TamilsGuide

5 படங்களில் எம்.ஜி.ஆருக்கு ஜோடி... மிஸ்ஸான வேட்டைக்காரன் - சரோஜா தேவி சொன்ன காரணம்

தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான முதல் 5 படங்களில் நாயகியாக நடித்த சரோஜா தேவி 6-வது படமாக வேட்டைக்காரன் படத்தில் நடிக்காதது ஏன் தெரியுமா?

தமிழ் சினிமாவின் ஆளுமையாக இருந்த எம்.ஜி.ஆரை வைத்து பல படங்களை தயாரித்த பெருமைக்கு சொந்தக்காரரான சின்னப்ப தேவர் தயாரிப்பில் எம்.ஜி.ஆர் நடித்த 5 படங்களில் தொடர்ச்சியாக நாயகியாக நடித்த சரோஜா தேவி வேட்டைக்காரன் படத்தில் நடிக்காதது ஏன் என்பது குறித்து பேசியுள்ளார்.

கர்நாடகாவில் பிறந்த சரோஜா தேவி, 1955-ம் ஆண்டு வெளியான மகாகவி காளிதாஸ் என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். நடிப்பில் பெரிதாக ஆர்வம் இல்லை என்றாலும் தனது அம்மாவுக்காக ஒரு படம் நடிக்க ஒப்புக்கொண்ட சரோஜா தேவி, மகாகவி காளிதாஸ் படத்தில் நடித்தார். இந்த படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்ததால், அடுத்து ஒரு படத்தில் மட்டும் நடித்துவிடு என்று அவரது அம்மா கூறியுள்ளார்.

இந்த படமும் பெரிய வெற்றிப்படமாக அமைந்த நிலையில், அடுத்தடுத்து சரோஜா தேவிக்கு பட வாய்ப்பும் குவிய தொடங்கியது. அதன்பிறகு தான், தமிழில் திருமணம் படத்தின் மூலம் அறிமுகமான இவர், அடுத்து சிவாஜியின் தங்கமலை ரசகியம் என்ற படத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் வெளியான செங்கோட்டை சிங்கம் படம் தான் சரோஜா தேவி நாயகியாக நடித்த முதல் படம்.

அதனைத் தொடர்ந்து ஸ்ரீதர் இயக்கிய கல்யாணப்பரிசு படத்தில் நடித்த சரோஜா தேவி, 1961-ம் ஆண்டு வெளியான எம்.ஜி.ஆரின் திருடாதே படத்தில் இவருடன் ஜோடியாக நடித்திருந்தார். அதன்பிறகு எம்.ஜி.ஆருடன் நாடோடி மன்னன் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை கொடுத்த, சரோஜா தேவி, சின்னப்ப தேவர் எம்.ஜி.ஆர் இருவரும் மீண்டும் இணைந்த 1961-ம் ஆண்டு வெளியான தாய் சொல்லை தட்டாதே படம் தொடங்கி 1963-ம் ஆண்டு வெளியான நீதிக்கு பின் பாசம் என தொடர்ந்து 5 படங்களில் நாயகியாக நடிக்க தொடங்கினார்.

எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான திருடாதே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகை சரோஜா தேவி, தேவர் பிலிம்ஸ் நிறுவனர் சின்னப்ப தேவருடன் நெருங்கிய நட்பில் இருந்துள்ளார். இதன் காரணமாக அவர் எம்.ஜி.ஆர் நடிப்பில் தயாரிக்கும் படங்களில் தொடர்ந்து சரோஜா தேவியை நாயகியாக ஒப்பந்தம் செய்துள்ளார். ஒரு கட்டத்தில், மற்ற நடிகைகள் பலரும் என்ன சரோஜா தேவியே நடிச்சிகிட்டு இருக்காங்க எம்.ஜி.ஆருடன் நாங்கள் நடிக்க மாட்டோமா என்று கேட்டுள்ளனர்.

இதை கேட்ட சரோஜா தேவி, சின்னப்ப தேவரிடம் சென்று அண்ணே அவங்கயும் நடிக்க வையுங்கள் என்று சொன்று சொல்ல, 1963-ம் ஆண்டு எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியாகி பெரிய வெற்றிப்படமாக அமைந்த வேட்டைக்காரன் படத்தில் சரோஜா தேவி மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக சாவித்ரி நடித்திருந்தார். இந்த படத்திற்கு பிறகு தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் எம்.ஜி.ஆர் நடித்த எந்த படத்திற்கும் சரோஜா தேவி நாயகியாக நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

தமிழச்சி கயல்விழி
 

Leave a comment

Comment