TamilsGuide

மனித வாழ்க்கை எப்போதும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை

மனித வாழ்க்கை எப்போதும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை.அந்தக் காலத்தில் சாப்பிட வழியில்லையா?. பட்டாளத்தில் சேர்வது தான் ஒரே வழி!.. பத்தோ இருபதோ மாதம் கிடைப்பதை விட பசியாற சாப்பாடு உறுதி.அப்படித்தான் சித்தூர் ராமச்சந்திரனும் பட்டாளத்தில் சேர்ந்தார்.கலை ஆர்வம் அவரை அங்கே இருக்கவிடவில்லை.சித்தூருக்கு வந்த நாடக ட்ரூப்பில் மெல்ல எட்டிப் பார்த்தார்.அங்கே தான் அவரது ஆத்ம சகி கல்யாணிக் குட்டி இருந்தார்.தெலுங்கும் மலையாளமும் இணைய தமிழுக்கு ஒரு அருமையான நாயகி கிடைத்தார்.இன்று அவரது பிறந்தநாளை கொண்டாடுகிறது இந்த இசைக் குழு.எஸ்.!... புன்னகை அரசியின் புகழ் பாடும் தினமாக இன்று மலர்கிறது.மங்களகரமான தெய்வ நாயகி கே.ஆர்.விஜயாவானது நிறைய பேர் அறிந்தது தான்.ஆரம்பத்தில் சொன்னது தான். மனித வாழ்க்கை மாறிக்கொண்டே இருக்கும்.அப்பா ராமச்சந்திர ராவ் ஆரம்பித்து வைத்த வாழ்க்கையது.கலையுலகம் புன்னகை அரசியை ஆரத் தழுவிய வரலாறு அனைவரும் அறிந்தது தான்.

நாடகக் கோஷ்டியோடு ஊர் ஊராகச் சுற்றிய தம்பதிக்கு மூத்த பெண்ணாகப் பிறந்தவர் தான் தெய்வநாயகி.சித்தூரில் நகை பிஸினஸில் பணத்தைத் தொலைத்த ராவ் கடன் தொல்லையால் தான் பழனிக்கு வந்தார்.கையில் ஸ்திரமான தொழிலில்லை.நாடகத்தில் வருமானமில்லை.பத்து வயது மூத்த பெண்ணைப் பார்த்தார்.துறுதுறுவென அழகாகத் தான் இருந்தாள்.நாடக இடைவேளையில் மேடையில் ஆடவிட்டார்.அந்தக் கால ஹிட்டான பாடல்களுக்கு சாவித்திரியாக சரோஜா தேவியாக ஆடிப் பாட அப்ளாஸ் அள்ளியது அந்தச் சின்னப் பெண்.அங்கு தான் தெய்வ நாயகிக்கு ஸ்டேஜ் பயம் போனது.கே.பி.தங்கமணி ட்ரூப்பில் நடிக்கும் வாய்ப்பும் இந்தப் பெண்ணுக்குக் கிடைத்தது.அந்தக் கால எஸ்.எம்.குமரேசன் மற்றும் விருதை ராமசாமி மேடைகளிலும் தெய்வ நாயகி இருந்தார்.அந்தக் காலத்தில் அரசு பொருட்காட்சி எங்கே நடந்தாலும் அங்கே தெய்வநாயகியின் ஆட்டத்தைப் பார்க்கலாம்.

