மத்திய ஆபிரிக்க நாடான கமரூனில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதியான போல் பியா வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 92 வயது நிரம்பிய இவர் அடுத்த 7 வருடங்களுக்கு நாட்டின் தலைவராகப் பதவி வகிப்பார். அவர் உயிரோடு வாழ்ந்து தனது பதவியை நிறைவு செய்வாராயின் அப்போது அவரது வயது நூறுக்கு ஒன்று குறைவாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அது மாத்திரமன்றி, இன்றைய நிலையில் உலகில் அதிகம் வயதான அரசுத் தலைவராகவும் அவரே விளங்குகிறார். 1933 பெப்ரவரி 13இல் பிறந்த பியா 1975 யூன் 30இல் நாட்டின் பிரதம மந்திரியாக நியமனம் பெற்றார். நாட்டின் முதலாவது ஜனாதிபதியான அஹமது அஹியோ 1982 நவம்பர் 6ஆம் திகதி பதவி துறக்கும் வரை பிரதம மந்திரியாகப் பதவி வகித்த பியா, அன்று முதல் ஜனாதிபதியாகப் பதவி வகிக்கத் தொடங்கினார். 1960ஆம் ஆண்டில் பிரான்சிடம் இருந்து சுதந்திரம் பெற்றபின்னர் ஜனாதிபதியாகப் பதவி வகித்த இரண்டாவது நபராக இவர் உள்ளார். ஜனாதிபதி பவிக்குப் போட்டியிடுவதற்கான கால வரையறையை இவர் 2008ஆம் ஆண்டில் நீக்கியதன் மூலம் தான் தொடர்ந்து தேர்தலில் போட்டியிடுவதற்கான தடையை நீக்கிக் கொண்டார். இதன் மூலம் 43 வருடங்கள் ஜனாதிபதியாக, ஒரு நாட்டின் தலைமைப் பொறுப்பில் இருந்த இரண்டாவது நபர் என்ற சாதனையைத் தனதாக்கிக் கொண்டார். பிரதமராகப் பதவி வகித்த காலகட்டத்தையும் சேர்த்துக் கணக்கிட்டால் இவர் 50 ஆண்டு காலம் நாட்டின் தலைமைப் பொறுப்பை வகித்த தலைவராகக் கணக்கிடப்படுவார்.
உலகில் அதிக காலம் தலைமைப் பொறுப்பை வகித்த தலைவராக பிடல் காஸ்ட்ரோ உள்ளார். 1959 முதல் 2011 வரையான 52 வருடங்கள் இவர் கியூபாவின் தலைவராக விளங்கினார். 1959 முதல் 1976 வரை பிரதம மந்திரியாகவும், 1976 முதல் 2008 வரை ஜனாதிபதியாகவும், 1965 முதல் 2011 வரை கியூப பொதுவுடமைக் கட்சியின் பொதுச் செயலாளராகவும் இவர் பதவி வகித்தார்.
தற்போது கமரூனின் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள பியா, 2032 வரை பதவியில் அமர்ந்திருப்பாராயின் அவர் காஸ்ட்ரோவின் சாதனையை முறியடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
30 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட கமரூனில் இளைய தலைமுறையினரின் எண்ணிக்கை அதிகம். நாட்டின் 60 விழுக்காடு மக்கள் 25 வயதுக்கும் குறைவானவர்களாகவே உள்ளனர். இவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் அறிந்த ஒரேயொரு ஜனாதிபதியாக பியாவே உள்ளார்.
