1. புதிய பறவை / சிகரெட்,மது, நுனி நாக்கு:
புகையை உள்ளிழுத்து மெல்ல விடுவதிலும், மதுக் கோப்பையை ஏந்தும் பாவனையிலும், நுனிநாக்கை இருவிரலால் மெலிதாய் வருடிக் கொடுப்பதிலும் கூட, ரசனைக்குரிய பாவனைகளில் சிலிர்ப்பூட்ட ஒரு கலைஞனால் இயலும் என்று நிரூபித்தவர் அவர். அங்கே விளிம்பின் வனப்பும் மயக்கத்தின் மென்மையும் அவர் வசப்பட்டன.
2. கர்ணன் / சிம்ம கர்ஜனை:
சீற்றமோ, தூற்றலோ, பதில் கேள்வியோ இன்றி, ஏளனம் செய்பவரை நோக்கி அவர் எழுப்பும் ஒரேயொரு சிம்ம கர்ஜனைப் பேரொலியில் எதிரியை நடுங்கி ஒடுங்க முடியும் என்று காட்டிய வீரன். அது வெறும் குரலின் பலமல்ல; ஆளுமையின் சவுக்கடி .
3. ஞான ஒளி / முரடன் ஆண்டனியின் மிரட்டல்:
இன்ஸ்பெக்டர், துப்பாக்கியின் அதிகாரத்தால் கைதியைப் பணிய வைக்க எண்ணியிருக்க, முரடன் ஆண்டனியாய் அவர் அளித்த பதில் மிரட்டல், ஒற்றை விழி அசைவால் நிகழ்ந்தது.
அது, ஆயுதத்தின் பயத்தை, ஆத்மாவின் கம்பீரத்தால் தகர்த்தெறிந்த அற்புதக் கணம்.
4. கௌரவம் / மௌனத்தின் பதிலடி:
இளைய வழக்கறிஞரின் வாதச் சுழலாலும், வாதியின் தடுமாற்றத்தாலும் பதில் வாதம் எழாத நிலையில், நீதிமன்றத்தின் எதிர்ப்பார்ப்புக்கு மௌனம் காத்து, "இனி கேள்விகள் இல்லை" என்று சொல்லித் திகைக்க வைத்தாரே! அது வெறும் மௌனமல்ல, வார்த்தைகளைக் கடந்த ஞானம்.
5. வீரபாண்டிய கட்டபொம்மன் / நடையின் கம்பீரம்:
அயர்ச்சியால் துயில்கொண்ட மாமன்னன், அரசியல் தூது வந்ததைக் கேட்ட நொடியில், துயில் கலைந்து எழும் துரிதமும், விரைந்து செல்லும் நடையிலே அவர் காட்டிய வீரமும், பிரமிப்பும் அலாதியானது. அவரது நடை வெறும் அசைவல்ல; கம்பீரத்துக்குள் புகுந்த ஆன்மா.
6. தெய்வமகன் / கண் அசைவின் காட்சி:
அருவருப்பாய்ப் பிறந்த தன் மகனைக் கொல்லச் சொன்னதற்காய் வருந்தி, பல வருடங்களுக்குப் பின் மருத்துவரிடம் செல்லும் தந்தை. மருத்துவர் மாடியிலிருந்து இறங்கி வருகிறார் என்ற காட்சியை, தன் கண் இமையின் அசைவால் மட்டுமே நமக்குப் புரிய வைத்து, அந்த இடைவெளியின் உணர்வுகளை நம் மனதில் நிரப்பிய உணர்ச்சிப் பிரவாகம் .
7. சிவந்த மண் / புரட்சியின் சல்யூட்:
நாட்டைச் சீரழிக்கும் சர்வாதிகார ஆட்சியில், தந்தை தளபதியாய் இருந்தும், புரட்சியின் நியாயத்தை உணர்ந்து, தானும் இனி ஒரு புரட்சியாளனே என்றுரைத்து அவர் அளித்த அந்த வீர வணக்கத்தின் (சல்யூட்) பாணி அரங்கத்தை அதிரச் செய்தது. அது தந்தைக்குரிய பவ்யமல்ல; புரட்சிக்குரிய சத்தியப் பிரமாணம் .
