உதட்டில் முத்தம் கொடுக்கும் பழக்கம் எப்போது தோன்றியது என்பது தொடர்பாக நீண்ட காலமாக விஞ்ஞானிகள் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த ஆராய்ச்சியின் போது உதட்டில் முத்தம் கொடுக்கும் பழக்கம் எப்போது தோன்றியது என்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
உதட்டுடன் உதடு சேர்த்து முத்தமிடும் பழக்கம் தோன்றி சுமார் 2 கோடி ஆண்டுகள் ஆவதாக விஞ்ஞானிகள் கண்டு பிடித்து உள்ளனர். மனித குரங்குகள் பற்றி அவர்கள் தொடர்ந்து நடத்தி வந்த ஆய்வில் இந்த ருசிகர தகவலை வெளியிட்டுள்ளனர்.
2 கோடி ஆண்டுகளுக்கு முன்பே 2 குரங்குகள் ஒன்றுடன் ஒன்று வாயை வைத்து அழுத்தின. இதையே முத்தம் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், லண்டன் பல்கலைக்கழக கல்லூரி மற்றும் புளோரிடா தொழில்நுட்ப நிறுவனம் ஆகியவற்றை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் முத்தம் என்பது ஒரு இனத்துக்கு மட்டும் இல்லை என்று தெளிவுப்படுத்தி உள்ளனர்.
அதாவது முத்தமிடுதல் என்பது மனிதர்கள் இந்த உலகுக்கு வருவதற்கு முன்பே இருந்துள்ளது. மனிதர்கள் மட்டுமின்றி சிம்பன்சி குரங்குகள், போனோபோ குரங்குகள் போன்றவை அனைத்தும் முத்தமிடுகின்றன.
மனிதர்கள் வருவதற்கு முன்பு மனிதர்களை போலவே இருக்கும் நியாண்டர்தால் என்ற இனம் வசித்துள்ளது. அந்த நியாண்டர் தால்களும் ஒன்றுக்கொன்று முத்தமிட்டு இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். மேலும் நியாண்டர் தால்கள் வசிக்கும் காலத்திலேயே மனிதனும் தோன்றி விட்டதால் மனிதர்களும், நியாண்டர்தால்களும் ஒருவருக்கொருவர் முத்தமிட்டிருக்க வாய்ப்பு இருப்பதாகவும் ஆராய்ச்சியின் முடிவு தெரிவிக்கிறது.
2 கோடி ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய இந்த முத்தமானது பல பரிணாமங்களை தாண்டி இப்போதும் அன்பின் அடையாளமாக திகழ்கிறது.