61 ல் சென்னை மண்ணை இந்தக் குடும்பம் மிதிக்க நடிக வேள் ராதாவின் ட்ரூப்பில் ராமச்சந்திரன் இடம் பிடித்தார்.சென்னையில் கலைச் சேவை செய்ய வந்தால் சினிமா ஆசை தானே வரும்.தனது மகளை எப்படியாவது நாயகியாக்கிவிட துடித்தார்.துண்டு துக்கடா வேஷங்கள் தான் வந்தன.மகளே உன் சமத்து ஷூட்டிங்ல தான் ராதா இந்தப் பெண்ணைப் பார்த்தார்.உம் பொண்ணா?. நல்லாத் தான் இருக்கா!.. அவருக்கே உரிய பாணியில் என்னா பேரூ?. தெய்வநாயகிங்க!... தயங்கித் தயங்கி வார்த்தைகள் வர முகத்தைச் சுளித்த ராதா!.. தெய்வ நா..யகியா?. இந்தப் பேரைச் சொன்னா எவன் சான்ஸ் தருவான்? . நல்ல மாடர்ன் பேரா வெச்சுக்கோ!..விஜயான்னு வெச்சுக்கோ!.. நாயகி அப்பாவைப் பார்க்க !.. அவரும் தலையாட்ட ராதாவின் வாய் முகூர்த்தம் அடுத்த ஆண்டு இந்தப் பொண்ணுக்கு நிற்க நேரமில்லாமல் போனது.காதல் மன்னன் சிறப்பு விருந்தினராக வந்த நாடகத்தில் விஜயா ஆட மேடையேறிய ஜெமினி இந்தப் பொண்ணு நல்லா ஆடறா!.. நல்ல முகவெட்டு இருக்கு.இவளுக்கு நல்ல எதிர்காலம் இருக்கு.ஜெமினியில் பணியாற்றிய அனுபவம் அங்கே பேசியது.அப்போது தான் கே.எஸ்.ஜி.கற்பகத்தில் மும்முரமாக இருந்தார்.

63ம் ஆண்டு ஜெமினி சரோஜா தேவி ஜோடியில் படத்தை வெளியிடத் தீர்மானித்த கே.எஸ்.ஜி.க்கு சரோஜாவின் கால்ஷீட் கிடைக்க தாமதமானது.ஏதாவது புதுமுகத்தைப் போட்டு சொன்ன நேரத்திற்கு படத்தை ரிலீஸ் பண்ணும் மூடில் அவர் இருந்தார்.பலரையும் பார்த்து திருப்தியில்லாத நேரத்தில் தான் அந்த விளம்பரத்தைப் பார்த்தார்.நல்லாயிருக்காளே!.. வரச் சொல்லப்பா!.. பார்த்த மாத்திரத்தில் கற்பக நாயகி அப்படியே இருந்தார்.ஃபீல்டுக்கு ஒரு பளிச்சென்ற முகம் கிடைத்தது.மேக்கப் டெஸ்ட் எடுத்துப் பார்க்க முகத்தில் ஒரு மெச்சூரிடி இருந்தது.கிளம்பலாம்பா!.. யூனிட் பரபரப்பாக அப்போது தான் உள்ளே நுழைந்த வாலியின் பாடல்களில் கே.எஸ்.ஜி.பரம திருப்தி.பள்ளியில் மூன்றாம் வகுப்பு மட்டுமே படித்திருந்த விஜயாவிற்கு பக்கம் பக்கமான வசனங்களைத் தராமல் நச்சென புரியும்படி எளிமையாகவே எழுதிக் கொடுத்திருந்தார் இயக்குநர் திலகம்.அவரது செலக்ஷன் சோடை போகவில்லை.மிகப் பெரிய ஜாம்பவான் சாவித்திரியை ஓரம் கட்டி இந்தப் பெண் பட்டையைக் கிளப்ப அடுத்த ஆண்டு மிகப் பெரிய ஜாம்பாவன்களான எம்.ஜி.ஆர்.சிவாஜியோடு நடிக்கும் வாய்ப்புக் கிடைக்குமென அந்தப் பெண் சத்தியமாக நினைத்திருக்கமாட்டார்.காட்சிகளில் அப்படியொரு ஈடுபாடு!..சொல்லிக் கொடுத்ததை சட்டென கிரஹிக்கும் ஆற்றல்!..

