திரை உலகில் முக்கியமானவர், வசனம் எழுதுவதில் அரிய சாதனை படைத்தவர், ஆரூர்தாஸ். டப்பிங் படங்களுக்கு வசனம் எழுதுபவராக திரை உலகில் அடியெடுத்து வைத்த ஆரூர்தாஸ், 1000 படங்களுக்கு மேல் (டப்பிங் படங்கள் உள்பட) வசனம் எழுதியுள்ளார். இது, கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறக்கூடிய உலக சாதனை.
சிவாஜிக்கு இவர் வசனம் எழுதிய படங்களின் எண்ணிக்கை 28.
எம்.ஜி.ஆருக்கு எழுதிய படங்கள் 21.
திரை உலகில் நீண்ட காலம் பவனி வந்ததால், இவர் பழகாத நடிகர் - நடிகைகள், டைரக்டர்கள், பட அதிபர்கள், பாடகர்கள், பாடகிகள் அநேகமாக எவரும் இல்லை. கற்பனையான சினிமா கதைகளைவிட, திரை உலகப் பிரபலங்களின் வாழ்க்கை சுவாரசியம் நிறைந்தவை. அவற்றை அறிந்தவர்கள் ஒரு சிலரே. அவர்களில் முக்கியமானவர் ஆரூர்தாஸ். அவர், தன் திரை உலகப் பயணத்தை மட்டுமல்ல, சினிமாவின் மறுபக்கத்தையும் படம் பிடித்துக் காட்டியவர்.
ஒரு தொலைக்காட்சியின் ‘திரும்பிப் பார்க்கிறேன்’ நிகழ்ச்சியில் அவர் கூறியது!
ஒரே நேரத்தில் எம்ஜிஆர் படங்களுக்கும் சிவாஜி படங்களுக்கும் வசனம் எழுதிய ஒரே வசனகர்த்தா நானாகத்தான் இருக்க வேண்டும். 1962-ம் ஆண்டு ஒரே நாளில் நான் வசனம் எழுதிய எம்ஜிஆரின் தாயைக் காத்த தனயன் படமும் சிவாஜியின் படித்தால் மட்டும் போதுமா படமும் ரிலீஸானது. ஒன்று தேவர் படமும் இன்னொன்று ரெங்கநாதன் பிக்சர்ஸ் படமுமாக இருந்த போதிலும், முறையே ஒன்றை எம்ஜியார் பிக்சர்ஸும், இன்னொன்றை சிவாஜி ஃபிலிம்ஸும் சென்னை நகரில் வெளியிட்டிருந்தார்கள். இரண்டுமே சூப்பர் வெற்றியடைந்து 100 நாட்களைத்தாண்டி ஓடிக்கொண்டிருந்தது. மவுண்ட்ரோடு ஏரியாவில் பிளாசாவில் தாயைக் காத்த தனயனும், மிட்லண்டில் படித்தால் மட்டும் போதுமாவும் ரசிகர்கள் கூட்டத்துடன் ஓடிக்கொண்டிருந்தது.
அன்று காலை எம்ஜிஆரின் அடுத்த படத்துக்காக வசனம் எழுதச் சென்றிருந்தபோது எம்ஜிஆர் என்னை அழைத்து, ‘போன படம் வெற்றியடைஞ்சதுக்கு உனக்கு எந்த பரிசும் நான் கொடுக்கலை. இப்போ தாயைக் காத்த தனயன் பெரிய வெற்றியடைஞ்சிருக்கு உனக்கு என்ன பரிசு வேணும்?’ என்று கேட்க, ‘அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்ணே, உங்க அன்பு இருந்தா போதும்’ என்றேன். ‘அப்படியா அப்போ நானே ஏதாவது பண்றேன்’ என்று சொல்லிவிட்டார்.
அன்று பிற்பகல் சிவாஜி பட ஷூட்டிங் போனபோது அவர் என்னை தனியே அழைத்து, ‘ஆரூரான், இதற்கு முந்தி நீ எழுதின பாசமலர் பெரிய வெற்றியாச்சு. அதுக்கு நான் பரிசு எதுவும் தரலை. இப்போ நீ எழுதின படித்தால் மட்டும் போதுமாவும் நல்லா ஓடிக்கிட்டிருக்கு. உனக்கு என்ன பரிசு வேணும் சொல்லு. அண்ணன் கிட்டே இருந்தா தர்ரேன். இல்லேன்னா வாங்கித் தர்ரேன்” என்று கேட்டதும் நான் ஆடிப்போனேன். அதெப்படி அவர்கள் இருவரது மனதிலும் ஒரே மாதிரி எண்ணம் ஓடுதுன்னு ஆச்சரியப்பட்டேன். எம்ஜிஆருக்கு சொன்ன அதே பதிலையே இவருக்கும் சொன்னேன். ‘அன்புதான் நிறைய இருக்கே, வேறென்ன வேணும்?’ என்றார். நான் ஒண்ணும் சொல்லவில்லை.
இரண்டு நாள் கழித்து எம்ஜிஆர் பிக்சர்ஸ் அலுவலகத்தில் இருந்து போன் பண்ணி வரச் சொன்னாங்க. போனபோது எம்ஜிஆர் இருந்தார். ஒரு பெரிய வெள்ளித் தட்டில் நான்கு மூலைகளிலும் சிறிய தங்கத் தகடுகள் பொருத்தியிருக்க, தட்டின் நடுவில் ‘எம்ஜியார் பிக்சர்ஸ் தாயைக் காத்த தனயன் வெற்றிக்கு ஆரூர் தாஸ் அவர்களுக்கு அன்பளிப்பு’ என்று பொறிக்கப்பட்டிருந்த அந்த தட்டை எம்.ஜி.ஆர். வழங்கினார்.
மறு நாள் பிற்பகல் சிவாஜி பிலிம்ஸிலிருந்து அழைப்பு வந்தது. போனால் அங்கே சிவாஜி அவர்கள், மூன்றரை சவரன் எடையுள்ள, உள்ளங்கையைவிட அகலமான தங்கப்பதக்கம் ஒன்றை எனக்கு அணிவித்தார். அதில் ‘சிவாஜி பிலிம்ஸ் படித்தால் மட்டும் போதுமா 100வது நாள் வெற்றிவிழா’ என்று சிவாஜி பிலிம்ஸ் எம்ப்ளத்துடன் பொறிக்கப்பட்டிருந்தது.
அவ்விரண்டு பரிசுகளையும் என் வீட்டு வரவேற்பறை ஷோகேஸில் பக்கம் பக்கமாக வைத்திருக்கிறேன் (அதை தொலைக்காட்சியிலும் காண்பித்தனர்). அவற்றைப் பார்க்கும்போது அந்தப் பரிசுகளை விட அவ்விரண்டு மேதைகளின் முகம்தான் என் கண்ணில் காட்சியளிக்கும்.


