகங்களை பட்டியலிட முடியுமா?. அந்தப் பட்டியலில் சாவித்திரி இருந்தார்.சௌத்தில் அவர் ஒருவரைத் தான் சொன்னார் அந்த உயர்ந்த மனிதர்.இன்று அந்த அழகு முகத்தை கொஞ்சம் நினைவு கூறச் சொல்கிறது நமது குழு.81 ல் ஆறாத காயா கன்னடப் படத்தின் அவுட்டோர் போக ஆயத்தமான கதையைத் தான் நாம் ஆரம்பத்தில் கண்டோம்.அது தான் சாவித்திரி கடைசியாக சென்னையை கண்ணாறக் கண்டது.அதே மே 11 ல் தான் அவர் மைசூரில் மயங்கி விழுந்தார்.மகன் சதீஷூக்கு ஏதுமறியாத வயது.அவனுக்காகத் தான் மீண்டும் ஒரு ரவுண்டு வர தீர்மானித்தார்.பெங்களூர் ஆஸ்பத்திரி பெட்டில் கிடந்தார்.கடைசியில் சென்னை லேடி வெலிங்கடனில் கந்தையாகக் கிடந்த சாவித்திரியை ஏற்கனவே ஒரு முறை நாம் சொல்லியிருக்கிறோம்.
அன்றைய காலங்களில் சாவித்திரியின் M S Z 444 சாலையில் பறக்கும்போது பார்த்து வியக்காதவர் குறைவு.தளதள முகத்தில் ஒரு கூலிங் கிளாஸ்.வலது கை கதவில் இருக்க இடது கை ஸ்டியரிங் பிடிக்க அநாயசமான டிரைவிங்!..ஜெமினி மாமாவிற்கு சற்றும் குறையாத ஸ்பீடு!..கடல் போல பங்களா!..கலைஞர்கள் பொறாமைப்பட்ட அந்த அபிபுல்லா சாலை வீட்டை பார்த்துப் பார்த்து கட்டிய சாவித்திரி!..அதே பங்களாவை ஒரு மார்வாடியிடம் ஒப்படைக்கும்போது கலங்காமல் நின்ற சாவித்திரியை இந்த கலையுலகம் கண்டது. தமிழ் தெலுங்கு என ரெக்கை கட்டிப் பறந்த சாவித்திரி!..லட்ச லட்சமாக சம்பாதித்த சாவித்திரி!..வருமான வரித் துறை நிலுவையை ஒரு கட்டத்தில் கட்ட முடியாமல் போனது பலருக்கும் பாடமானது.அவரது திரை வாழ்க்கையில் எவ்வளவோ பார்த்துவிட்டார்.கடைசியாக அவர் மேடையேறியபோது இதையே தான் சொன்னார்.
தென்னிந்திய நடிகர் சங்கம் அந்தத் திலகத்திற்கு கலைச் செல்வம் விருது கொடுத்தது.விழாவிற்கு வரக் கூடிய சூழலில் அன்று அவர் இல்லை!..வரமாட்டார் என விழாக் குழுவும் முடிவு செய்திருந்த நேரத்தில் அரங்கினுள் நுழைந்தார்.மேடையேறி பேச அழைக்க மைக் பிடித்த சாவித்திரி சக கலைஞர்களுக்கு தனது வாழ்க்கையைத் தான் சொன்னார்.இந்த விழாவிற்கு வர வேண்டாம் என்று தான் இருந்தேன்.உடனுள்ள கலைஞர்கள் எனது வாழ்க்கையைப் பார்த்து தங்களது வாழ்க்கையை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதை சொல்லத் தான் இங்கு வந்தேன்.நான் யாரையும் குறை சொல்ல விரும்பவில்லை!..எனது நிலைக்கு முழுக்க முழுக்க நான் தான் காரணம்.என்னைப் போல யாரும் வாழ்ந்துவிடாதீர்கள்!..யாரையும் நம்புவதற்கு முன்பாக பல முறை யோசியுங்கள்!..இந்த நேரத்தில் உங்களிடம் வேண்டுவது இதைத் தான்.மொத்த கூட்டமும் சோகமானது.காரணம் அவரை அண்ணாந்து பார்த்த கூட்டமது.அவரது ஒவ்வொரு அசைவுகளையும் ஆச்சர்யத்தோடு பார்த்த கூட்டமது.இப்படியொரு நடிப்புத் திறமையா? .