15 முதல் 35 வயது வரையான இளைய சமுதாயத்தினர் மத்தியில் வேலை வாய்ப்பின்மை அதிகமாக உள்ளது. இந்தக் குழாமில் உள்ள பத்துப் பேரில் நால்வர் தொழில் வாய்ப்பு இன்றி இருந்து வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் மத்தியில் அரசியல் பங்கேற்பு தொடர்பிலான ஆர்வம் குறைவாகவே உள்ளதைப் பார்க்க முடிகின்றது. அக்டோபர் 12ஆம் திகதி நடைபெற்ற தேர்தலில் 57.76 விழுக்காடு வாக்காளர்கள் மாத்திரமே பங்கேற்று இருந்தனர். கடந்த தேர்தலை விடவும் 3.91 விழுக்காடு மக்கள் அதிகமாக வாக்களித்து இருந்தாலும், தேர்தலில் பங்கு கொண்ட மக்களின் வாக்கு 60 விழுக்காட்டுக்கும் குறைவாக இருப்பது தேர்தல் தொடர்பில் மக்கள் விருப்பின்றி இருப்பதைக் காட்டுகின்றது.
தேர்தல்களில் தங்கள் விருப்பு, வெறுப்பை மக்கள் பிரதிபலிப்பதே வழக்கம். தேர்தலில் பங்கெடுத்துக் கொள்ளாததையும் மக்களின் தீர்ப்பாகக் கொள்ள முடியும். மாற்றம் ஒன்றை விரும்பி வாக்களிக்கும் மக்கள், தேர்தல் மூலம் தங்கள் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ள முடியாது என உணர்கின்ற போதில் வாக்களிப்பில் பங்கெடுத்துக் கொள்வதைத் தவிர்த்துக் கொள்கின்றனர். இவ்வாறு மக்கள் வாக்களிப்பில் இருந்து விலகி இருப்பது பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நடப்பு ஆட்சியாளர்களுக்குச் சாதாகமாகவே அமைவதைப் பார்க்க முடிகின்றது. மக்களின் இத்தகைய மனோநிலையை ஆட்சியாளர்களும் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.
கமரூன் ஜனாதிபதித் தேர்தல் அக்டோபர் 12ஆம் திகதி நடைபெற்றது. ஒரு பெண்மணி உட்பட 12 வேட்பாளர்கள் போட்டியிட்ட இந்தத் தேர்தலின் முடிவுகள் அக்டோபர் 27ஆம் திகதி வெளியானது. தேர்தலில் வெற்றிபெற்ற பியா நவம்பர் 6ஆம் திகதி உத்தியோகபூர்வமாகப் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
8,082,692 பேர் கமரூனில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களாக உள்ளனர். இதில் 4,668,446 பேர் மாத்திரமே வாக்களிப்பில் கலந்து கொண்டனர். அளிக்கப்பட்ட வாக்குகளில் 53.66 விழுக்காடு வாக்குகளைப் பெற்று பியா வெற்றி பெற்றார். இவர் பெற்ற மொத்த வாக்குகள் 2,474,179. மொத்த வாக்களார்களோடு ஒப்பிடுகையில் சற்றொப்ப 30 விழுக்காடு மக்களின் வாக்குகளைப் பெற்றே இவர் ஜனாதிபதியாகத் தெரிவாகி உள்ளமை நோக்கத்தக்கது.
பியாவை எதிர்த்துப் போட்டியிட்ட அவரது மேனாள் சகாவான இஸா ஷிரேமோ 35.19 விழுக்காடு வாக்குகளைப் பெற்றுள்ளார். மொத்தம் 1,622,334 வாக்குகளை இவர் பெற்றிருந்தார். தேர்தல் முடிவுகள் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட முன்னரேயே தானே வெற்றி பெற்றதாக அறிவித்திருந்த இவர், அரசாங்கத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுமாறு தனது ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். இந்த வேண்டுகோளை ஏற்று ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டோர் மீது அரச படையினர் கடுமையான பலப் பிரயோகத்தை மேற்கொண்டிருந்ததாகச் செய்திகள் வெளியாகி உள்ளன. அக்டோபர் 27இல் தேர்தலில் பியா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதன் பின்னர் நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்களில் 48 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஐ.நா.சபை வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. வன்முறைகள் தொடர்பில் 20 வரையானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பியா மீண்டும் ஜனாதிபதியாகப் போட்டியிட முடிவு செய்தபோது அது உள்நாட்டில் மிகப் பாரிய வாதப் பிரதிவாதங்களை ஏற்படுத்தி இருந்தது. ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டிருந்த சட்டத்தரணியான அகேரா முனா, பியாவின் வயோதிபத்தையும், அவர் அடிக்கடி நோய்களுக்கு இலக்காகுவதையும், தன்னுடைய பணிகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக மூன்றாவது நபர்களில் பெரிதும் தங்கியிருக்கும் நிலையையும் கருத்தில் கொண்டு அவர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்குத் தடை விதிக்க வேண்டும் எனவும் அரசியலமைப்புச் சபையில் தாக்கீது ஒன்றை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. தான் ஒருபோதும் பதவி விலகப் போவதில்லை என தேர்தல் பரப்புரைகளின் போது பியா தெளிவாகக் கூறியிருந்தார். நாட்டில் முழுமையான மாற்றங்கள் ஏற்படும் வரை தானே ஜனாதிபதியாகத் தொடரப் போவதாகவும் அவர் மேலும் கூறியிருந்தார்.
