அமெரிக்கா, இரட்டைக் குடியுரிமை முறையை முடிவுக்குக் கொண்டுவர இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
அமெரிக்க நாடாளுமன்ற மூத்த உறுப்பினரான பெர்னி மொரேனோ (Bernie Moreno) என்பவர், அமெரிக்காவில் இரட்டைக் குடியுரிமையை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில், Exclusive Citizenship Act of 2025 என்னும் சட்டத்தை முன்வைக்க இருக்கிறார்.
அந்த சட்டம் அமுலுக்கு வரும் நிலையில், அமெரிக்காவில் வாழும் இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள், தாங்கள் எந்த நாட்டின் குடியுரிமையை தக்கவைத்துக்கொள்ளப்போகிறார்கள் என்பதை முடிவு செய்யவேண்டியிருக்கும்.
அத்துடன், அமெரிக்கர்கள் இன்னொரு நாட்டுக்குச் சென்று, அந்த நாட்டின் குடியுரிமை பெற விரும்பினால், அவர்கள் தங்கள் அமெரிக்கக் குடியுரிமையை கைவிடவேண்டியிருக்கும்.
இந்த சட்டத்தை முன்வைத்துள்ள அமெரிக்க நாடாளுமன்ற மூத்த உறுப்பினரான பெர்னி மொரேனோ, கொலம்பியா நாட்டில் பிறந்தவர் ஆவார்.
தான் தனது கொலம்பிய குடியுரிமையை தனது 18ஆவது வயதில் துறந்து அமெரிக்கக் குடிமகன் ஆனதாக தெரிவிக்கிறார் மொரேனோ.
இந்த சட்டம் அமுலுக்கு வரும் நிலையில், இரட்டைக் குடியுரிமை கொண்ட அமெரிக்கர்கள், அரசு அதிகாரிகளால் அடையாளம் காணப்படுவார்கள்.
அவர்கள் ஓராண்டுக்குள் தங்கள் குடியுரிமைகளில் ஒன்றைக் கைவிடவேண்டியிருக்கும். அப்படிச் செய்யாதவர்கள் தங்கள் அமெரிக்கக் குடியுரிமையை இழப்பார்கள்.
அதே நேரத்தில், அமெரிக்கக் குடியுரிமையைக் கைவிடுவோர், அமெரிக்கக் குடிமக்கள் அல்லாதவர்கள் என முடிவு செய்யப்பட்டு புலம்பெயர்தல் சட்டத்தின் கீழ், வெளிநாட்டவர்களாக நடத்தப்படுவார்கள்.
ஏற்கனவே அமெரிக்க ஜனாதிபதியான ட்ரம்ப் புலம்பெயர்தல் விதிகளை கடுமையாக்கிவரும் நிலையில், மொரேனோ முன்வைக்க இருக்கும் சட்டம், அமெரிக்காவில் வாழும் வெளிநாட்டவர்களுக்கு புதிய தலைவலியை உருவாக்கும் என்பதில் சந்தேகம் எதுவுமில்லை!