ஐம்பது அறுபதுகளில் தென்னிந்தியா முழுவதும் கொண்டாடிய நடிகை!..அவரது திரை வாழ்க்கை நமக்கெல்லாம் அத்துபடி.தெலுங்கை தாய் மொழியாகக் கொண்டாலும் தமிழகத்தின் ஒவ்வொரு குடும்பமும் அவரைக் கொண்டாடியது.பெரியப்பா சௌத்ரி கையைப் பிடித்து அவர் சென்னைக்கு வந்தபோது எதுவுமே தெரியாது.தெரிந்ததெல்லாம் குச்சுபுடி தான்.அந்த நடனத்தின் நெளிவு சுளிவுகள் தான் அந்த பரந்த முகத்தில் வெளிப்பட்டது.ஆந்திரா தான் அவரது கலையுலக வாழ்க்கையின் ஆரம்பம்.ஜக்கையாவுடன் இணைந்து பல மேடைகளில் ஆடியிருக்கிறார்.அவரது அபிநயம் கண்டு ஆச்சர்யப்பட்டவர்களில் பிருதிவி ராஜ்கபூரும் ஒருவர்.இந்தப் பெண்ணின் கண்களை திரையுலகம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.தலைமையேற்ற பிருதிவியின் வார்த்தை தான் சாவித்திரியை சினிமாவிற்கு கொண்டு வந்தது.தந்தை சிறு வயதிலேயே இறந்ததால் அந்தக் குடும்பத்தை பெரியப்பா சௌத்ரி தான் கவனித்து வந்தார்.
சினிமா சம்பந்தப்பட்ட கம்பெனியில் தான் அவர் பணியாற்றிக்கொண்டிருந்தார்.பிருதிவி சுருதி ஏற்றி விட சௌத்ரி கோடம்பாக்கம் வந்தார்.வாசனின் ஜெமினி சென்றார்.நிராகரிக்கப்பட்டார்.எல்.வி.யைச் சந்தித்தார்.சம்சாரத்தில் ஒரு சின்ன ரோல் தந்தார்.நாகிரெட்டி கூப்பிட்டு பாதாள பைரவியில் ஆடவிட்டார்.ரசிகர்கள் கவனிக்கத் தொடங்கியது அங்கு தான்.வந்த வேஷமெல்லாம் துக்கடா வேஷங்கள்.பெரிய பிரேக் தந்தது வினோதாவின் தேவதாஸ் தான்.வேதாந்தம் ராகவைய்யா ஆரம்பத்தில் கொரியோகிராபர்.சாவித்திரியின் அபிநயம் அவரைக் கவர பார்வதி பாத்திரத்திற்கு சரியாக இருப்பார்.தேவதாஸூம் ஓகே சொல்ல அந்தப் படம் பட்டையைக் கிளப்ப சட்டென சூடு பிடித்தது சாவித்திரியின் திரை வாழ்க்கை.அவர் தமிழுக்கு அறிமுகமானபோது வயது வெறும் பதினைந்து தான்.ஜெமினியை சந்தித்தது மனம் போல் மாங்கல்யம் செட்டில் தான்.புல்லையா தான் அந்த இளைஞரை சாவித்திரிக்கு அறிமுகம் செய்து வைத்தார்.ஒரு சின்ன ஹலோவோடு கடந்துபோன இளைஞரை ஆச்சர்யத்தோடு பார்த்தது தான் அவரது வாழ்க்கையை மாற்றிப்போட்டது.
