TamilsGuide

ஒபாமா, மஸ்க், பில்கேட்ஸ் கணக்குகளை ஊடுருவிய ட்விட்டர் ஹேக்கர் - பிரிட்டன் அதிரடி உத்தரவு

முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, மஸ்க், பில்கேட்ஸ் உட்படப் பல பிரபலங்களின் ட்விட்டர் (தற்போது X) கணக்குகளை 2020-இல் ஹேக் செய்த வழக்கில் தண்டனை பெற்ற பிரிட்டிஷ் ஹேக்கர் ஜோசப் ஜேம்ஸ் ஓ’கானர் (Joseph James O’Connor), சுமார் $5.4 மில்லியன் (4.1 மில்லியன் பவுண்டுகள்) மதிப்புள்ள கிரிப்டோசொத்துகளைத் (Bitcoin) திருப்பிச் செலுத்தும்படி பிரிட்டன் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

ஜோசப் ஜேம்ஸ் ஓ’கானர் (Joseph James O’Connor). இவர் 2020 ஜூலை மாதம் ட்விட்டர் நிறுவனத்தின் உள் அமைப்புகளுக்குள் ஊடுருவி, ஒபாமா, ஜோ பிடன், எலான் மஸ்க், பில் கேட்ஸ் உள்ளிட்ட 130-க்கும் மேற்பட்டப் பிரபலங்களின் கணக்குகளைக் கைப்பற்றினார்.

ஹேக் செய்யப்பட்ட கணக்குகளில் இருந்து, நீங்கள் $1,000 பிட்காயின் அனுப்பினால், அதை இரட்டிப்பாக்கித் திருப்பி அனுப்புவோம் என்ற மோசடியான செய்திகளைப் பதிவிட்டு, பின்தொடர்பவர்களிடமிருந்து கிரிப்டோகரன்சியை திருடினார்.

அமெரிக்காவில் கம்ப்யூட்டர் ஊடுருவல், மோசடி உள்ளிட்ட குற்றங்களை ஒப்புக்கொண்ட ஓ’கானர், 2023-ஆம் ஆண்டு ஐந்து ஆண்டுச் சிறைத் தண்டனை பெற்றார்.

 இவர் 2021-இல் ஸ்பெயினில் கைது செய்யப்பட்டு அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டார். 

ஓ’கானர் அமெரிக்காவில் தண்டனை அனுபவித்து வரும் நிலையில், பிரிட்டனின் கிரவுன் பிராசிகியூஷன் சர்வீஸ் (CPS), குற்றங்களின் மூலம் அவர் ஈட்டிய சுமார் $5.4 மில்லியன் மதிப்புள்ள 42 பிட்காயின் மற்றும் பிற கிரிப்டோசொத்துக்களைப் பறிமுதல் செய்ய சிவில் மீட்பு உத்தரவைப் (Civil Recovery Order) பெற்றுள்ளது.

இந்நிலையில் யாராவது பிரிட்டனில் தண்டிக்கப்படாவிட்டாலும், அவர்கள் தங்கள் குற்றச் செயல்களினால் பயனடையாமல் இருப்பதை உறுதிசெய்ய, எங்களிடம் உள்ள அனைத்து அதிகாரங்களையும் பயன்படுத்த முடிந்தது, என்று பிரிட்டன் வழக்குரைஞர் அட்ரியன் ஃபோஸ்டர் தெரிவித்துள்ளார்.
 

Leave a comment

Comment