1940களின் இறுதியில் தமிழில் பேசும்படம் செல்வாக்குச் செலுத்தத் தொடங்கிய பத்தாண்டுகளுக்குள் ஒரு சாதாரண நடிகராக அறிமுகமான எம்.ஜி. ஆர் வெகு சீக்கிரத்திலேயே தமிழ் சினிமாவின் இணையற்ற நாயகர்களில் ஒருவராக உயர்ந்தது சினிமாவைத் தன் முதன்மையான கலாச்சார அடையாளமாகக் கொண்டிருக்கும் ஒரு சமூகத்தில் ஆச்சரியமான நிகழ்வல்ல. அவரளவுக்கு இல்லையென்றாலும் அவரோடு ஒப்பிடத் தக்கவர்கள் என வேறு யாரையும் சுட்டிக்காட்ட முடியாது எனச் சொல்லும் அளவுக்கு முக்கியமானவர்.
' மக்கள் திலகம் ' என்றோ' புரட்சி நடிகர் ' என்றோ அவர் அழைக்கப்பட்டது வெறும் திரையுலகச் சாதனைகளுக்காக அல்ல. அவர் திரைக்கு அப்பால் முக்கியமானவராகக் கருதப்பட்டார். அவரது ஒரு தரிசனத்திற்காக வாழ்நாள் முழுவதும் ஏங்கிக்கிடந்தவர்கள் நம் சமூகத்தில் உண்டு. தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் கலந்துகொள்வதற்காக அவர் செல்லும்போது வழிநெடுகவும் நாள் கணக்காகக் காத்திருந்த மக்கள் கூட்டத்தைப் பற்றிய கதைகள் இன்றும்கூடக் கேட்கக் கிடைப்பவை. அவர் தர்மத்தின் தலைவன், தமிழ்ச் சமூகத்திற்கு ஆயிரத்தில் ஒருவன், அதன் மன்னாதி மன்னன், இன்றுவரை மாறாத அடையாளம் இது. அவரது ஒரு சொல்லேகூட அதிகாரத்தின் ஆணி வேரை அசைக்கும் அசாதாரணமான சக்தி கொண்டதாக இருந்தது. தி.மு. கழகத்தால் 1967இல் காங்கிரசின் அதிகாரத்தை வீழ்த்த முடிந்ததற்கு எம்.ஜி.ஆரின் இந்த அடையாளமும் ஒரு முக்கியமான காரணம் எனச் சொல்ல முடியும். இந்த வகையில் பார்த்தால் அவர் தாவீதுடன் ஒப்பிடத் தகுந்தவர்.
ஆனால் தாவீதாக அல்ல அவர் தமிழகத்தின் லட்சக்கணக்கான ஏழைகளால் கருணையே வடிவான இயேசுவாகவே பார்க்கப்பட்டார். அவர் ஒரு கொடை வள்ளல். கொடுத்துச் சிவந்த கரங்கள் அவருடையவை. ஆனால் தேவையானபோது அவர் போர்க்கோலம் கொள்ளக்கூடியவர். வெறும் திரைப்படப் பிம்பமல்ல அது. அப்படியிருந்திருந்தால் அதைக்கொண்டு 1977இல் பலம் பொருந்திய திமுகவிடமிருந்து அதிகாரத்தைக் கைப்பற்றி பத்தாண்டுகளுக்கு மேலாக முதல்வராக நீடித்திருக்க அவரால் முடிந்திருக்காது.
.தனது நாற்தாண்டுகாலப் பொது வாழ்வில் சில அவமானங்களைக்கூடச் சந்திக்க வேண்டியிருந்தது, கேலிக்கிடமான சமரசங்களுக்குட்பட வேண்டியிருந்தது. ஆனால் இறுதியில் பல நம்ப முடியாத வெற்றிகளைக் குவிப்பதற்கு ஈடுஇணையற்ற அந்தத் திரைப்பட நாயகனால் முடிந்தது.
நம்ப முடியாத அளவுக்கு வசீகரமான அந்த பிம்பங்கள் உருவாக்கப்பட்ட விதம் முக்கியமானது. அவரது நடிப்பில் உருவான நூற்றுக்கணக்கான திரைப்படங்களுக்கும், பாடல்களுக்கும் அதில் பெரும் பங்கு உண்டு.
பொதுக்கூட்டங்களில் பங்கேற்க காரிலிருந்து இறங்கித் திரண்டிருக்கும் மக்கள் வெள்ளத்தைக் கடந்து அவர் நடந்து வரும்போது
காலத்தை வென்றவன் நீ,
காவியமானவன் நீ,
வேதனை தீர்ப்பவன்,
விழிகளில் நிறைந்தவன்,
வெற்றித் திருமகன் நீ நீ
என முழங்கும் இசைத்தட்டுக்கு அவரை, அவரது பிம்பங்களை உருவாக்கியதில் என்ன பங்கு? இசைத்தட்டை ஒலிக்கவிடும் தருணமேகூட மிகத் துல்லியமாய் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டது போல் தோன்றும். காரிலிருந்து இறங்கி அவர் தன் பாதங்களைத் தரையில் ஊன்றி நடக்கத் தொடங்கும்போது,
நடந்தால் அதிரும் ராஜநடை,
நாற்புறம் தொடரும் உனது படை
என்னும் வரிகள் ஒலிக்கத் தொடங்கியிருக்கும். பாதுகாவலர்களும் அமைச்சர்களும் தொண்டர்களும் நிஜமாகவே நாற்புறமும் அவரைத் தொடர்வார்கள்.
நன்றி : தி இந்து .