ஆரம்பத்தில் தமிழ் அவருக்கு அவ்வளவாக வராது.ஆங்காங்கே அடித்தல் திருத்தல்களில் ஆர்வம் காட்டியது ஜெமினி தான்.மொழிகளில் ஆரம்பித்தது விழிகளில் கொண்டு போய்விட்டது.மனம் போல் மாங்கல்யம் வளர்ந்த வேகத்தில் காதலும் வளர்ந்தது.அதுவே கொட்டும் மழையில் வீட்டை விட்டு வெளியேற வைத்தது.அந்த அடை மழையிலும் ஜெமினி வீட்டுக் கதவைத் தட்ட வைத்தது.மனைவி அலமேலு அந்தப் பெண்ணை வீட்டிற்குள் அனுமதித்த வரலாறும் நடந்தது.தமிழுக்கு ஒரு அருமையான ஜோடி கிடைத்தது.சாவித்திரிக்கு அட்டகாசமான பாத்திரங்கள் கிடைத்தன.கிடைத்த பாத்திரங்களோடு அவர் வாழ்ந்தார் என்றே சொல்ல வேண்டும். ஐம்பதுகளின் இறுதியில் அவர் தவிர்க்க முடியாத சக்தியாக விளங்கினார்.மாடர்ன் தியேட்டர்ஸின் பல படங்களில் அவர் இருந்தார்.தெலுங்கு தயாரிப்பாளர்கள் அவரை ஓய்வெடுக்கவிடவில்லை.தமிழை விட தெலுங்கில் பரபரப்பானார்.சின்ன வேஷம் தந்த எல்.வி.தான் பிற்காலத்தில் அவருக்கு அழுத்தமான பாத்திரங்கள் தந்தார்.மிஸ்ஸியம்மா இரு மொழிகளிலும் அவரைக் கொண்டாடியது.பாடல்கள் படு ஹிட்டானது.அறுபதுகளில் தமிழில் அருமையான படங்கள் கிடைத்தன.மற்ற நடிகைகளிடம் கிட்டாத நடிப்பு சாவித்திரியிடம் கிடைத்தது.
நடிகையர் திலகம் காலத்தில் அவருக்கு வாய்த்த இயக்குநர்கள் திறமையானவர்கள்.இவரிடம் எதையெல்லாம் எப்படியெல்லாம் பெற வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தவர்கள்.காட்சிகளை விளக்கும்போதே தனக்குத் தேவையானதை சாவித்திரி எடுத்துக்கொள்வார்.பீம்சிங் அவரை அருமையாக பயன்படுத்தினார்.பாசமலர் க்ளைமாக்ஸை அவர் விளக்கியபோதே நடிகர் திலகம் உஷாராகிவிட்டார்.சாவித்திரி சீரியஸாகியதை அவர் கவனித்தார்.எப்போதுமே அழுத்தமான காட்சிகள் எடுக்கும்போது சாவித்திரி வழக்கமான ஜாலி மூடிலிருந்து சீரியஸாகிவிடுவார்.செட்டில் நுழையும்போதே அது தெரியும்.அவரிடம் யாரும் அதிகமாக நெருங்கமாட்டார்கள்.நடிகர் திலகத்தின் அதே அடிச்சுவடை அவரும் பின்பற்றினார்.இந்த பாசமலருக்காக இருவரும் தங்களது உடலையே வருத்திக்கொண்டார்கள்.உண்மையாகவே இருவரது உடல் மொழியும் மாறிப்போனது.பீம்சிங் கேமிராவை ஓட விட இருவருமே தங்களை மறக்க இன்று கூட அந்தக் க்ளைமாக்ஸைப் பார்த்து நம்மால் கண் கலங்காமல் இருக்க முடியாது.அதே போன்றதொரு க்ளைமாக்ஸை கே.எஸ்.ஜி.கை கொடுத்த தெய்வத்தில் தந்திருப்பார்.நீண்ட க்ளைமாக்ஸ். ஒரு பக்கம் ரங்காராவ் மறுபக்கம் நடிகர் திலகம்.இடையில் நின்று சாவித்திரி வெளிப்படுத்திய பெர்ஃபாமன்ஸ் அப்படியே தத்ரூபமாக இருக்கும்.கலகலப்பான காட்சிகளா? . கலங்கடிக்கும் காட்சிகளா?. அந்தக் கண்கள் இரண்டையும் அட்டகாசமாக வெளிப்படுத்தும்.அவரது பாடல்களில் இந்தக் கண்கள் ஓராயிரம் கதைகளை நமக்குச் சொல்லும்.
