இப்போதெல்லாம் திரைப்படங்களில் வரும் சண்டைக் காட்சிகளை பார்த்தாலே நமக்கு இதயம் வெடித்தது போலிருக்கிறது. ய்ய்யா.... ஹூ..... என்று கத்திக் கொண்டே எகிறிக் குதித்து எதிராளியின் நெஞ்சில் பட்டாக் கத்தியை சொருகும் பயங்கரங்களை எல்லாம் சென்சாரில் எப்படி அனுமதிக்கிறார்கள் என்றே தெரியவில்லை. இதைவிட மோசமான கொடூரங்களும் காட்டப்படுகின்றன. அதையும் விட கொடுமை. படப்பிடிப்பின்போது ஸ்டண்ட் கலைஞர்கள் நிஜமாகவே அடிபடுவதும், உயிரிழப்பதும். படப்பிடிப்பில் கிரேன் அறுந்துவிழுந்து தொழிலாளிகள் சாவு என்றெல்லாம் செய்திகள் கண்டுள்ளோம். பாவம்... அந்த சாதாரண கலைஞர்களும் மனிதர்கள்தானே..
மக்கள் திலகம் தான் நடிக்கும் படங்களில் தனது பாதுகாப்பு மட்டுமின்றி ஸ்டண்ட் கலைஞர்களின் பாதுகாப்பு, தொழிலாளர்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிப்பார். படப்பிடிப்பு தொடங்கும் முன் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்ப்பார். இதெல்லாம் அவருக்கு அவசியமே இல்லை. இருந்தாலும் மற்றவர்கள் நலனில் அவர் கொண்டுள்ள அக்கறைதான் இதற்கு காரணம். சண்டைக் காட்சிகளின்போது உடன் நடிப்பவர்களுக்கு அடிபட்டு விடக் கூடாது என்பதில் கவனமாக இருப்பார். அவரிடம் எப்போதும் முதலுதவிப் பெட்டி இருக்கும். யாருக்காவது சிறிய காயங்கள், உடல் நலக் குறைவு என்றால் தக்க மருந்துகளை எடுத்துக் கொடுப்பார். இபோதெல்லாம் 'பெப்சி' என்கிறார்கள். திரைத்துறையில் தொழிலாளர்களுக்கு உரிமைகள் இல்லாத காலத்தில் மக்கள் திலகத்தின் முயற்சியால் ஸ்டண்ட் நடிகர்கள் யூனியன் அமைக்கப்பட்டது.
மக்கள் திலகத்தின் சண்டைக் காட்சிகளில் வன்முறை இருக்காது. எதிரிகளை சமாளிப்பதில் சாதுர்யத்தை அதிகம் பயன்படுத்துவார். அது ரசிக்கும்படி இருக்கும். சிரித்து வாழ வேண்டும் படத்தில் அருமையான சண்டைக் காட்சி. குளியலறையில் கதவின் கைப்பிடி அசைவதைப் பார்த்து மெள்ள சென்று வேகமாக கதவைத் திறப்பார். அப்படித் திறந்த வேகத்தில் முதல் நபர் உள்ளே வந்து விழுவார். அதே ஸ்ட்ரோக்கில் கதவை தலைவர் வேகமாக மூட, பின்னால் வந்த ஜஸ்டினுக்கும் கதவில் அடி. மேலேயே கை வைக்காமல் இருவருக்கும் அடிவிழும். டாப் ஆங்கிளில் கேமரா இருக்க, மக்கள் திலகத்தின் இடுப்பை பின்னால் இருந்து ஜஸ்டின் சுற்றி வளைக்க, மக்கள் திலகம் இரு கால்களையும் மேலே தூக்கி வீசி (டாப் ஆங்கிளில் அவர் கால்கள் மேலேயும் முகம் கீழேயும் தெரியும்) சுவற்றில் உதைத்து முழு உடல் எடையையும் ஜஸ்டின் மீது போட்டு அவரை கீழே சாய்த்து அவர் மேல் இவர் விழுவார். (சுவற்றில் உதைத்து எழும்பி அடிப்பதை பின்னர் பல படங்களில் விஜயகாந்த் செய்தார்) இந்தக் காட்சியில் அந்த வயதில் மக்கள் திலகம் டூப் இல்லாமல் நடித்திருப்பார். சந்தேகம் இருந்தால் யூடியூபில் பார்க்கலாம். சுறுசுறுப்பு, சரியான திட்டமிடல், அதை நிறைவேற்றும் உழைப்பு, தனக்கு மட்டுமின்றி, உடன் நடிப்பவர்களின் பாதுகாப்பிலும் அக்கறை, டைமிங் சென்ஸ் இவற்றை ஒன்றாகச் சேர்த்தால் .... மக்கள் திலகம்!
Aeyam


