TamilsGuide

போரை விரும்பினால் தயாராக இருக்கிறோம்- ஐரோப்பிய நாடுகளுக்கு புதின் எச்சரிக்கை

ரஷியா-உக்ரைன் இடையே 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சித்து வருகிறார். இதற்காக டிரம்ப் 28 அம்சங்களை கொண்ட அமைதி ஒப்பந்தத்தை வெளியிட்டார்.

இந்த ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அமைதி ஒப்பந்தத்தில் சில மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று உக்ரைனும், அந்நாட்டுக்கு ஆதரவாக உள்ள ஐரோப்பிய நாடுகளும் வலியுறுத்தின. இதையடுத்து அமைதி ஒப்பந்தத்தில் சில திருத்தங்கள் செய்யப்பட்டன.

இந்த நிலையில் ஐரோப்பிய நாடுகளுக்கு புதின் எச்சரிக்கை விடுத்து உள்ளார். தலைநகர் மாஸ்கோவில் நடந்த முதலீட்டு மன்ற நிகழ்ச்சியில் புதின் பங்கேற்று பேசியதாவது:-

உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக ஐரோப்பிய அரசாங்கங்கள் ரஷியாவால் ஏற்றுக்கொள்ள முடியாத கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றன. பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண அமெரிக்காவும், அதிபர் டிரம்ப்பும் மேற்கொள்ளும் முயற்சிகளைத் தடுத்து வருகின்றன.

நாங்கள் ஐரோப்பாவுடன் போருக்குச் செல்லத் திட்டமிடவில்லை. ஆனால் ஐரோப்பா விரும்பினால், போரை தொடங்கினால் நாங்கள் இப்போதே தயாராக இருக்கிறோம். அவர்கள் போரின் பக்கம் இருக்கிறார்கள். ஐரோப்பிய தலைவர்கள் அமைதியான அணுகுமுறையைக் கை விட்டு உக்ரைனில் தொடர்ந்து விரோதப் போக்கை ஆதரித்து வருகிறார்கள்.

ரஷிய கப்பல்கள் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தி உள்ளது. இது ஒரு கடற்கொள்ளையாகும். இதற்கு பதிலடியாக உக்ரைன் துறைமுகங்கள் மற்றும் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் விரிவுபடுத்தப்படும். இந்த தாக்குதலை தடுக்க கடலில் இருந்து உக்ரைனை துண்டிக்க வேண்டும் என்றார். 
 

Leave a comment

Comment