அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் , கோக கோலா, நெஸ்லே நிறுவனங்களுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ளது.
அதிகம் பதப்படுத்தப்பட்ட உணவுகள் மக்களுக்கு உடல் நலக் கோளாறுகளை உருவாக்குவதாகக் கூறி சான் பிரான்சிஸ்கோ அரசாங்கம் மேற்படி வழக்கை தொடுத்துள்ளது.
மக்களின் உடல் நலத்திற்கு கேடு விழைவிக்கும் உணவுப் பொருள்களைத் தயாரிப்பதாக, ஓரியோ, கிட் கேட் போன்ற பிரபல தின்பண்டங்களின் தயாரிப்பாளர்கள் உள்பட 10 நிறுவனங்களுக்கு எதிராக சான் பிரான்சிஸ்கோ அரசு வழக்குத் தொடர்ந்துள்ளது.
இந்த வழக்கில் பெயரிடப்பட்டுள்ள நிறுவனங்கள் தயாரிக்கும் அதிகம் பதப்படுத்தப்பட்ட உணவுகள் மக்களுக்கு வகை 2 நீரழிவு, கல்லீரலில் கொழுப்பு நோய் மற்றும் புற்றுநோய் போன்ற பாதிப்புகளை உருவாக்குவதாகக் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சான் பிரான்சிஸ்கோ அரசின் வழக்குரைஞர் டேவிட் சியூ (David Chiu) கூறுகையில், இந்த நிறுவனங்கள் சுகாதார நெருக்கடியை உருவாக்கியுள்ளதாகவும், அவர்கள் உருவாக்கிய தீங்கிற்கு இப்போது பொறுப்பேற்க வேண்டுமெனவும், கூறியுள்ளார்.
இத்துடன், மிகவும் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள், மிட்டாய்கள், சோடா, சாக்லேட் உள்ளிட்ட தின்பண்டங்கள் அதிகம் சாப்பிட தூண்டும் வகையிலான ரசாயனங்கள் சேர்த்து தயாரிக்கப்பட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இதில், அதிகம் பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வதன் மூலம் ஏற்படும் பாதிப்புகளுக்கான சிகிச்சை செலவுகளுக்கு உள்ளூர் அரசுகளுக்கு உதவ அந்த நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கவும் இந்த வழக்கில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அதேவேளை வழக்கில், சர்வதேச அளவில் முன்னணி வகிக்கும் பெப்ஸிகோ, கிராஃப்ட் ஹெயின்ஸ், கெலாக்ஸ், மார்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. எனினும், இந்த விவகாரம் குறித்து எந்தவொரு நிறுவனமும் இதுவரை பதிலளிக்கவில்லை எனவும் கூறபடுகின்றது.


