TamilsGuide

ஐம்பதுகளின் தொடக்கத்தில்தான் நடனத் தாரகை இ.வி.சரோஜாவும் சினிமாவில் நுழைந்த

எம்.ஜி.ஆரும் சிவாஜியும் நாயகர்களாக உருவாகிவந்த ஐம்பதுகளின் தொடக்கத்தில்தான் நடனத் தாரகை இ.வி.சரோஜாவும் சினிமாவில் நுழைந்தார். 1952-ல் வெளியான ‘என் தங்கை’ படத்தில் எம்.ஜி.ஆரின் தங்கையாக அறிமுகமானார் சரோஜா.

அசோகா பிக்சர்ஸ் இந்த நாடகத்தைத் திரைப்படமாகத் தயாரிக்க முன்வந்தது. அந்த நாடகத்தில் நடித்துவந்த சிவாஜியையே படத்திலும் ஒப்பந்தம் செய்ய விரும்பினார்கள். அப்போது அவர் நேஷனல் பிக்சர்ஸ் பெருமாள் முதலியாரின் ‘பராசக்தி’ படத்தில் நடித்துக் கொண்டிருந்தார்.

“ பராசக்தி கதையிலும் அண்ணன் தங்கை பாசம் இருக்கிறது. ‘என் தங்கை’யிலும் அதுதான் கருப்பொருள். எனவே இதில் சிவாஜி மீண்டும் நடிப்பதைவிட எம். ஜி. ஆர் பொருத்தமாக இருப்பாரே” என்றார் பெருமாள் முதலியார். அதை ஏற்று எம்.ஜி. ஆரைத்தேர்வு செய்தனர். கதாநாயகனுக்கு அடுத்து கதையைத் தோளில் சுமந்து செல்வது தங்கையின் வேடம்.

ஆனால் பொருத்தமான நடிகை கிடைக்கவில்லை. அதனால் ஒரு புதுமுகத்தையே தேர்வுசெய்துவிடுவது என்று முடிவு செய்தனர். அப்போது மயிலாப்பூரில் புகழ்பெற்ற நாட்டியக் கலாசேத்திரமாக இருந்தது வழுவூர் பி. ராமையாப் பிள்ளையின் நடனப்பள்ளி. அதன் ஆண்டு விழாவில் அவருடைய மாணவி பி.இ. சரோஜாவின் நாட்டியத்தைக் கண்டு இவர்தான் தங்கை மீனாவாக நடிக்க வேண்டும் என்று முடிவு செய்தார்கள். அறிமுகப் படம் மாபெரும் வெற்றிபெற்றது. பராசக்திக்கு முன்பே வெளியாகி எம்.ஜி.ஆருக்கும் புகழைக் கொண்டுவந்தது. பார்வையற்ற பெண்ணாக நடித்து அறிமுகப் படத்திலேயே பெரும் புகழ்பெற்ற இ. வி. சரோஜா தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவர்.

அறிமுகப் படம் தந்த புகழ் அவரை மடமடவென்று புகழ்பெற்ற நட்சத்திரமாக்கியது. ஐம்பதுகளில் ஒல்லியான உடலமைப்பு கொண்ட கதாநாயகிகள் அபூர்வம். இ.வி. சரோஜாவுக்கு ஒல்லியான உடற்பாங்குடன் அகலமான நெற்றி, நீளமான முகம், கருணையும் கவர்ச்சியும் இணைந்த கண்கள், கொவ்வை இதழ்கள், குளிர் சிரிப்பு என்று ரசிகர்களைத் தன் கண்ணியமான அழகினால் கவர்ந்தார்.

டி.ஆர். ராமண்ணா இயக்கத்தில் எம்.ஜி. ஆர், டி.ஆர். ராஜகுமாரி, நடித்த ‘குலேபகாவலி’ படத்தில், முக்கிய வேடத்தில் நடித்தார். அந்தப் படத்தில் “சொக்கா போட்ட நவாப்பு... செல்லாதுங்க ஜவாபு” என்ற பாடலுக்கு பாடி ஆடிய நடனம், சரோஜாவைப் பட்டிதொட்டியெங்கும் பிரபலப்படுத்தியது.

