அண்மைய பேரிடரினால் முழுமையாகவும் பாதியளவிலும் சேதமடைந்த வீடுகளை உரிய வழிமுறையின்படி அடையாளம் காணவும், இழப்பீட்டிற்குத் தேவையான சரியான தரவுகளை திறம்படப் பெறுவதற்கான சிறப்பு நுட்பத்தை தயாரிக்கவும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிற்கும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (04) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
இதன்போதே ஜனாதிபதி இந்த ஆலோசனையை வழங்கினார்.
டித்வா சூறாவளியால் சேதமடைந்த வீடுகள் மற்றும் தொடர்புடைய இழப்பீட்டு நடைமுறைகளை ஆராய்வதற்காக இந்தக் கலந்துரையாடல் கூட்டப்பட்டது.
ஆபத்தான பகுதிகளில் வாழும் மக்களுக்கு நீண்டகால தீர்வை வழங்குவதன் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி, இதுபோன்ற பேரிடரிலிருந்து மக்கள் மீளாமல் இருக்க, அதற்கான சரியான தரவுகளை அடையாளம் காணுமாறும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
மண்சரிவகள் காரணமாக 1289 வீடுகள் முழுமையாகவும், 44,574 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகள் தெரிவித்தனர்.


