நாகை மாவட்டம் நாகூரில் உலக பிரசித்தி பெற்ற ஆண்டவர் தர்கா உள்ளது. உலகம் முழுவதிலும் இருந்து இந்த தர்காவுக்கு மக்கள் வந்து பிரார்த்தனை செய்கிறார்கள்.
மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் இந்த தர்காவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி 469-வது ஆண்டாக கந்தூரி விழா கடந்த 21-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் நேற்று இரவு 7.30 மணியளவில் நாகை யாஹூசைன் பள்ளிவாசல் தெருவில் இருந்து புறப்பட்டது. முன்னதாக சிறப்பு துவா ஓதப்பட்டு புறப்பட்ட சந்தனக்கூடு, அலங்கரிக்கப்பட்ட கப்பல்கள், செட்டிபல்லக்கு, சாம்பிராணி சட்டி, பெரிய ரதம், சின்னரதம் உள்ளிட்ட அலங்கார ரதங்களுடன் நாகையின் முக்கிய வீதிகள் வழியாக சென்றது.
ஊர்வலத்திற்கு முன்பாக பலர் பாரம்பரிய நடனம் ஆடியபடி சென்றனர். வழிநெடுகிலும் உள்ளூர், வெளியூர், பல்வேறு மாநிலங்களில் இருந்து திரளானோர் நின்று சந்தனக்கூடு ஊர்வலத்தை கண்டு களித்தனர். இன்று அதிகாலை ஆண்டவர் சமாதியில் சந்தனம் பூசுவதற்காக நாகூர் தர்கா அலங்கார வாசலை வந்தடைந்தது. இந்நிகழ்வில் பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.
இதனிடையே, உலகப் புகழ்பெற்ற நாகூர் தர்காவின் சந்தனம் பூசும் வைபவம் விழாவுக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் ஆட்டோவில் வந்தார். அதனை தொடர்ந்து நாகூர் ஆண்டவர் சமாதியில் நீண்ட நேரம் காத்திருந்து வழிபட்டார்.
இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