திரையுலகில் நுழைவது தான் சிரமம்.ஒரு ட்ரம்ப் கார்ட் கிடைத்துவிட்டால் போதும்.எங்கேயோ கொண்டு போய் விட்டு விடும் என்பதற்கு விஜயாவின் வாழ்க்கையே சாட்சி.விஜயாவின் நடிப்பு பிடித்து விட கே.எஸ்.ஜி.64 ல் கை கொடுத்த தெய்வத்தில் பல சீனியர்களோடு இந்த சின்னப் பெண்ணை இணையவிட்டார்.அசத்தலான பெர்ஃபாமன்ஸ். !.. எஸ்.எஸ்.ஆர்.ஜோடியாக அது வரை கிடைக்காத அனுபவம்.சீனியர் சிவாஜி சாவித்திரி ஒரு புறம் நிற்க அவர்களுக்கு இணையான நடிப்பு.அந்த வடக்கத்திப் பெண்ணாக வந்து நின்ற விஜயா!..மொத்த யூனிட்டும் அவரை ஒரு குழந்தையாகவே நடத்தியது.வரிசையாக விஜயா வீட்டு முன்பாக புரடக்ஷன் கார்கள் அணிவகுக்க கவியரசு காரில் கருப்புப் பணம்.தேவரின் காரில் தொழிலாளி.அந்தப் பக்கம் ஏ.வி.எம்.கார்.சர்வர் சுந்தரத்திற்காக.காண்பது கனவா நனவா? . ராமச்சந்திரன் பணத்தை எண்ணி பெட்டியில் போடுவதற்கே நேரமில்லை.விஜயாவிற்கு எதுவுமே தெரியாது.ஒரு இயந்திரத்தைப் போல காரில் ஏறி கோடம்பாக்கம் முழுவதும் பறக்கத் தொடங்கினார்.

விதவிதமான உடைகள்.அது வரை அணியாத நகைகள்.முழங்கை நீள ஜாக்கெட்.ரிங் வைத்த கொண்டை!..அவிழ்த்து விட்டால் சாட்டை போல் நீளும் ஜடை.சிக்கென வடநாட்டு சல்வார். அப்போதைய விஜயாவின் உடலுக்கு எல்லாமே அழகாக இருந்தது.சிலை எடுத்தான் ஒரு சின்னப் பொண்ணுக்கு என்பது போல் சிலையான உடலோடு வலம் வந்தார் விஜயா.சிரித்தால் 32 முத்துக்கள் மொத்தமாகத் தெரிய அந்தப் புன்னகையில் அன்றைய ரசிகன் சொக்கித் தான் போனான்.இரு மலர்கள் திருச்சி வெற்றி விழாவில் அவன் தந்தது தான் அந்த புன்னகை அரசி பட்டம்.அடுத்தடுத்த ஆண்டுகளில் பறந்து பறந்து நடித்தார் விஜயா.கே.பி.யின் ஊஞ்சே லாக்கில் இந்தியும் பேசினார்.சத்யனின் ஓடையில் நின்னுவில் மலையாளமும் பேசினார்.மக்கள் திலகத்துடன் பணம் படைத்தவனில் ஒரு அருமையான கேரக்டர்.தாழம்பூவில் அவரோடு ஆடிப் பாடும் வாழ்ப்பு அவ்வளவு எளிதில் கிடைக்காத ஒன்று.பஞ்சவர்ணக்கிளி நாணல் என வெறைட்டியான கேரக்டர்கள்.மிகப் பெரிய ஜாம்பவான் எல்.வி.பிரசாத் தனது இதயக் கமலத்தில் வெயிட்டான கேரக்டர் தந்தார்.எப்படிப்பட்ட கேரக்டர்கள் .என்னென்ன வெறைட்டியான ஆடல் பாடல்கள்!.