8. உத்தமபுத்திரன் / ஊஞ்சலின் உல்லாசம்:
நாட்டின் நிலையறியாமல் இன்பலோகத்தில் திளைக்கும் உல்லாச வேந்தன், தாயின் அறிவுரையைக் கேட்காதது போல, ஊஞ்சலாடி அதிலும் இன்பம் தேடுவதுபோல் நடித்தாரே! அந்த நடிப்பு, அறிவை அறியாத குழந்தையின் பாவனை.
உல்லாசத்தின் உன்னத வெளிப்பாடு.
9. குங்குமம் / ராக ஆலாபனை:
கச்சேரியில் பாட்டின் அடியை மறந்த பெண் பாடகிக்காக, அடுத்த அடியைத் தாம் தொடங்கி, அந்த ராகத்தின் ஆலாபனையைத் தன் முக பாவனையில் வடித்துக் காட்டிய அழகு! அது பாடகர்களால் கூடச் செய்ய இயலாத, இசையின் தரிசனம் திரையில் கண்ட உன்னதக் கணம்.
10. தங்கப்பதக்கம் / போஸின் கம்பீரம்:
"நான் திரும்பிப் பழக்கமில்லை; என்னை நோக்கித் திரும்பிப் பார்க்க வைத்ததுதான் பழக்கம்" என்று பேசி, மாடிப்படியில் நின்று அவர் தந்த அந்த நிற்கும் கோணமும், நிமிர்ந்த பார்வையும் ! அதில் கூட ஒரு அற்புதம் செய்தாரே. அது ஆளுமையின் இலக்கணம்
11. பாசமலர் / பென்சில் சீவும் நுணுக்கம்:
தொழிலாளர் பிரச்சினை பற்றிய கடுமையான உரையாடல் நிகழும் சூழலில், அவர் பென்சில் சீவுவதில் காட்டிய கவனமும், நுணுக்கமும் என்னே! அதில் அவர் ஒரு பாவனைக் காவியத்தையே படைக்க முடியும் என்று நிரூபித்தார். அது பதட்டத்தைக் கையாளும் மென்மை .
12. எங்க ஊர் ராஜா / 'ஷ்ஷ்ஷ்ஷ்' என்ற உச்சரிப்பு:
'யாரை நம்பி நான் பொறந்தேன்' பாடலில், இடி மற்றும் மழைச் சத்தங்களுக்குப் பின் வரும் 'ஷ்ஷ்ஷ்ஷ்' என்ற ஒற்றை உச்சரிப்பிலேயே நம்மை உலுக்கியெடுத்தாரே! பல ஆயிரம் வார்த்தைகள் சொல்ல முடியாத உணர்வை, ஓரெழுத்தால் வியந்து போற்ற வைக்க அவரால் மட்டுமே முடிந்தது.
13. பாலும் பழமும் / ஹம்மிங்கின் அற்புதம்:
'நான் பேச நினைப்பதெல்லாம்' பாடலில் வரும் 'ம்ம்ம்' என்ற ஹம்மிங்கை, ஒரு அழகான தலையசைப்பில் அவர் அற்புதம் ஆக்கினாரே! ஒரு சாதாரண ஒலிக்கு கூட காதலைச் சொல்லும் மென்மையை வழங்கியவர் அவர்.
