சென்னையில் நேற்று FANLY செயலியை வெளியீட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் முன்னாள் இந்திய பேட்மிண்டன் வீரர் புல்லேலா கோபிச்சந்த், லட்சுமி நாராயணன், குகேஷ் தம்மராஜு, மணிகண்டன் தங்கரத்தினம் ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும் விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் சிவகார்த்திகேயன் கலந்துகொண்டு, புதிய செயலியை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார்.
விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் கூறியதாவது:-
* எப்போதுமே நான் எனது ரசிகர்களை சகோதர, சகோதரிகளே என்றுதான் சொல்வேன். அவர்கள் என் குடும்பம்.
* என்னை வணங்கும் ரசிகர்களை விரும்பவில்லை. கடவுளையும், பெற்றோரையும் மட்டுமே வணங்க வேண்டும்.
* நிறைய எதிர்மறை எண்ணங்கள் பரவிவரும் சூழலில் அதை எல்லாம் தவிர்த்து, நேர்மறையான மனநிலை ரசிகர்கள் மத்தியில் இருக்க வேண்டும்.
* என்னுடன் ஒரு சகோதரனைப்போல பழகக்கூடிய ரசிகர்கள்தான் எனக்கு இருக்க வேண்டும் என நினைப்பேன்.
* சமூக வலைத்தளங்கள் என்றாலே தேவை இல்லாத விஷயங்களை தருகிறது என்ற பயம் உருவாகியிருக்கிறது.
* நான் சமூக வலைத்தளங்கள் எல்லாவற்றிலும் இருக்கிறேன், ஆனால் எதையும் நான் பயன்படுத்துவதில்லை. அதற்கென ஆட்கள் இருக்கிறார்கள். இன்ஸ்ட்டா மட்டும் பயன்படுத்தி வந்தேன், ஆனால் கைதவறி ரீபோஸ்ட் செய்துவிடுவேன் என்ற பயத்தில் இப்போது அதையும் பயன்படுத்துவதில்லை. மேலும் அங்கு இருக்கும் தகவல்கள் சரியானதா என்ற சந்தேகமும் இருக்கிறது என்றார்.
FANLY செயலி தளத்தில் இணைந்த முதல் திரைப்பிரபலம் சிவகார்த்திகேயன் ஆவார்.
v