கே.ஆர்.வி.யின் பட லிஸ்டைப் பார்த்தால் அத்தனையும் பெரிய இடங்கள்.சும்மாவெல்லாம் கூப்பிடமாட்டார்கள்.சரக்கிருக்க வேண்டும்.ஒரு பாத்திரத்தில் நுழைந்துவிட்டால் அப்படியே இன்வால்வ்மெண்ட் ஆகிவிட வேண்டும்.படம் விட்டு வெளியேறும்போது அந்தக் கேரக்டர் நம்மை என்னவோ செய்ய வேண்டும்.விஜயா ஏற்ற கேரக்டர்கள் நம்மை தூங்கவிடாமல் செய்தது.கற்பகம் தொடங்கி ஒரே ஆண்டில் ஏழெட்டு படங்கள்.அதிகாலை எழுந்து மேக்கப் போட்டால் மூன்று ஷிஃப்ட் முடியும்போது விதவிதமான மேக்கப்.விதவிதமான உடைகள்.15 வயதுப் பொண்ணுக்கு இது பெரிய விஷயம்.இதயக் கமலத்தில் மலர்கள் நனைந்தன பனியாலே பாடலில் அப்படியே அம்மன் போல வளைய வரும்போது ஒரு வித மரியாதை வரும்.பஞ்சவர்ணக்கிளியில் புரட்சிக் கவியின் தமிழைப் பாடும்போது வீரம் வரும்.நாணலில் என்ன தான் பாடுவது?. நான் எப்படித் தான் ஆடுவது?. விதவிதமான முக பாவனைகளில் அவர் காட்டிய வெறைட்டி அசத்தலானது.அடுத்தடுத்த ஆண்டுகளில் அந்த வெறைட்டி இன்னும் மெருகேறியது.

ஜே.கே.வின் யாருக்காக அழுதான் கே.எஸ்.ஜி.மின் சின்னஞ்சிறு உலகம் மற்றும் செல்வம் தொடங்கி ஏ.வி.எம்.ராமுவில் ஒரு அசத்தலான கேரக்டர்.நிலவே என்னிடம் நெருங்காதே என தனது முதல் நாயகன் விலகும்போது அந்த முகத்தில் தெரியும் பரிதவிப்பு அசாத்தியமானது.முக்தாவின் தேன் மழையில் விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் கலைஞர்களுக்கு நடுவே நமக்கு விருந்து வைத்த விஜயா.வித்தியாசமான பாத்திரமாக விஜயா பல ஜாம்பவான்களின் கைப்பாவையாக மாறிப்போனார்.கை நிறைய படங்கள் இருக்கும் 66 ல் தான் அனைவருக்கும் அதிர்ச்சி வைத்தியம் தந்தார்.சென்னையின் மிகப் பெரிய தொழிலதிபருமான வேலாயுதத்தின் இல்லத்தரசியானார் விஜயா.நாயர் பல படங்களுக்கு அப்போது ஃபைனான்ஸியராக இருந்தார்.ஏற்கனவே திருமணமானவர்.ஏனோ அவருக்கு விஜயாவை பிடித்துப் போனது.பணத்திற்கு பஞ்சமில்லாமல் போனது.நடித்துத் தான் வாழ்க்கையை ஓட்ட வேண்டும் என்ற நிர்பந்தம் அவருக்கு இல்லாமல் போனது.67 ல் அட்வான்ஸ் வாங்கிய அத்தனை படங்களையும் முடித்துக்கொடுக்கும் மிகப் பெரிய பணி.வயிற்றில் குழந்தையைச் சுமந்துகொண்டு கடமையாற்றிய விஜயா!..பட்டணத்தில் பூதத்தில் சிக்கென்ற நீச்சல் உடையில் தோன்றிய விஜயாவிற்கு அதுவே கடைசி ஆசையாகிப்போனது.ஏ.ப
ி.என்.ஒப்பந்தம் செய்த சரஸ்வதி சபதத்தில் முதன் முதலாக செல்வாம்பிகையாக மேக்கப் போட்டார்.வயிற்றில் குழந்தையைச் சுமந்த சுவடு தெரியாமல் வலம் வந்த விஜயா!.விடாமல் திருவருட் செல்வரில் அடுத்த வாய்ப்பு.தேவருக்காக விவசாயி.இரு மலர்கள் நெஞ்சிருக்கும் வரை ஊட்டி வரை உறவு என அட்வான்ஸ் வாங்கிய படங்கள் வரிசை கட்டி நிற்கிறது.இவற்றை எப்படி முடிப்பேன் ஆண்டவா!.. போதும் இந்த சினிமா வாழ்க்கை. பிள்ளை குட்டியோடு செட்டில் ஆகி விட வேண்டியது தான்.