14. எதிரொலி / கண்களின் வாதம்:
வழக்கறிஞரின் பலம் அவர் வாதம். அவர் வார்த்தைகளால் வந்த வாதத்தை, கண்களாலேயே காட்டி, வாதம் இவ்வாறு புரியலாம்; இதுவும் ஓர் புதிய கலை என்று நிரூபித்தாரே! அவரது கண்கள் வெறும் அங்கம் அல்ல; தர்க்கத்தின் மொழி
15. படிக்காத மேதை / வெகுளித்தனம்:
கபடம் அறியாத வெகுளி ரங்கன், வளர்ப்புத் தந்தையின் கட்டளையே வேதமெனக் கொண்டு, குடும்பப் பிரச்சினைக்காக வீட்டை விட்டுச் செல்கையில், எதற்கென்ற கேள்வியே இன்றிப் பயணிக்கும் அந்த வெகுளித்தன நடிப்பின் உச்சம்! அது தூய்மையின் எளிமை .
16. ராஜா / அடியை வாங்கும் வீரம்:
அடி கொடுப்பதுதான் வீரம் என்று காட்டி வந்த திரையுலகில், அடியை வாங்குவதிலும் ஒரு வீரத்தையும், பாணியையும் காட்டியவர் அவர். அவரது அடி வாங்கும் பாவனை, உடலின் வலிமைக்கு மேலான மனதின் வீரம்
17. மனோகரா / நொடிப்பொழுதில் மாறுதல்:
அன்னையை அவமதித்தோரைக் கண்டு கண்களில் கனல் கக்கி வெகுண்டெழுந்தவர், "இன்னுமா பொறுமை?" என்று நோக்க, இப்போதுதான் பொறுமை என அன்னையின் சொல் கேட்டதும், கனல் கக்கிய அதே கண்கள் அடுத்த நொடியே அந்த ஏமாற்றத்தையும், பணிவையும் காண்பிக்குமே! அது நொடிப்பொழுதில் நிகழ்த்தப்பட்ட உணர்ச்சிப் பிரவாகம்.
18. தீபம் / சாந்தமான எச்சரிக்கை:
ராமதாஸை அழைத்து எச்சரிக்கும் காட்சியில், கோபத்தை மிரட்டி உருட்டித்தான் சொல்ல முடியுமா? பவ்யமாக, சாந்தமாகச் சொல்லி, அதே நேரத்தில் மிரட்டவும் காண்பித்த நடிப்பின் ஆழமும், அமைதியும் என்னே! அது அதிகாரத்தின் மெல்லிய அம்பு.
19. பராசக்தி / தூக்கமும் விழிப்பும் :
விசாரணைச் சூழல். சட்டத்தின் கெடுபிடிகளும், கேள்விகளின் நெருக்கடியும் சூழ்ந்த வேளையில், அவர் அளித்த பதில், இயல்பின் சிகரமாய் ஒளிரும்.
உறக்கத்தில் ஆழ்திருந்த மனிதனை எழுப்பினால், அவன் தன் விழிகளைத் திறந்து முழிப்பது தான் உலகின் நியதி. அதைக் கடந்து, வேறென்ன செயல் புரிய முடியும்? இந்த எளிய உண்மையை போலீஸ் அதிகாரியை நோக்கியே அவர் திருப்பி அளிப்பார்.
அந்தக் கணத்தில் அவர் நடிப்பது போல் தோன்றாது; மாறாக, உறங்கிக் களைத்த ஒருவன் இயல்பாகப் பேசும் தொனியிலேயே அது வெளிப்படும். அதில் ஆவேசமோ, போலித்தனமோ இல்லை. வெறும் கேள்வியும் இல்லை. ஒருவித நகைச்சுவையும், சர்வ சாதாரணமும் கலந்த அலாதி பாவமாக அது அமையும்.
ஆம், ஒருவன் முழிப்பதைத் திரையில் காட்டுவது கூட படைப்பூக்கத்தின் உச்சமாகக் கருதப்படலாம் என்று அந்த ஒற்றை வரியிலும், இயல்பான விழிகளின் திறப்பிலும் நிரூபித்தாரே,
அவர்தான் சிவாஜி!
செந்தில்வேல் சிவராஜ்


