TamilsGuide

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட கொத்மலை பிரதேச சபைக்குட்பட்ட மக்களை சந்தித்த ஜீவன் தொண்டமான்

கொத்மலை பிரதேச சபைக்குட்பட்ட தவலந்தன, வேவன்டன் உள்ளிட்ட தோட்டப் பகுதிகளில் இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டு, கொத்மலை புதியநகர காமினி சிங்கள மகா வித்தியாலய கட்டிடத் தொகுதியிலும், கொத்மலை கரகஸ்த்தலாவ விஹாரையிலும், கிருஸ்த்தவ தேவாலயத்திலும் தற்காலிகமாக தங்கிவருகின்ற மக்களை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் நேரில் சென்று பார்வையிட்டார்.

தவலந்தன, வேவன்டன் உள்ளிட்ட பல்வேறு தோட்டப் பகுதிகளில் இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின்’ அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில் உலர் உணவுப் பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதிகளை வழங்கி வைத்தது மாத்திரமன்றி, பாடசாலை உடைமைகளை இழந்த மாணவர்களுக்கான அப்பியாச புத்தகங்கள் என்பன வழங்குவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டதோடு, பாதிப்புக்குள்ளான இடங்களையும் அவர் நேரடியாக பார்வையிட்டிருந்தார்.

குறிப்பாக பாதிக்கப்பட்ட தோட்டங்களுக்கு உறித்தான பெருந்தோட்ட நிறுவனமான, டம்ரோ (DAMRO) பெருந்தோட்ட நிறுவனத்துடன் நேரடியாக தொடர்புக்கொண்டு, இரவு நேரப் பாவனைக்கான மின் ஆக்கி (Generator), குடிநீர் பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதற்காக சுத்தமான குடிநீர் வழங்கும் செயற்பாடுகள் என்பன வழங்குவதற்கான மேலதிகமான உடனடி நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருந்தார்.

கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் நிலவும் கடும் காலநிலை சீர்கேடு காரணமாக பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு, மண்சரிவு உள்ளிட்ட அனர்த்தங்கள் ஏற்பட்டுள்ளன.

இதனால் பலர் தமது வீடுகளையும் உடைமைகளையும் இழந்து இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ளனர்.

மேலும் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நுவரெலியா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கொத்மலை பிரதேச சபைக்குட்பட்ட பொதுமக்களின் துயரத்தை பகிர்ந்து கொள்ளும் விதமாக ஜீவன் தொண்டமான் மேற்கொண்ட இந்த நிவாரணப் பணியில், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் கொத்மலை பிரதேச சபை உறுப்பினர்கள், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் காரியாலய உத்தியோகத்தர்கள், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உறுப்பினர்கள், அமைப்பாளர்கள் உள்ளிட்ட பலரும் இணைந்து செயல்பட்டனர்.

மேலும், கடந்த 2ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த உலர் உணவுப் பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதிகள் வழங்கும் செயற்பாடானது மலையக பிரதேச பகுதிகளில் பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் எதிர்வரும் நாட்களுக்குள் முழுமையாக வழங்கி வைக்கப்படவுள்ளதாகவும், உதவி வழங்கிய நல்லுள்ளங்களுக்கு நன்றிகளையும் தெரிவித்துக்கொள்வதாக ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
 

Leave a comment

Comment