ஆனாக்க அந்த மடம் ஆ..காட்டி சந்தை மடம் பாடலில் அநாயசமாக நடித்திருப்பார்.பணம் படைத்த மனிதரைப் போல் பஞ்சு மெத்தை நாம் பெறுவோம்.மாடி மனை வீடு கட்டி வாழ்ந்திருப்போமே!.. அப்படியொரு உற்சாகம்.செக்கச் சிவந்த இதழாலே சிந்தும் புன்னகை மந்திரமோ?. இதழோரம் ஒரு இழுப்பு.மஞ்சள் குங்குமம் மலர் கொண்டாள் மனதையும் சேர்த்து ஏன் கொண்டாள் எனும்போது ஒரு ஏக்கம்.சிறகில் எனை மூடி அருமை மகள் போலே வளர்த்த கதை சொல்லவா?. அப்படியே கண்ணில் நீர் முட்ட கனவில் நினையாத காலம் இடை வந்து பிரித்த கதை சொல்லவா!.. க்ளோஸப் காட்சிகளில் நம்மையும் கலங்கடிப்பார்.ஆணா ஆவன்னா ஈனா...ஈஈஈ..என இளிக்கும் சாவித்திரி.கட்டிக்கொண்ட ஆடை ஒட்டிக்கொண்டல்லோ...ஒரு செல்ல சிணுங்கள்.மானைக் கண்ட வேளை மயக்கம் கொண்டல்லோ..ஓஓ.ஒரு சின்ன நக்கல். பாடல்களில் எப்போதுமே நம்மை வியக்க வைப்பார்.தண்ணிலவு தேனிறைக்க பாடலில் அப்படியொரு பாந்தமான பெண்ணை பார்க்கவே முடியாது.நம்ம சாவித்திரியா?. குலுங்க குலுங்க சிரித்த பெண்ணா இது?. மையேந்தும் விழியாட மலரேந்தும் குழலாட ...ஒரு ஸ்டைலில் வரும்.அதே அந்த அடியாக கண் மையேந்தும் எனும்போது அந்த மைவிழியை ஒரு சுழற்று சுழற்றுவார்.அது யாரும் சொல்லித் தராத அழகு.
சாவித்திரிக்கு எப்போதுமே அவரது உடல் சொன்னபடி கேட்காது.அதுவும் குழந்தை பெற்ற பிறகு பெண்களுக்கே சங்கடம் அந்த உடலமைப்பு தான்.அந்த மைனஸை அழகாக பேலன்ஸ் செய்த ஒரே நடிகை .அவரது முகத்திலேயே அனைவரது கவனமும் இருக்கும்படி பார்த்துக்கொள்வார்.சாவித்திரிக்கு மட்டுமே நிறைய மிட் ஷாட் க்ளோஸப் ஷாட் வைத்திருப்பார்கள்.ஏ.பி.என்.தனது படங்களில் இதை அதிகம் பயன்படுத்தியிருப்பார்.அவர் தான் கர்ப்பிணியாக இருந்தாலும் பரவாயில்லை வாங்க கந்தன் கருணைக்கு என்று அழைத்தவர்.நிறை மாத கர்ப்பத்தை அவ்வளவு அழகாக மேனேஜ் பண்ணியிருப்பார்.எந்த இயக்குநரும் அவரது உடலைப் பார்த்து அழைக்கவில்லை.நீங்க வாங்கம்மா!..அரண்மனை அறிவான்...ஆஆஆ..அரியணை அறிவான்.அந்த புரமொன்று இருப்பதை அறியான்...நாங்க எடுத்துக்கொள்கிறோம்.மனைவியின் வழக்கை மனதிலும் நினையான்...போதும்மா...அழகாக வெளிப்படும் அந்த ஏக்கம்...காதலி தான் மனைவி என்று கூறடா கண்ணா!..அன்று கண்ணை மூடி கொண்டிருந்தார் ஏனடா கண்ணா?. விழிகளில் விடை தேடும் லாவகம்.கண்களின் வார்த்தைகள் புரியாதோ?. காத்திருப்பேன் என்று தெரியாதோ? . காத்திருந்த காதலியின் கடுப்பு அந்த கண்களில் தெரியும்.பாவலர் தமிழின் பண்பான காதல் மௌனக் கலையன்றோ!..செந்தமிழ் தேவனே சீலா...விண்ணோர் சிறை மீட்டு குறை தீர்த்த வே. ..லா..அந்த சிங்கார வேலன் சந்நிதியில் அப்படியொரு பெர்ஃபாமன்ஸ்.