பரபரப்பாக இயங்கிய காலங்கள்.மலையாளம் தெலுங்கு என கால்ஷீட் விழி பிதுங்கி நிற்கிறது.மனம் ஒரு குரங்கானாலும் ஊட்டி வரை உறவானாலும் ஒரே மாதிரி தான்.இவ்வளவு டென்ஷனிலும் ஏற்ற கேரக்டர்களில் எங்குமே தனது இயலாமையை விஜயா காட்டவில்லை.திருமால் பெருமையோடு மொத்தமாக மூட்டை கட்ட வேண்டியது தான்.அப்படித் தான் அத்தனை படங்களையும் முடித்துக் கொடுத்து அப்பாடா என அவரது பங்களாவில் முடங்கிப் போனார்.விதி விடவில்லை.தேவர் ரூபத்தில் மீண்டும் கதவைத் தட்டியது.அவரது அக்கா தங்கையில்.தங்கச்சி கேரக்டருக்கு விஜயாம்மா அழகாக செட்டாவார்.ஆரூர்தாஸ் கொளுத்திப் போட்டதை பட்டென பிடித்துக்கொண்டார் தேவர்.பக்கத்தில தான் பங்களா.பொடி நடையா போய் வாட்ச்மேனைப் பார்க்க.!.. ஐயா வாங்க!... வானுயர்ந்த கேட் அவரை உள் வாங்க!.. வாங்கண்ணே!.. வியப்போடு விஜயா!.. என்னம்மா சௌக்கியமா?. சந்தோஷமா இருக்கிறாப்பில இருக்கு!.. கொங்கு தமிழ் விளையாட !.. உட்காருங்கண்ணே!.. ஊஞ்சலில் ஆடியபடி வேலாயுதம்.பிரமாண்ட சோபா அப்படியே உள் வாங்க!.. அடடே!... அம்சமா இருக்கப்பா!..வெற்றுடம்பில் பட்டுச் சால்வை.எப்போதும் பக்திப் பழமாக இருக்கும் தேவர் மெல்ல வந்த விஷயத்தைச் சொல்ல!.. அய்யய்யோ!.. பதறினார் புன்னகை 
அரசி.!. என்னம்மா இப்படிப் பண்றே!.. பீக்கில இருக்கும்போதே யாராவது ரிட்டயர்டு ஆவாங்களா?. அந்த தங்கச்சி கேரக்டருக்கு உன்னை விட்டா யாரு இருக்கா?. தேவர் கேரக்டர் திரையுலகில் அனைவரும் அறிந்தது தான்.மனதில் ஒன்றை நினைத்துவிட்டால் மனிதர் சாதிக்காமல் விடமாட்டார். நல்ல முடிவைச் சொல்லாம நான் எழுந்திருக்கமாட்டேன்.வேலாயுதம் முகத்தைப் பார்க்க அவருக்கு வேறு வழியில்லை.குழந்தையை பார்க்கத் தான் இங்கே ஆளிருக்கே.பெரிய மனுஷன் வீடு தேடி வந்து கேட்கிறாரு!..அண்ணன் ஆசைப் படுறாரு.!.. போய் நடிச்சுக் கொடுத்திட்டு வந்திரு! ... முருகா!... இதோ வந்திட்டேன்டா!.. தேவர் படமெடுத்தால் ஒரு பார்ட்னர் மருதமலையான் தான்.ஒரு ஷேர் அவனுக்குப் போயிடும். அவர் உட்கார்ந்த சோபாவும் தேவர் அலுவலகம் வந்தது!..அக்கா தங்கையில் விஜயா இருந்தார்.

