TamilsGuide

மாவீரத்தின் மகத்துவத்துவத்தை தமிழர் தேசம் உணர்த்தி நிற்கிறது

நவம்பர் 27 தமிழ் தேசிய மாவீரர்களை கூட்டாக நினைவு கூரும் நாள். ஈழத் தமிழ் மக்களின் விடுதலைக்காக தம்முயிர்களை ஈந்த மானமா மறவர்களை எங்கள் தேசமே பூசிக்கின்ற அதியற்புத நாள். இந்த நாள் என்பது ஈழத்திலிருந்து உலகம் முழுவதும் பரந்து வாழ்கின்ற தமிழ் மக்களின் மனங்களில் ஈரத்தையும் வீரத்தையும் பிறப்பிக்கின்ற நாள். எனவே மாவீரர்களின் நினைவுகளுடன் ஈழத் தமிழ் மக்களாகிய நாம் எமது கடமைகளை வினைத்திறனுடன் நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறத்துகின்ற வலிமைமிகுந்த நாளாகவும் அமைகின்றது.

இம்முறை மாவீரர் நாளில் தமிழர் தேசம் என்றுமில்லாத வகையில் பேரெழுச்சியுடன் காணப்படுகின்றமை மாவீரர் பெற்றோர்களையும் உருத்துடையோரையும் பெருமிதம் கொள்ளவைக்கும். தமிழர் தேசம் எங்கும் சிவப்பு மஞ்சள் கொடிகள் கட்டப்பட்டுள்ளதுடன் எங்கும் மாவீர்ர்களை நினைவுகூறுகின்ற பாடல்களின் ஒலி நம் வாழ்வுமீதும் மீண்டேழுதல்மீதும் கொண்டுள்ள மிகப்பெரிய நம்பிக்கையை உணர்த்துகின்றது.

நினைவுகூர்தல் என்பது உலகம் எங்கும் உள்ள மக்களின் அடிப்படை உரிமை. அது மக்களின் உணர்வு வெளிப்பாட்டின் ஆற்றுப்படுத்தல். ஈழத் தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் நினைவேந்தல் என்பது பண்பாட்டு உரிமை. அதனை உலகம் முழுவதுமுள்ள எமது மக்கள் அனைத்துச் சமூகங்களுக்கும் உணர்த்தும் வகையில் நினைவேந்தலில் ஈடுபட்டுள்ளனர்.

உன்னத இலட்சியத்திற்காக தமது இளமையை, தமது வாழ்வை, தமது இன்பங்களைத் துறந்து களமாடி மாண்டவர்கள் மாவீரர்கள்.  தேசவிடுதலை ஒன்றே தங்கள் பெருஇலட்சியம் என்று மண்ணில் விதையான மாவீரர்களை பல இடர்பாடுகளின் மத்தியிலும் மக்கள் நினைவேந்தல் செய்வதுதான் மாவீரத்தின் மகத்துவமாகும்.

எங்கள் தேசத்தை, மக்களின் வாழ்வை வலுவூட்டும் பணிகளை இன்னமும் பேரேடுப்பில் செய்ய வேண்டும் என்ற உந்துதலை விதைக்கும் இப்புனித நாளில் ஆகுதியான எங்கள் உயிரிலும் மேலான மாவீரர்களுக்கு அகவணக்கத்தை செலுத்துகின்றேன்.

நிமால் விநாயகமூர்த்தி,

தலைவர்,

அனைத்துலகத் தமிழர் பேரவை.

அன்புடன்
அனைத்துலகத் தமிழர் பேரவை 
communication@tamilfederation.org

 

 

 

Leave a comment

Comment