‘அன்பே வா’ படத்துக்குத் தொடக்க விழா செப்டம்பர் மாதத்தில் நடந்தது. சரவணன் சார் படத்தை பொங்கல் பண்டிகை அன்று வெளியிட வேண்டும் என ஆசைப்பட்டார். இதை இயக்குநர் திருலோகசந்தரிடம் கூறியதும், ‘‘கதை, திரைக்கதை, வசனம் எல்லாம் முழு ஸ்கிரிப்டாக தயாராக இருக்கிறது. அத னால் படப்பிடிப்பை விரைவாக முடிக் கலாம்’’ என்று நம்பிக்கைக் கொடுத்தார். சரவணன் சார் தன் விருப்பத்தை அப்புச்சியிடம் சொன்னதும் அவருக்கும் ஆர்வம் அதிகமானது. ‘‘ஆனால் எம்.ஜி.ஆர் கால்ஷீட்டை எப்படி நமக்கு மொத்தமாக ஒதுக்கித் தருவார்?’’ என்று கேட்டார். சரவணன் சார், ‘‘எம்.ஜி.ஆர் அவர்களிடமே கேட்டுப் பார்த்துவிடுகிறேன்’’ என்று கூறினார்.
என்னிடம் ராமாவரம் தோட்டத்துக்கு போன் போட்டு, எம்.ஜி.ஆர் அவர் களிடம் ‘தான் அவரை நேரில் சந்திக்க விரும்புவதாகவும் எப்போது வரலாம்' என்றும் கேட்கச் சொன்னார் சரவணன் சார். நான் கேட்டேன். அதற்கு எம்.ஜி.ஆர் அவர்கள் ‘‘கால்ஷீட் தேதி விஷயங்கள் என்றால் நீங்கள் மட்டும் வாங்க. வேறு முக்கியமான விஷயம் என்றால் முதலாளியைக் கூட்டிட்டு வாங்க’’ என்றார். தோட்டத்துக்குப் புறப் பட்டோம். சரவணன் சார், எம்.ஜி.ஆரிடம் ‘‘ஒரு முக்கியமான விஷயம். நீங்கள்தான் முடிவு சொல்ல வேண்டும். அது முடிந் தால் சந்தோஷம். உங்களுக்கு சிரமமாக இருந்தாலும் வருத்தப்பட மாட்டோம்’’ என்றார்.
‘‘பில்டப் எதுக்கு முதலாளி. என்ன விஷயம்னு சொல்லுங்க’’ என்றார் எம்.ஜி.ஆர்.
‘‘அன்பே வா படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்யலாம்னு ஒரு ஆசை.’’
‘‘அப்படி ஒரு ஆசையா? சத்யா மூவிஸ்ல சாணக்கியா இயக்கத்தில் ‘நான் ஆணையிட்டால்’ படத்தின் வேலைகள் நடந்துட்டிருக்கு. அதைப் பொங்கலுக்கு வெளியிடலாம்னு திட்டமிட்டிருக்காங்க’’ என்று சொல்லிவிட்டு, ஆர்.எம்.வீரப்பன் அவர்களை அழைத்து சரவணன் சாருடைய விருப்பத்தைக் கூறினார். ஆர்.எம்.வீரப்பன் அவர்கள் செட்டியார் மீதும், சரவணன் சார் மீதும் தனி பிரியம் கொண்டவர். அதனால் அவருடைய படத்தை தள்ளி வைத்துக்கொள்ள சம் மதித்தார். சரவணன் சார் மகிழ்ச்சியோடு அவர்களுக்கு நன்றி கூறினார்.
சரவணன் சார் என்னிடம் ‘‘முத்துராமன் மொத்தமா எவ்வளவு நாட்கள் கால்ஷீட் தேவைப்படும்னு சொல்லுங்க?’’ என்றார். நான் ‘’70 முதல் 80 நாட்கள் தேவைப்படும்’’ என்றேன். உடனே எம்.ஜி.ஆர் அவர்கள், ‘‘முதலாளி அதெல்லாம் விடுங்க. உங்க ஆசைப்படி ‘அன்பே வா’ பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும்’’ என்றார். அப்படி சொன்னதோடு மட்டுமின்றி விரைந்து படத்தை முடிக்க பேருதவியாக இருந்தார். எங்கள் பணிகளையும் வேகப்படுத்தினார். இரவு, பகலாக வேலை பார்த்து படத்தின் நிர்வாக இயக்குநராகவே எம்.ஜி.ஆர். மாறிவிட்டார். பட வேலைகளில் அப்படி ஓர் ஈடுபாட்டுடன் உழைத்தார்.
- இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் .
( படம் : எம்ஜிஆருடன் ஏவிஎம் சரவணன் )


