தொழிலை தொழிலாக மட்டும் பார்க்க பழகிய நடிகர் யார் என்றால் அது நமது சிவாஜி கணேசன் அவர்கள் மட்டும் தான்!
ஏ.வி. எம். மின் உயர்ந்த மனிதன் படத்தில் சிவாஜி, மேஜர் தவிர, நடிகர் எஸ். ஏ. அசோகனுக்கு, முக்கியமான பாத்திரம். அந்தப் படம் உருவாகும் நிலையில் இருந்தபோது ஏதோ காரணமாக சிவாஜியுடன் பேசுவதை தவிர்த்திருந்தார் அசோகன்.
முன்பு இருந்தது போன்ற நட்பு இல்லாத சமயம் அது யாரெல்லாம் முக்கிய பாத்திரங்களில் நடிக்கப் போகின்றனர் என்று முடிவான போது அந்தப் படத்தில் அசோகன் நடிக்க இருப்பது சிவாஜிக்கு தெரிவிக்கப்பட்டது. சிவாஜி என்றுமே தன் சொந்த விருப்பு வெறுப்புகளை வெளிக்காட்டி தொழிலை படப்பிடிப்பை பாதிக்க அனுமதித்ததில்லை.
தொழிலை, தொழிலாக மட்டும் பார்க்க பழகியவர். அசோகன் அந்தப் படத்தில் நடிப்பதற்கு எந்தவித தடையோ, குறுக்கீடோ செய்யவில்லை. சிவாஜியும் அசோகனும் பேசிக் கொள்வதில்லை என்ற நிலை இருந்தாலும் இருவரும் இணைந்து நடிக்க வேண்டிய காட்சியில் முழு கவனத்துடன் முழு ஒத்துழைப்புடன் நடித்தனர்.
சிவாஜியின் நண்பராக டாக்டர் வேடத்தில் நடிக்கும் அசோகன் படத்தின் கடைசி காட்சியில் சிவாஜியின் வாழ்க்கையில் உள்ள முக்கிய இரகசியங்களை சொல்லிவிட்டு ‘ஹார்ட் அட்டாக்’கில் இறந்து விடுவார். அந்தக் காட்சி படமாக்கப்பட்ட போது அவ்வளவு திருப்தியாக அந்த காட்சி அமையவில்லை.
படப்பிடிப்பில் இருந்த சிவாஜி படத்தின் இரட்டை இயக்குனர்களான கிருஷ்ணன் பஞ்சுவிடம் ‘உங்களுக்கும் அசோகனுக்கும் ஆட்சேபனை இல்லையென்றால் நான் இந்த கட்சியில் நடித்துக் காட்டலாமா...’ என்று கேட்டார். இயக்குனர்கள் மகிழ்ச்சியோடு சம்மதித்தனர். அந்த டாக்டர் பாத்திரம் எப்படி நடிக்க வேண்டும் என்பதை முழுமையாக நடித்துக் காட்டினார் சிவாஜி. செட்டில் இருந்த அசோகன் மற்றும் இயக்குனர்கள் உட்பட அனைவரும் பிரமித்துப் போயினர்.
சிவாஜி செய்து காண்பித்தவாறே அசோகன் அந்த காட்சியில் நடித்தார். அது அவருக்கு ஏராளமான பாராட்டுகளை பெற்றுக் கொடுத்தது என்று பிரபல திரைப்பட தயாரிப்பாளரும் ஸ்டுடியோ அதிபருமான ஏ. வி. எம். சரவணன் நிகழ்ச்சி ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறார். நடிப்பைப் பொறுத்தவரை சுயநலம் என்ற வார்த்தைக்கு அர்த்தமே தெரியாதவர் சிவாஜி. காட்சி மெருகேறி படம் வெற்றிபெற வேண்டும் என்பது தான் அவருடைய குறிக்கோள். ஆகையால் அவர் நடித்த படத்தின் டைட்டிலே அவருக்கு பொருந்தும். அவன் ஒரு சரித்திரம்!
ராமகிருஷ்ணன் தயாரித்து பீம்சிங் இயக்கிய 1962ல் வெளியான படித்தால் மட்டும் போதுமா படத்தில் சிவாஜிக்கு படிக்காத முரடன் பாத்திரம். அப்படத்தில் இடம்பெற்ற நான் கவிஞனும் இல்லை...’ என்ற பாடல் காட்சியில் ஒரு கட்டத்தில் மாண்டலின் என்ற இசைக் கருவியை இசைத்தபடி பாடுவது போன்ற காட்சி அமைந்திருக்கும். பிரபல மாண்டலின் இசை கலைஞர்களே தோற்று போகுமளவுக்கு அவ்வளவு தத்ரூபமாக அப்பாடல் காட்சியில் நடித்திருப்பார் சிவாஜி.
உயிரற்ற பொருள்களுக்கும் உயிர்கொடுக்கத் தெரிந்தவர். அவர் கைப்பட்டால் எந்த பொருளுக்கும் ஒரு மதிப்பு கிடைக்கும். தீபம் படத்தின் படப்பிடிப்பில் இயக்குனர் கே. விஜயனிடம் சிவாஜி ‘என் கையிலே ஏதாவது ஒரு பொருளை கொடுங்க, ஒரு சின்ன கம்பு மாதிரி இருந்தால் நல்லாயிருக்கும்...’ என்றார்.
இதற்குக் காரணம் நிறைய நடிகர்களுக்கு உள்ள முக்கிய பிரச்சினையே நடிக்கும் போது கைகளை எப்படி வைத்துக் கொள்வது என்பதுதான். அச்சமயத்தில் இம்மாதிரி ஏதாவது ஒரு பொருளை கையில் வைத்து நடிப்பது வசதியாக இருக்கும்.
இதற்கு இரண்டு உதாரணங்களை கூறலாம். அது உயர்ந்த மனிதன் படத்தில் ‘அந்த நாள் ஞாபகம் வந்ததே நண்பனே...’ பாடல் காட்சியில் சிவாஜி கைத்தடியை வைத்திருப்பார் ‘உயர்ந்தவன், தாழ்ந்தவன் இல்லையே நம்மிடம்...’ என்ற பாடல் வரிக்கு சிவாஜி கையை உயர்த்தாமல் அந்த கைத்தடியை மேலே உயர்த்தி கீழே தாழ்த்தி வித்தியாசமாக நடித்திருப்பார். அந்த அக்ஷனை ரசிகர்கள் வெகுவாக ரசித்தனர்.
ராமன் எத்தனை ராமனடி படத்தில் அப்பாவி கிராமத்து மனிதராக இருக்கும் சிவாஜி திரைப்பட நடிகராகி பொப்புலராகி விடுவார். நடிகரான பின் தன் கிராமத்திற்கு வருவார். ஆரம்பத்தில் கிராமத்தில் வசிக்கும் போது கழுத்தில் வடை மாலை, பழங்களை தொங்க விட்டுக் கொண்டு ‘அம்மாடி என்ற பாடலை, அப்பாவியாக பாடுவார்.
பின்னர் அதே பாட்டை பணக்காரராக நடிக்கும் போது கருப்பு பேன்ட் கருப்பு சட்டை அணிந்து கையில் ஸ்டைலாக ஒரு சாட்டையை வைத்து தரையில் தட்டிக் கொண்டு வித்தியாசமான முறையில் பாடுவார்.
நடிகர் திலகம் என்றால் நடிப்பு தெய்வம்
என்று தானே அர்த்தம்!
- பிரசாந்த்!


