கோறளைப்பற்று பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட கிராமங்களில் தொல்பொருள் திணைக்களத்தினால் நடப்பட்ட பெயர்ப்பலகைகளை அகற்றியவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று சபையில் அறிவித்துள்ளார்.
மட்டக்களப்பு, போரதீவுப்பற்று பிரதேசத்தில், கடந்த 21ஆம் திகதி தொல்பொருள் திணைக்களம் பெயர்ப் பலகை ஒன்றை நாட்டியிருந்தது.
மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேசத்தில் உள்ள 35ஆம் கிராமம் கண்ணபுரத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றிருந்தது.
எனினும் பிரதேசசபை தவிசாளர் உப தவிசாளர் உறுப்பினர்கள், மற்றும் கிராம பொதுமக்களின் தலையீட்டினால் நிறுத்தப்பட்டிருந்தது.
கடந்த 21ஆம் திகதி போரதீவுப்பற்று பிரதேசசபை தவிசாளர் வி.மதிமேனன், மன்முணை தென்எருவில் பற்று பிரதேசசபையின் தவிசாளர் வினோராஜ், போரதீவுப்பற்று பிரதேசசபையின் உப தவிசாளர் த.கயசீலன் மற்றும் பிரதேசசபையின் உறுப்பினர்கள் கிராமத்து பொதுமக்கள் என பலர் சம்பவ இடத்திற்கு சென்றிருந்ததுடன் எதிர்ப்பினையும் வெளியிட்டிருந்தனர்.
குறிப்பாக தொல்லியல் திணைக்களத்தின் ஊடாக மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொல்லியல் பகுதியென அடையாளப்படுத்தப்பட்டு பெயர் பலகை நடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
மக்களின் எதிர்ப்பினையும் மீறி பெயர்ப்பலகையை நடுவதற்கு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது போரதீவுப்பற்று பிரதேசசபையினர் உறுப்பினர்கள் கடுமையான எதிர்ப்பினை தெரிவித்த நிலையில் இரு பகுதியினருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.
இதனை மீறி தொல்லியல்திணைக்களம் பெயர்பலகையினை நாட்டிச் சென்றுள்ளது.
இதனை தொடர்ந்து கடந்த 22ஆம் திகதி மாலை பெயர்ப் பலகை பிரதேச சபை தவிசாளர் உட்பட்ட உறுப்பினர்களும் பொதுமக்களும் இணைந்து அகற்றியுள்ளனர்.
போரதீவுப்பற்று பிரதேச சபை தவிசாளர் மண்முனை தென்எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளர் உட்பட பிரதேச சபையின் உறுப்பினர்கள் மற்றும் கிராம மக்கள் இணைந்து அதனை அகற்றியிருந்தனர்.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்றிருந்த தொல்பொருள் திணைக்களத்தினர் நிலைமைகளை ஆராய்ந்த பின்னர் அங்கிருந்து வெளியேறியிருந்தனர்.
இதன்போது திகிலிவெட்டை. சாராவெளி, பெண்டுகள் சேனை, முருங்கன் தீவு போன்ற இடங்களில் அமைக்கப்பட்டிருந்த பெயர் பலகைகளும் அகற்றப்பட்டன.
22ஆம் திகதி இந்த செயற்பாடு மேற்கொள்ளும் போது இரவு நேரம் ஆனதை தொடர்ந்து பெயர்பலகைகள், அதற்றும்பணி இடை நிறுத்தப்பட்டு மீண்டும் நேற்றையதினம் அதாவது 23ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
பிரதேச சபையின் அனுமதியின்றி இவை அமைக்கப்பட்டதாகவும் பிரதேசத்தில் வாழ்கின்ற மக்களின் மொழியை முன்னுரிமைப்படுத்தாமல் பெயர் பலகை அமைக்கப்பட்டுள்ளதாகவும்
இது தமிழ் இனத்திற்கு செய்யும் துரோகம் என்றும் தொல்லியல் என்று இடங்களை அடையாளப்படுத்திவிட்டு எதிர்காலத்தில் குறித்த பிரதேசங்களை தொல்லியல்
திணைக்களத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கு முயற்சி மேற்கொள்ளப்படுவதாக தவிசாளர் குற்றம் சுமத்தியிருந்தார்.
இந்நிலையிலேயே இந்த சம்பவம் இன்றைய நாடாளுமன்றத்தின் வரவு செலவு திட்டத்தின் குழுநிலை விவாதத்தின் பேர்து பேசுபொருளாக விவாதிக்கப்பட்டிருந்தது.
கோறளைப்பற்று பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட கிராமங்களில் தொல்பொருள் திணைக்களத்தினால் நடப்பட்ட பெயர்ப்பலகைகளை அகற்றியவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால சபையில் அறிவித்தார்.