விஜயாவின் அடுத்த ரவுண்ட் பலமாகவே இருந்தது.ஒன்றை இழந்தால் தான் இன்னொன்று கிடைக்கும்.விஜயா தனது குடும்பத்தை நிறையவே மிஸ் பண்ணினார்.பெற்றெடுத்த உடம்பு தனது வேலையைக் காட்டியது.சிக்கென்ற விஜயா மெல்ல மெல்ல விடை பெறத் தொடங்கினார்.மாதவனின் கண்ணே பாப்பாவில் இன்னொரு விஜயா!..கண் மலர் நிலவே நீ சாட்சி சொர்க்கம் ராமன் எத்தனை ராமனடி எதிரொலி என மீண்டும் வெறைட்டியான கேரக்டர்கள்.தனது குருநாதர் அழைத்து ஆதி பராசக்தி என்றார்.அம்மன் அருளால் தெய்வீக கலை மீண்டும் தொற்றிக்கொண்டது.ஆனாலும் உடல் மட்டும் ஒத்துழைக்கவில்லை.நல்ல நேரம் விமர்சனத்தில் எத்தனை யானை என தெரியவில்லை.விஜயா யானையோடு யானையாக ஒன்றிவிட்டார் என கிண்டல் வேறு!..தவப் புதல்வனில் சிவாஜி கிண்டல் வேறு.குறத்தி மகனில் இன்னும் அசிங்கம்.ஏதாவது செய்தாக வேண்டும்.வீட்டிலுள்ள நீச்சல் குளத்தில் நாளெல்லாம் கிடந்தார்.படிப்படியாக கொஞ்சம் உடல் ஒத்துழைத்தது.நான் வாழ வைப்பேனில் அது தெரிந்தது.இடைப்பட்ட காலங்களில் ஏகப்பட்ட படங்கள்.

நடிகர் திலகத்தின் ஜோடியாக பல படங்களில் அசத்தினார்.தங்கப் பதக்கத்தில் அட்டகாசமான வேடம்.பாரத விலாஸில் தொடங்கி கிரஹப்பிரவேசம் திரிசூலம் நாம் பிறந்த மண் ஜெனரல் சக்கரவர்த்தி ஜஸ்டிஸ் கோபிநாத் ரிஷி மூலம் கல்தூண் வரை வலம் வந்தார்.நாட்டியப் பேரொளிக்குப் பிறகு நடிகர் திலகத்திற்கு அசத்தலாக செட்டானவர் விஜயா தான்.ஹேப்பீ இன்று முதல் ஹேப்பீ!..அதே இன்வால்வ்மெண்ட் அந்த ஐம்பதிலும் ஆசை வரும் பாடலிலும்!.பணத்தில் குளித்த விஜயாவிற்கு ஒரு கட்டத்தில் பணத் தேவையும் ஏற்பட்டது. சொந்தமாக படமெடுத்தார்.கையைச் சுட்டுக்கொண்டார்.கணவரின் தொழிலும் முடங்கிப் போனது.வாழ்க்கையின் ஏற்ற இறக்கங்கள் பலவற்றையும் பார்த்துவிட்டார்.இன்ப துன்பங்களை அனுபவித்துவிட்டார்.இருந்தபோதிலும் திரையில் தோன்றிய விஜயா நம்மை எப்போதுமே ஏமாற்றியதில்லை.பாத்திரத்தோடு இன்வால்வ் ஆகிவிட்டால் அனைத்தையும் மறந்துவிடுவார்.திரிசூலத்தில் அவர் வெளியிட்ட அந்த என்னங்க...ஒன்று போதும்!..அந்த குரலில் காட்டிய வைப்ரேஷன் நம்மை என்னவோ செய்யும்.நீண்ட காலத்திற்குப் பிறகு கட்டிய கணவனின் குரலை தொலைபேசியில் கேட்ட தருணத்தில் அவர் வெளியிட்ட அந்த எக்ஸ்ப்ரஷன் காலத்திற்கும் மறக்காது. தலை நிறைய மல்லிகை ச
ூடி தழையத் தழைய புடவை கட்டி பக்கத்தில் வந்து நின்று சைடாக ஒரு கிறக்கப் பார்வை பார்த்தால் எந்த ஆணாக இருந்தாலும் ஒரு நிமிடம் ஆடிப் போவது உறுதி.அந்த கிறக்கப் பார்வையும் அந்த உதடுகள் உதிர்த்த புன்னகையும் பல்லவன் வடித்த சிலையாக பல காலம் உயிர்ப்போடு இருக்கும் என்பது உறுதி!..ஆடி ஓடி ஓய்ந்திருக்கும் விஜயாம்மா இன்னும் நீண்ட காலம் இதே புன்னகையோடு வாழ இந்த இசைக் குழு வாழ்த்துகிறது.
 

Leave a comment

Comment