பொறுப்புணர்வு இல்லாத அரசியல்வாதிகள் நாட்டின் அமைதியைக் குலைப்பதாக தேர்தல் வெற்றியின் பின்னர் பியா தெரிவித்தார். நாட்டில் சட்டவாட்சியை நிலைநாட்ட வேண்டிய பொறுப்பு தன்னிடம் இருப்பதாகவும், அதற்கான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார். ஊழலுக்கு எதிராகப் போராடுவதுடன், நாட்டில் பொது முதலீடுகளை ஊக்குவிப்பதுடன், அடுத்துவரும் தனது ஏழாண்டு பதவிக் காலத்தில் சக்தி, நீர் மற்றும் சுகாதார வசதிகளை வழங்குவதற்காக பாடுபடப் போவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இளைய தலைமுறையினருக்கு வேலை வாய்ப்புகளை வழங்க முன்வரும் தொழில் நிறுவனங்களுக்கு வரிச்சலுகைகளை வழங்க உள்ளதாகவும், நாட்டின் வடமேற்கு மற்றும் தென்மேற்குப் பிராந்தியங்களில் நிலவும் பிரிவினைவாதப் போராட்டங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை முடுக்கிவிடப் போவதாகவும் அவர் கூறினார்.
இந்த ஆயுத மோதல்கள் காரணமாக இதுவரை 628,000 மக்கள் உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களாக உள்ளனர். 87,000 வரையானோர் அயல்நாடான நைஜீரியாவுக்கு அகதிகளாகச் சென்றுள்ளனர். நைஜீரிய ஆயதக் குழுவான பொக்கோ ஹராம் கமரூனிலும் தாக்குதல்களை மேற்கொண்டு வருவதையும் பார்க்க முடிகின்றது.
நாட்டில் நிலவும் பிரச்சனைகளை இனங்கண்டு அவற்றைத் தீர்க்கும் நோக்குடன் தனது பதவிக் காலத்தில் நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாகப் பியா தெரிவித்து உள்ள போதிலும் அவை இலகுவான விடயங்களாக இருக்கப் போவதில்லை என்பதைக் களச் சூழல் தெளிவாக உணர்த்தி நிற்கிறது. சுதந்திரம் பெற்று 64 வருடங்கள் கடந்த நிலையிலும் நாட்டின் பொருளாதார முன்னேற்றம் இன்னமும் சொல்லிக் கொள்ளும்படியான நிலையில் இல்லை. 250 வரையான மொழிகள் பேசப்படும் நாட்டில் சுமுகமான ஆட்சியை மேற்கொள்ளவும், பொருளாதார வளர்ச்சியை நோக்கி நாட்டை எடுத்துச் செல்லவும் ஆற்றலுள்ள தலைமை அவசியமானது. தனது தள்ளாத வயதில் அத்தகைய இலக்குகளை எட்ட பியா அவர்களால் முடியுமா என்பதே பெறுமதி மிக்க கேள்வி.
சுவிசிலிருந்து சண் தவராஜா