பின்னர் எம்.ஜி. ஆருக்கு வெள்ளிவிழா காவியமாக அமைந்த ‘மதுரை வீரன்’ படத்தில் கதாநாயகி பொம்மியின் (பானுமதி) தோழியாக நடித்தார். அந்தப்புரத்துக்குள் நுழைந்துவிடும் புள்ளிமானைத் துரத்திவரும் மதுரைவீரன் எம்.ஜி.ஆரை “வாங்க மச்சான் வாங்க, வந்த வழியைப் பார்த்துப் போங்க” என்று பகடி செய்யும் விதமாக இ.வி.சரோஜா பாடி ஆடிய நடனம் அமோக வரவேற்பைப் பெற்றது.

இதேபடத்தில் பானுமதி, பத்மினி ஆகியோர் ஆடிய நடனங்கள் இடம்பெற்றிருந்தாலும் இ.வி. சரோஜாவின் நடனமே ரசிகர்களைத் திரையரங்குக்குத் திரும்பத் திரும்பச் சுண்டி இழுத்தது. இ. வி. சரோஜாவின் நடனக் காட்சி இருந்தால் அந்தப் படம் வெற்றிபெறும் என்று நம்பப்பட்டது. இதனால் 50க்கும் அதிகமான படங்களில் அவரது நடனம் கதையில் பொருத்தப்பட்டது.

மதுரை வீரனுக்குப் பிறகு ‘அமர தீபம்’, ‘ பாவை விளக்கு’, ‘கற்புக்கரசி’, ’எங்க வீட்டு மருமகள்’, ‘தங்கப் பதுமை’, ‘ நீலமலைத் திருடன்’ என்று சரோஜாவுக்குப் புகழைச் சேர்த்த படங்கள் பல. நகைச்சுவை நடிகருடன் ஜோடி சேர்ந்தால் கதாநாயகி ஆக முடியாது என்ற மாயையையும் சரோஜாவே முதலில் உடைத்தார்.

சந்திரபாபுவுடன் மூன்று படங்களில் இணையாக நடித்த அவர், பிறகு எம். ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன், தெலுங்குப் படவுலகில் அக்னிநேனி நாகேஷ்வரராவ் என முன்னணிக் கதாநாயகர்களுடன் இணைந்து நடித்தார். பதினைந்து வயதில் தொடங்கி 26 வயதுவரை மட்டுமே நடித்த இவர், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, சிங்களம் உட்பட சுமார் 60 படங்களில் நடித்திருக்கிறார். சில படங்களுக்கு நடன இயக்குநராகவும் பணியாற்றியிருக்கிறார்.பிரபல தயாரிப்பாளரும் , இயக்குனருமான டி.ஆர்.ராமண்ணாவை திருமணம் செய்து கொண்டார்

தன் சகோதரர் இ.வி. ராஜனுடன் இணைந்து படநிறுவனம் தொடங்கி ‘கொடுத்து வைத்தவள்’ என்ற படத்தைத் தயாரித்தார். ப. நீலகண்டன் இயக்கிய இந்தப் படத்தில் எம்.ஜி.ஆரும், இ.வி.சரோஜாவும் இணைந்து நடித்தனர்.

அந்தப் படத்தில் சரோஜாவின் நடிப்புக்குப் பாராட்டு மழை கிடைத்தது. ஆனால் அதுவே அவரது கடைசிப் படமாக அமைந்தது. சரோஜா ராமண்ணா தம்பதிக்கு நளினி என்ற ஒரே மகள். திருமணத்துக்குப் பிறகு நடிப்பதை நிறுத்திவிட்டாலும் நடனத்தைத் தன் கண்ணென நேசித்ததால் ‘மனோன்மணியம்’ காவியக் கதையை நாட்டிய நாடகமாக தயாரித்து இந்தியா முழுவதும் நடத்திக் காட்டி நடனத்திலும் தனது பங்களிப்பைச் திறம்படச் செய்த இவர் கடந்த 2006-ம் ஆண்டு காலமானார் .

- தி இந்து

Leave a comment

Comment