அக்கரபத்தனை பிரதேச சபைக்குட்பட்ட ஊட்வளி குரூப் பிரேம்மோர் பிரிவு, எல்ஜின் உள்ளிட்ட பல்வேறு தோட்டப் பகுதிகளில் இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களை இன்றும் (04) இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் நேரில் சென்று பார்வையிட்டார்.
தொடர்ந்து ‘ஊட்வளி குரூப் பிரேம்மோர் பிரிவு, எல்ஜின் உள்ளிட்ட பல்வேறு தோட்டப் பகுதிகளில் இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின்’ அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில் உலர் உணவுப் பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதிகளையும் அவர் வழங்கி வைத்தார்.
அத்தோடு சேதமடைந்த வீடுகளையும் பார்வையிட்டிருந்தார்.
கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் நிலவும் கடும் காலநிலை சீர்கேடு காரணமாக பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு, மண்சரிவு உள்ளிட்ட அனர்த்தங்கள் ஏற்பட்டுள்ளன.
இதனால் பலர் தமது வீடுகளையும் உடைமைகளையும் இழந்து இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ளனர்.
மேலும் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நுவரெலியா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்களின் துயரத்தை பகிர்ந்து கொள்ளும் விதமாக ஜீவன் தொண்டமான் மேற்கொண்ட இந்த நிவாரணப் பணியில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தேசிய அமைப்பாளர் பழனி சக்திவேல், அக்கரபத்தனை பிரதேச சபை தலைவர் ரதிதேவி, உபத்தலைவர் சச்சிதானந்தன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் காரியாலய உத்தியோகத்தர்கள், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் இணைந்து செயல்பட்டனர்.
மேலும், கடந்த 2ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த உலர் உணவுப் பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதிகளையும் வழங்கும் செயற்பாடானது மலையக பிரதேச பகுதிகளில் பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் எதிர்வரும் நாட்களுக்குள் முழுமையாக வழங்கி வைக்கப்படவுள்ளதாகவும், உதவி வழங்கிய நல்லுள்ளங்களுக்கு நன்றிகளையும் தெரிவித்துக்கொள்வதாக ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.


