TamilsGuide

இந்தியப் பெருங்கடலில் நிலநடுக்கம்  இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை

இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா தீவுக்கு அப்பால் இந்தியப் பெருங்கடலில் இன்று (27) காலை 6.6 ரிக்டர் அளவுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. 

இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்று இலங்கை வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையம் உறுதிப்படுத்தியுள்ளது.

இலங்கையின் அனைத்து கடலோரப் பகுதிகளும் தற்போது பாதுகாப்பாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த அறிவிப்பு தொடர்புடைய தேசிய மற்றும் சர்வதேச நிறுவனங்களுடன் கலந்தாலோசித்து வெளியிடப்பட்டுள்ளது.

அண்மைய வாரங்களில் இப்பகுதியில் ஏற்படும் முதல் மிதமான நிலநடுக்கம் இதுவாகும்.

இந்தோனேசியப் பகுதியிலிருந்து பல நூறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்தியப் பெருங்கடலில் நவம்பர் 9 ஆம் திகதி 4.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவானது.

அதேநேரம், கடந்த தசாப்தங்களில், மிகப் பெரிய மற்றும் மிகவும் பேரழிவு நிலநடுக்கம் 2004 டிசம்பர் 26 ஆம் திகதி வடக்கு சுமத்ராவில் கடலுக்கு அடியில் ஏற்பட்டது.

9.3 ரிக்டர் அளவிலான இந்த நிலநடுக்கம், இந்தியா, இந்தோனேசியா, இலங்கை, தாய்லாந்து மற்றும் பிற இந்தியப் பெருங்கடல் கடற்கரைகளை தாக்கி 220,000 க்கும் மேற்பட்ட மக்களைக் கொன்ற மிகப்பெரிய சுனாமியைத் தூண்டியருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment