வாலி ஈகோவை டச் பண்ணா என்ன நடக்கும்? சீண்டிய எம்.ஜி.ஆர் ரசிகர்களை பாட்டால் வாய் அடைத்த வாலி: இந்த பாட்டு மெகா ஹிட்!
வாலியை சீண்டிய எம்.ஜி.ஆர் ரசிகர்களை கவிஞர் வாலி தன் பாடல் வரிகளால் வாயடைக்க வைத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் பழமையான தயாரிப்பு நிறுவனம் என்று அழைக்கப்படும் ஏ.வி.எம். நிறுவனம் தயாரிப்பில், கடந்த 1966-ம் ஆண்டு வெளியான படம் 'அன்பே வா’. எம்.ஜி.ஆர், சரோஜா தேவி, நாகேஷ், டி.ஆர்.ராமச்சந்திரன், மனோரமா உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்தை ஏ.சி.திரிலோகச்சந்தர் இயக்கியிருந்தார். எம்.எஸ்.விஸ்வநாதன் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்த படத்தின் அனைத்து பாடல்களையும் வாலி எழுதியிருந்தார்.
ஏ.வி.எம் நிறுவனம் தயாரிப்பில் எம்.ஜி.ஆர் நடித்த முதல் படம், கலர் படம் என்ற அறிவிப்பு வெளியான உடனே இந்த படத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகமாக இருந்துள்ளது. அதேபோல் எம்.ஜி.ஆர் தனது வழக்கமான பாணியில் இருந்து விலகி முழுக்க முழுகக் ஒரு காதல் படத்தில் நடித்தது இது தான் முதல் முறை. அதனால் இந்த படத்தின் அனைத்து பாடல்களும் வரவேற்பை பெற வேண்டும் என்று ஏ.வி.எம் நிறுவனம் பல முயற்சிகளை மேற்கொண்டது
இந்த படத்தில் இடம்பெற்றிருந்த பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டானது. இன்றும் காலத்தால் அழியாத படைப்புகளாக அந்த பாடல் உள்ளது. அதிலும் ‘நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியை தான் நல்ல அழகி என்பேன் நல்ல அழகி என்பேன்’ பாடல் இன்றும் பலரும் அவரது காதலிகளை நினைத்து பாடும் பாடலாக அமைந்துள்ளது. இந்நிலையில், ‘நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியே தான்’ பாடல் எப்படி உருவானது என்பது குறித்து பார்க்கலாம். அதாவது, ‘அன்பே வா’ படத்தின் கம்போஸிங்கிற்கு செல்வதற்கு முன்பு கவிஞர் வாலி ஒரு டீக்கடைக்கு செல்கிறார். அங்கு எம்.ஜி.ஆர் நடித்த ’பணத்தோட்டம்’ படத்தில் இடம்பெற்றிருந்த ’பேசுவது கிளியா’ பாடல் ஒலிப்பரப்பாகிக் கொண்டிருக்கிறது. அப்போது 2 எம்.ஜி.ஆர் ரசிகர்கள், தலைவருக்கு காலம் எல்லாம் நிற்பது போன்ற பாட்டு எழுத வேண்டும் என்றால் கண்ணதாசனை தவிர வேறு யாராலும் முடியாது என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
அதை கேட்ட வாலிக்கு கோபம் வந்துவிட்டது. ஏன் நம்மால் எழுத முடியாதா என்று தோன்றுயுள்ளது. இதையடுத்து, ஏ.வி.எம்-மில் கம்போஸிங்கிற்காக உட்கார்ந்திருந்த வாலி பத்து நிமிடம் கண்ணை மூடிக் கொண்டு யோசித்துள்ளார். அந்த ஆழ்ந்த சிந்தனைக்கு பிறகு வாலிக்கு வந்த முதல் பல்லவி ‘நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியை தான் நல்ல அழகி என்பேன்’ என்பது தான். பாட்டு கம்போஸிங் முடிந்து எம்.ஜி.ஆர் அந்த பாடலை கேட்டதும் ஆண்டவர் எங்கே அவரை நான் நேரில் பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார். வாலியை எம்.ஜி.ஆர் எப்போதும் ஆண்டவர் என்று தான் அழைப்பாராம். வாலியை பார்த்ததும் என்னா பாட்டு எழுதிருக்கீங்க என்று பாராட்டிவிட்டு வாலிக்கு எம்.ஜி.ஆர் முத்தம் கொடுத்துள்ளார்.
தமிழச்சி கயல்விழி


