TamilsGuide

பலத்த மழை வீழ்ச்சினால் நிரம்பி வழியும் நீர்த்தேக்கங்கள் - மக்கள் அவதானம்

குருணாகல் மாவட்டத்தின் மஹாஓயா பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் அதிக மழை வீழ்ச்சிப் பதிவாகியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கிரிஉல்ல, பொல்கஹவெல, படல்கம போன்ற இடங்களில் சுமார் 100 மி.மீ மழை பெய்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

ஏனைய மாவட்டங்கள் மற்றும் ஆற்றுப்படுகைகளில் கணிசமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

நில்வலா ஆற்றின் கீழ்ப் பகுதியில் 50 மி.மீ மற்றும் ஜின் கங்கை, களு கங்கை, களனி, அத்தனகலு ஓயா, யாங் ஓயா, தெதுரு ஓயா மற்றும் மல்வத்து ஓயா ஆகிய பகுதிகளில் 50-75 மி.மீ. மழை வீழ்ச்சியும் பதிவாகியுள்ளது.

இதனால், பல நீர்த்தேக்கங்களில் நீர் மட்டம் அதிகமாக இருப்பதாக நீர்ப்பாசணத் திணைக்களத்தின் பொறியாளர் எல்.எஸ். சூரியபண்டார தெரிவித்தார்.

அதேநேரம் நில்வலா, ஜின் மற்றும் களு கங்கைகள், குடா கங்கைகள், அத்தனகலு ஓயா, மகா ஓயா மற்றும் தெதுரு ஓயா ஆகிய ஆறுகளின் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். 

மேலும், வரும் நாட்களில் இந்த நீர்த்தேக்கங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

கடந்த சில வாரங்களாக ஈர மண்டலத்தில் உள்ள பல ஆற்றுப் படுகைகளில் நீர் மட்டம் அதிகமாக இருப்பதாகவும், இதனால் பல தாழ்வான பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதாகவும் அவர் கூறினார். 

தற்போதைய வழக்கமான மழை பெய்தாலும், அந்தப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் அவர் எச்சரித்தார்.

நீர்ப்பாசனத் திணைக்களத்துக்கு சொந்தமான 73 முக்கிய நீர்த்தேக்கங்களில், 9 நீர்த்தேக்கங்களின் நீர் ஏற்கனவே வெளியேற்றப்பட்டு வருவதாகவும், அதே நேரத்தில் தெதுரு ஓயா, ராஜாங்கனை மற்றும் தப்போவ போன்ற நீர்த்தேக்கங்கள் கணிசமான அளவு நீரை வெளியேற்றி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலதிகமாக ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் உள்ள பந்தகிரிய, யோதா வெவ மற்றும் திஸ்ஸ வெவ போன்ற நீர்த்தேக்கங்களும் சாதாரண அளவில் தண்ணீரை வெளியேற்றுவதாகவும், இதன் காரணமாக, ஆற்றுப் படுகைகளின் கீழ் பகுதிகளில் அதிக நீர் மட்டம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஒட்டுமொத்தமாக, நாட்டின் நீர்த்தேக்கங்கள் சுமார் 55% கொள்ளளவுக்கு நிரம்பியுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
 

Leave a comment

Comment