வெனிசுலாவில் இருந்து அமெரிக்காவுக்கு போதை பொருள் கடத்தப்படுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டி வருகிறார். மேலும் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ போதைப்பொருள் கடத்தலை ஊக்குவிப்பதாக டிரம்ப் தெரிவித்து உள்ளார்.
இதையடுத்து கடந்த செப்டம்பா் முதல் வெனிசுலா அருகே கரீபியன் பகுதியில் அமெரிக்கா கடற்படையை பெரும் அளவில் குவித்து வருகிறது. இதனால் வெனிசுலா மீது அமெரிக்கா ராணுவ நடவடிக்கை எடுக்கலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதற்கிடையே தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டுமென்றால் மதுரோவும் அவரது குடும்பத்தினரும் நாட்டை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும் டிரம்ப் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
இந்த நிலையில் அமெரிக்காவின் மிரட்டலுக்கு அடிபணிய மாட்டோம் என்று வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ தெரிவித்து உள்ளார்.
தலைநகர் கராகசில் நடந்த கூட்டத்தில் பங்கேற்ற மதுரோ தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசியதாவது:-
நாங்கள் அமைதியை விரும்புகிறோம். இறையாண்மை, சமத்துவம், சுதந்திரம் கொண்ட அமைதியை விரும்புகிறோம். அடிமையின் அமைதியையோ, காலனித்துவ அமைதியையோ நாங்கள் விரும்பவில்லை. வெனிசுலா ஒருபோதும் வெளிநாட்டு அழுத்தம் அல்லது ஆதிக்கத்திற்கு அடிபணியாது. எனது ஆட்சியை கவிழ்க்க அமெரிக்கா முயற்சிக்கிறது. மோதலுக்குத் தயாராகும்போது வெனிசுலா வெளிப்புற கட்டளைகளுக்கு அடிபணியாது.
இவ்வாறு அவர் கூறினார்.


