கொலையொன்றை செய்ய தயாராக இருந்த நிலையில், பாதாள உலகக் குழு உறுப்பினரான ‘கரந்தெனிய சுத்தா’வின் கூலிப்படை கொலையாளி ஒருவர் மீட்டியாகொட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் 36 வயதுடைய வாழைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் அவர் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் என்பதோடு, அக்காலப்பகுதியில் கருணா தரப்பில் இவர் இருந்துள்ளார் எனவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில், அவரிடமிருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ரிவோல்வர் ஒன்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
இவர் கொள்ளைச் சம்பவமொன்று தொடர்பில் காலி சிறைச்சாலையில் 11 வருடங்கள் சிறைத்தண்டனை அனுபவித்துள்ளதுடன், அக்காலப்பகுதியில் கரந்தெனிய சுத்தாவை அறிமுகம் செய்துகொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கரந்தெனிய சுத்தா நேரடியாகவே குறித்த நபருக்கு தொலைபேசி அழைப்புக்களை மேற்கொண்டு வந்துள்ளமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


