கேள்வி :- மறைந்த பேச்சாளர்களில் உங்களால் மறக்க முடியாதவர்?''
வைரமுத்து :- ''கா.காளிமுத்து.
சொற்களின் சுந்தரன்; வாக்கியங்களின் வாத்தியக்காரன்; சங்கத் தமிழைத் தெருவெல்லாம் வீசிப்போன தென்பாண்டித் தென்றல்; 'அடாணா’வை உரைநடையில் வாசித்த கவிதைக் கச்சேரியாளன்.
இருதய அறுவைச் சிகிச்சை முடிந்து இரண்டாம் உயிர் பெற்று மதுரைக்குத் திரும்பிக்கொண்டுஇருந்தவரை பாண்டியன் ரயிலில் சந்தித்தேன்.
அவர் கையிலிருந்தது 'கள்ளிக்காட்டு இதிகாசம்’. கண்ணில் நீர் மிதக்கச் சொன்னார்:
'நான் உயிர் பிழைத்ததில் ஒரே ஒரு நன்மை கவிஞர். பிழைக்காதிருந்தால், 'கள்ளிக்காட்டு இதிகாசம்’ படிக்காமலே செத்துப் போயிருப்பேனே...’
ஒருவர் கரத்தை ஒருவர் பற்ற... இருவர் கரத்திலும் விழுந்தது கண்ணீர்.
எனக்கொரு கனவு இருந்தது.
கலைஞர் - வைகோ - காளிமுத்து என்ற முத்தமிழின் முக்கூட்டுச் சங்கமத்தை என் நூல் வெளியீட்டு விழா ஏதேனுமொன்றில் நிகழ்த்த வேண்டும் என்ற நெடுங்கனவு.
அரசியல் என் கனவின் ஒரு பக்கத்தைக் கிழித்துவிட்டது;
மரணம் மறு பக்கத்தை எரித்துவிட்டது.''
- விகடன் மேடை .


