சனிக்கிழமை (22) மத்திய மாகாணத்தில் ஏற்பட்ட மண்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஐக்கிய அரபு எமீரகம் இலங்கையுடன் ஒற்றுமையுடன் நிற்கிறது என்று தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள ஐக்கிய அரபு எமீரகத்தின் வெளிவிகார அமைச்சு,
இந்த துயரச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கும், அரசாங்கத்திற்கும், இலங்கை மக்களுக்கும் தனது மனமார்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளது.
கொழும்பு-கண்டி பிரதான சாலையில் உள்ள பஹல கடுகன்னாவையில் கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட மண்சரிவில் மொத்தமாக ஆறு பேர் உயிரிழந்தனர்.
இந்த அனர்த்தம் பெரிய அளவிலான மீட்புப் பணியைத் தூண்டியது மற்றும் கடுமையான போக்குவரத்துக்கு இடையூறுகளையும் விளைவித்திருந்தது.
இதேவேளை, நாடு முழுவதும் தொடரும் சீரற்ற வானிலை காரணமாக தேசிய கட்டிட ஆராச்சி நிறுவனம் காலி, களுத்துறை, மாத்தறை, கண்டி, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பகுதிகளுக்கு இரண்டாம் நிலை மண்சரிவு எச்சரிக்கையினை விடுத்துள்ளது.
இந்தப் பகுதியில் உள்ள மக்கள் மண்சரிவு, பாறைகள் உருண்டு விழுதல் மற்றும் மரங்கள் முறிந்து அல்லது சரிந்து விழுதல் தொடர்பில் அவதானத்துடன் இருக்குமாறும் எச்சரிக்கை விடுத்துள்ளது.


