மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் தன்னுடைய படத்துக்கு பெயர் வைக்கும் போது நம்பர் ஜோதிடம் பார்ப்பதில்லை.
அந்தக்காலத்தில் படத்துக்கு பெயர் வைக்கும் போது கூட்டுத்தொகை 8 வராமல் பார்த்துக் கொள்வது வழக்கம். அதையும் மீறி வைத்த
ஒன்றிரண்டு படங்களும் ஓடாமல் படுதோல்வி அடைந்ததால் எல்லோரும் படத்தின் பெயருக்கு 8 என்கிற கூட்டுத்தொகை வராமல் பார்த்துக் கொண்டனர்.
புதுமை இயக்குநர் ஸ்ரீதர் தன்னுடைய கனவுப்படம் "மீண்ட சொர்க்கம்" படுதோல்வி அடைந்த பிறகு அவரும் அதை
தவிர்த்து வந்தார். ஆனால் எம்ஜிஆர் இந்த சென்டிமென்ட் பார்க்க மாட்டார்.
சில கட்சி தலைவர்கள் வேட்பாளர்களின் ஜாதகங்களை அலசி ஆராய்ந்து தேர்தல் சமயத்தில் கிரகநிலைமை, ஜாதி இத்தனையும் அலசிப்பார்த்துதான் சீட் கொடுப்பார்கள்.
ஆனால் தலைவரோ எல்லா இடத்திலேயும் நான்தான் நிற்கிறேன் என்று நினைத்து கொள்ளுங்கள் என்று சொல்லி யாரை வேண்டுமானாலும் நிறுத்துவார். அவரும் வெற்றி பெறுவார். அதேபோல் சினிமாவிலும் 8 எழுத்து சென்டிமென்ட் பார்க்க மாட்டார். 8 எழுத்தில் வைத்த அநேக படங்கள் தலைவருக்கு வெற்றியை பெற்று தந்திருக்கின்றன.
உதாரணமாக "பல்லாண்டு வாழ்க" "எங்கள் தங்கம்" "குமரிக்கோட்டம்"
"நேற்று இன்று நாளை" போன்ற படங்கள் பெரு வெற்றியை பெற்றன. "நான் ஆணையிட்டால்" "நீரும் நெருப்பும்" "ராமன் தேடிய சீதை" "ஒரு தாய் மக்கள்"
"பாக்தாத் திருடன்" "மன்னாதி மன்னன்" போன்ற படங்கள் சுமாரான வெற்றியையும் பெற்றன.
இருந்தாலும் எம்ஜிஆருக்கு எப்போதுமே 7 அதிர்ஷ்ட எண் என்று எல்லோரும் அறிவார்கள். அதற்கு காரணம் எம்ஜிஆர் முதல்வராக பொறுப்பேற்றபின் முதல் சட்டமன்றம் கூடியது 4-7-77 அன்றுதான்..அந்த நாள் தலைவரின் ராசிநாளாக பார்க்கப்பட்டது. அதை நினைவு படுத்தும் வகையில் அவரது கார் நம்பராக 4777 என்ற எண்ணை எம்ஜிஆர் தேர்ந்தெடுத்தார்.
அதன்பிறகு 7 என்ற எண் எம்ஜிஆர் வாழ்க்கையில் பலமுறை பல முக்கியமான நிகழ்வுகளுக்கு காரணமாக அமைந்ததை நாம் பார்த்திருக்கிறோம். ஏழு எழுத்துக்களில் வெளியான அநேக படங்கள் பிளாக்பஸ்டர் வெற்றியை
பதிவு செய்தது என்றே சொல்லலாம்.
"மலைக்கள்ளன்" "நாடோடி மன்னன்" "வேட்டைக்காரன்"
"ரிக் ஷாக்காரன்" "உரிமைக்குரல்" "மீனவ நண்பன்" போன்ற 7 எழுத்தில் முடியும் படங்களை சொல்லலாம்.
அதேபோல் MGR என்ற எழுத்துக்கு நம்பர் ஜோதிடம் பார்த்தால் 4+3+2=9
வருகிறது. அதனால் 9ம் எம்ஜிஆருக்கு ராசியான ஒரு நம்பராக எடுத்துக் கொள்ளலாம்.
9 எழுத்துக்களில் வெளியான படங்கள் எல்லாம் பெரிய வெற்றியை
பதிவு செய்திருக்கின்றன. அவைகள் என்னவென்று பார்க்கலாம். "எங்க வீட்டு பிள்ளை" "குடியிருந்த கோயில்"
"மாட்டுக்கார வேலன்" போன்ற பெரிய வெற்றி பெற்ற படங்களை சொல்லலாம்.
இருப்பினும் எம்ஜிஆர் என்ற மூன்றெழுத்தே வெற்றிக்கு காரணம் என்பதால் தலைவரின் ரசிகர்கள் எதையும் கருத்தில் கொள்வதில்லை.
இதையே "பல்லாண்டு வாழ்க" திரைப்படத்தில் தலைவர் சொல்லுவார், 'நீங்களெல்லாம் வெறும் நம்பர்கள் அல்ல, என் நெருங்கிய நண்பர்கள்' என்று. அதுவே என்றும் எப்போதும் தலைவரின் நம்பிக்கையாக இருந்தது எனலாம்.


