தலைப்பை பார்த்ததும் கொஞ்சம் ஷாக்காகத்தான் இருக்கும். சிவாஜி எப்போது சின்னத்திரையில் நடித்தார் என்ற குழப்பம் வரும். ஆனால் இது உண்மை. மராட்டிய மன்னன் சிவாஜியாக நாடகத்தில் நடித்த சிவாஜி கணேசனுக்கு, மாராட்டிய வீரர் சிவாஜி வாழ்க்கையை வீரபாண்டிய கட்டபொம்மன் படம் போன்று சினிமாவாக எடுத்து அதில் நடிக்க வேண்டும் என்று தீராத ஆசை இருந்தது. ஆனால் சில படங்களுக்குள் வந்த நாடகத்தில்தான் அவர் சிவாஜியாக நடித்தாரே தவிர முழுநீள திரைப்படத்தில் நடிக்கவில்லை. கடைசி வரை அவரது ஆசை நிறைவேறவில்லை.
மராட்டிய மன்னர் சிவாஜி மன்னராக பதவியேற்று 300-மாவது ஆண்டு விழாவை மராட்டிய அரசு கோலாகலமாக கொண்டாட முடிவு செய்தது. இதையொட்டி மாவீரன் சிவாஜி வாழ்க்கையை ஒரு டெலிபிலிமாக தயாரித்து அதனை தொலைக்காட்சியில் ஒளிபரப்ப முடிவு செய்தது. சிவாஜியாக நடிக்க இந்தியா முழுவதும் நடிகர்களை தேடியது. யாருமே செட்டாகவில்லை. கடைசியாக சிவாஜி கணேசன் பற்றி கேள்விப்பட்டு அவரை நடித்து தர சொன்னது.
இதை ஏற்றுக் கொண்ட சிவாஜி அந்த டெலிபிலிமை என் சொந்த செலவில் எடுத்து தருகிறேன் என்று கூறி சிவாஜி பிலிம்ஸ் சார்பில் அதனை தயாரித்து, நடித்தார். தஞ்சைவாணன் இதற்கான திரைக்கதை வசனத்தை எழுதினார். ஏவி.மெய்யப்ப செட்டியார் தன் செலவில் பிரமாண்ட செட் போட்டுக் கொடுத்தார். இந்த டெலி பிலிமின் மராட்டிய பதிப்பை பாபா சாகில் புரந்தரே எழுதினார். 1974ம் ஆண்டு ஜூலை 21ந் தேதி இந்த டெலிபிலிம் மும்பை தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. 1975ம் அண்டு சென்னையில் தொலைக்காட்சி நிலையம் தொடங்கப்பட்டதும் இங்கு அது ஒளிபரப்பப்பட்டது.
நன்றி 🙏 திரு. Subramani