இசையரசி ஓரிடத்தில் செமையாக ஏமாந்திருப்பார்.பாடல் பதிவாகி ஓகேயாகியும் அவருக்கு அது ஒரு குறை!..திரையில் பாடல் ஓடுகிறது.கோ..மாதா..எங்கள் குலமாதா...கடினமான சங்கதிகளுக்கு சாவித்திரி அட்டகாசம் செய்கிறார்.குறையான அந்த இடம் வருகிறது.அநாயசமாக அந்த இடத்தை பேலன்ஸ் செய்து குறையை நிறையாக்கி என்னைக் காப்பாற்றினார் அந்தம்மா என பூரிக்கிறார் அந்த இசை தேவதை!..அதனால் தான் எனது பாடலுக்கு உயிரூட்டிய நடிகைகளில் முதன்மையானவர் சாவித்திரி என்றார் இசையரசி.கண் மூடும் வேளையிலும் கலை என்ன கலையே! ..மின்னாமல் முழங்காமல் வருகின்ற மழை போல்...அந்த அபிநயத்தில் நம்மை கிறங்கடிப்பார்.ஓடம் நதியினிலே ஒருத்தி மட்டும் கரையினிலே.பாடாமலேயே நம்மை கலங்கடிப்பார்.அத்தை மகனே போய் வரவா...நம்மை கிறங்கடிப்பார்.ஒவ்வொரு பாடலிலும் ஏதோ ஒரு வித்தை காட்டியிருப்பார்.நீலச் சேலை கட்டிக் கொண்ட சமுத்திரப் பொண்ணை இப்போது தான் பார்த்தோம்.கற்பகத்தில் வந்த பக்கத்து வீட்டு பருவ மச்சானை மறக்க முடியுமா?. பரிசில் வந்த அந்த அஞ்சு ரூபாயைத் தான் மறக்க முடியுமா?. வேட்டைக்காரனில் வந்த கூந்தல் கருப்பு குங்குமம் சிவப்பின் கிறங்கடிக்கும் முக பாவனைகளை மறக்க முடியுமா?. ஏகப்பட்ட பாடல்கள்.ப்ராப்தம் பாடலைப் போல் இளமையை ரசிப்பது சுகமோ?. புதுமையை ரசிப்பது சுகமோ?. செந்தூரம் சிவக்கும் சிங்கார முகத்தை முந்தானை துடைப்பது சுகம் தானோ?. சொந்தம் எப்போதும் தொடர்கதை தான் முடிவே இல்லாதது.அந்த சொந்தங்களே சுமையாகிப் போன வரலாறு.ஆளுக்கொரு பக்கம் அவரது சொத்துக்களை பிய்த்துக்கொண்டு போன சொந்தங்கள்.நட்டாற்றில் தவிக்க விட்டு நலிந்து மெலிந்த அந்த அவஸ்தை நிலையை விவரமாகச் சொல்ல மனம் வரவில்லை!.அழகான அந்த முகம் மட்டுமே போதும். நடிகையர் திலகம் நமது சொந்தம்.எப்போதும் நம்முடன் உறவாடிக்கொண்டிருக்கும் இனிய உறவு.இந்த இசைக் குடும்பத்தின் மறக்க முடியாத முகம்.பிறந்த நாளை வாழ்த்தி நினைவு கூறுகிறோம் அந்த இனிய மகளை!..
Abdul Samath Fayaz





















