14 படத்தில் ஜோடி, சி.எம். ஆனதால் 10 படம் போச்சு: எம்.ஜி.ஆர் முதல்வர் ஆனதால் பூஜையுடன் நின்ற படங்கள் இதுதான்!
நடிகர் எம்.ஜி.ஆர், தமிழ்நாட்டு முதலமைச்சர் ஆனதால் பூஜையுடன் நின்ற படங்கள் குறித்து நடிகை லதா மனம் திறந்துள்ளார்.
எம்.ஜி.ஆர் காலத்தில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் லதா. இவரின் திரைப்பயணமே எம்.ஜி.ஆருடன் தான் தொடங்கியது. தனது 15 வயதில், எம்.ஜி.ஆரின் இயக்கத்தில் உருவான 'உலகம் சுற்றும் வாலிபன்' திரைப்படத்தின் மூலம் திரையுலகில் கால் பதித்தார். லதாவின் நடனப் பள்ளி நிகழ்ச்சியில் அவர் ஆடிய ஒரு புகைப்படத்தைப் பார்த்து, அவரே லதாவின் தாயாரிடம் பேசி, சம்மதம் பெற்று, நடிக்க வைத்துள்ளார். இதுவே லதாவின் முதல் பட அனுபவம்.
லதா, எம்.ஜி.ஆரின் முதல் கதாநாயகி மட்டுமல்ல, அவரது கடைசிப் படமான 'மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்' படத்திலும் கதாநாயகியாக நடித்தார் என்பது பலருக்கும் தெரியாத ஒரு விஷயம். எம்.ஜி.ஆர் தனது அரசியல் கருத்துக்களைப் பரப்புவதற்காகப் பயன்படுத்திய பல படங்களில் இவரே நாயகியாக இருந்தார். நடிகை லதாவின் நடிப்பு பாராட்டப்பட்டு கலைமாமணி, பிலிம்பேர் போன்ற விருதுகளும் வழங்கப்பட்டது. உச்ச நட்சத்திரமாக இருக்கும் போதே தனது அம்மாவின் ஆசைக்காக தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார் லதா.
அதன்பின்னர் சினிமா வாழ்க்கையும் குடும்ப வாழ்க்கையும் ஒருசேர கவனித்து வந்தார். நடிகை லதா பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். மேலும், பல சின்னத்திரை தொடர்களில் அம்மா, வில்லி கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். நடிகை லதாவை திரைத்துறையில் எம்.ஜி.ஆர் அறிமுகப்படுத்தியதால் பெரிய நடிகர்கள் கூட அவருக்கு மரியாதை கொடுத்து தள்ளி தான் நிற்பார்கலாம். அதேபோன்று நடிகையும் முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் கட்சிக்காக நடிப்பில் இருந்து விலகியதால் அவருடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்று நடிகை லதா நேர்காணல்களில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், எம்.ஜி.ஆர், தமிழ்நாட்டு முதலமைச்சர் ஆனாதால் பூஜையுடன் நின்ற படப்பிடிப்புகள் குறித்து நடிகை லதா மனம் திறந்துள்ளார். அவர் பேசியதாவது, “எம்.ஜி.ஆர் முதலமைச்சர் ஆகும்போது கூட அவருடன் நான் தான் நடித்தேன். ‘மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்’ படத்தில் நடித்தேன். அதன்பிறகு ஒரு பத்து படங்கள் இருந்தது. அதற்குள் எம்.ஜி.ஆர், முதலமைச்சர் ஆகிவிட்டார். அதனால் அந்த படங்கள் பூஜையுடன் நின்றுவிட்டது. எம்.ஜி.ஆர் உடன் மொத்தம் 14 படங்கள் நடித்துள்ளேன்” என்றார்


