TamilsGuide

வெனிசுலா மீது ராணுவ நடவடிக்கை - டிரம்ப் எடுத்த அதிரடி முடிவு

அமெரிக்காவுக்கும், வெனிசுலாவுக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு இருந்து வருகிறது. இதற்கிடையே வெனிசுலாவில் இருந்து கடல் வழியாக அமெரிக்காவுக்குள் போதைப் பொருட்களை கடத்தி வருவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டி வருகிறார்.

இதையடுத்து பசிபிக் மற்றும் கரீபியன் கடல் பகுதிகளில், சந்தேகத்துக்குரிய படகுகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகிறது. டிரம்பின் இந்த குற்றச்சாட்டை வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ திட்டவட்டமாக மறுத்து வருகிறார்.

இதற்கிடையே அமெரிக்கா சமீபகாலமாக கரீபியன் கடற்பகுதியில் போர்க்கப்பல்கள், போர் விமானங்களை குவித்து வருகிறது. மேலும் வெனிசுலாவிற்குள் ராணுவ நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பாக டிரம்பிடம் அதிகாரிகள் விளக்கம் அளித்திருந்தனர்.

இந்த நிலையில் ஆபரேசன் சதர்ன் ஸ்பியர் என்ற பெயரில் 12-க்கும் மேற்பட்ட போர்க்கப்பல்களையும், 15 ஆயிரம் துருப்புகளையும் கரீபியன் கடற்பகுதியில் அமெரிக்க ராணுவம் குவித்துள்ளதால் வெனிசுலா மீது ராணுவ நடவடிக்கை எடுக்கலாம் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

இதையடுத்து சிறப்பு அவசர நிலையை வெனிசுலா அதிபர் நிகோலஸ் அறிவித்து நிலம், கடல், வான்வெளியில் பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவிட்டுள்ளார். இதனால் அந்த பிராந்தியத்தில் பதற்றம் நிலவி வருகிறது.

இந்த நிலையில் டிரம்ப் கூறும்போது, வெனிசுலா மீது ராணுவ நடவடிக்கை தொடர்பாக நான் ஒரு முடிவு எடுத்துவிட்டேன். அது என்னவென்று இப்போது என்னால் சொல்ல முடியாது. அதுபற்றி விரைவில் சொல்வேன் என்றார். இதனால் வெனிசுலா மீது ராணுவ நடவடிக்கை எடுக்க அமெரிக்கா தயாராகி வருவதாக கருதப்படுகிறது.
 

Leave a comment

Comment