பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், இருநாள் அரசுமுறை பயணமாக இந்த வாரம் (டிசம்பர் 4-5) இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின். 23வது இந்தியா-ரஷ்யா வருடாந்திர உச்சி மாநாட்டிலும் கலந்துகொள்ள இருக்கிறார். இந்நிலையில் இந்த சந்திப்பின்போது இந்தியாவிலிருந்து ரஷ்யாவிற்கு இறக்குமதியை அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விவாதிக்கப்படும் என ரஷ்யா தெரிவித்துள்ளது.
புதினின் இந்தியப் பயணம் குறித்தும், இருநாடுகளுக்கிடையேயான உறவு குறித்தும் பேசிய கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ்,
"ரஷ்யா மற்றும் இந்தியா இடையேயான உறவு என்பது வெறும் ராஜாங்கரீதியானது மட்டுமல்ல. இந்த இருதரப்பு உறவு, பரஸ்பர புரிதலின் ஆழமான வரலாற்று பின்னணியில் அமைந்தது. இந்தியர்களின் வரலாற்று வளர்ச்சியில் தோளோடு தோளாக நின்றதில் பெருமைக் கொள்கிறோம். அதேநேரத்தில், இன்றைய காலகட்டத்தில் உலகளாவிய தொடர்புகளில் இந்தியாவின் நட்புரீதியான நிலைபாடுகளுக்கு நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.
இருநாடுகளும் அவரவர்களின் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்கிறோம், அவை பெரும்பாலான துறைகளில் உண்மையில் ஒத்துப்போகின்றன. பாதுகாப்புத் துறையில் பிரம்மோஸ் ஏவுகணைகளை நினைவில் கொள்வோம். இது வெறும் வர்த்தகம் சார்ந்தது மட்டுமல்ல. உயர் தொழில்நுட்பங்களின் பரிமாற்றம் ஆகும். சந்தை மதிப்பில், இந்தியாவிற்கு எண்ணெய் சப்ளை செய்யும் முக்கிய விநியோகஸ்தராக ரஷ்யா இருக்கிறது.
இந்த வர்த்தகம் இந்தியாவிற்கு பெரும் நன்மை பயக்கும் என்பதில் எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை. மேலும் இது இருநாடுகளுக்கும் பரஸ்பர நன்மை பயக்கும் என்பதிலும் சந்தேகம் இல்லை. மூன்றாம் நாடுகளால் பாதிக்கப்படாத வகையில் நமது வர்த்தக தொடர்புகளை கட்டமைக்கவேண்டும். நாங்கள் இந்தியாவில் இருந்து வாங்குவதை விட அதிகமாக விற்பனை செய்கிறோம் என்பதை நன்கு அறிவோம். புதினின் வருகையின்போது இதுகுறித்து ஆலோசிக்கப்படும். இந்தியாவில் இருந்து நிறைய பொருட்களை இறக்குமதி செய்ய விரும்புகிறோம். அதற்கான ஒரு நிகழ்வாக இது அமையும்" என தெரிவித்தார்.


