TamilsGuide

வடக்கு கிழக்கின் பல்வேறு பகுதிகளிலும் மாவீரர் வாரம் ஆரம்பம்

தமிழ் மக்களின் உரிமைகளுக்கான விடுதலைப் போராட்டத்தில் தமது இன்னுயிர்களை காணிக்கையாக்கிய மாவீரர்கள் வாரம் இன்று, நாட்டில் பல பகுதிகளில் அனுஸ்டிக்கப்பட்டது. குறிப்பாக வடக்கு கிழக்கு மற்றும் கொழும்பிலும் இன்று மாவீரர் வாரம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மாவீரர் வாரத்தின் முதல்நாளில் தலைநகர் கொழும்பில் மாவீரர்களுக்கு உணர்வெழுச்சியுடன் தனது அஞ்சலிகளைச் செலுத்தினார்.

2026ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டத்திற்கான நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்பதற்கென தற்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கொழும்பில் தங்கியுள்ள நிலையில், தலைநகர் கொழும்பிலேயே நாடாளுமன்ற உறுப்பினரால் இவ்வாறு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதேவேளை, மாவீரர் வாரத்தின் ஆரம்ப நாளான இன்றைய தினம் வேலணை சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றது.

சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தின் தீவக நினைவேந்தல் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதேவேளை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள நினைவுத் தூபியில் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.

மேலும், மாவீரர் நினைவு நாளின் வாரத்தின் முதலாவது நாளான நிகழ்வு வவுனியாவிலும் இடம்பெற்றது.
போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் வவுனியா தோணிக்கல் பகுதியில் அமைந்துள்ள அவர்களுடைய அலுவலகத்தில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

முல்லைத்தீவு கடற்கரையில் மாவீரர்களினை நினைவு கூர்ந்து ஈகைச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டிருந்தது.
 

Leave a comment

Comment