TamilsGuide

கந்தானை பகுதியில் லொறியை திருடி தப்பிச்சென்ற நபரால் விபத்து- ஒருவர் உயிரிழப்பு

கந்தானை பகுதியி;ல் லொறி ஒன்றைத் களவாடி தப்பிச் சென்ற சந்தேகநபர் ஒருவரால் ஏற்படுத்தப்பட்ட இரண்டு விபத்துக்களில் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.

கந்தானைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மரியா வீதிப் பிரதேசத்தில் வியாபாரி ஒருவரின் வீட்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த லொறி ஒன்று நேற்று இரவு அடையாளந்தெரியாதவர்களினால் களவாடப்பட்டிருந்தது

இதனையடுத்து லொறியின் உரிமையாளரும் அவரது ஊழியர்களும் லொறியைப் பின்தொடர்ந்துள்ளனர்.

அப்போது சந்தேகநபர் லொறியை நிறுத்தாமல் தப்பிச் சென்று கொண்டிருந்தபோது, எதிர்த் திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதி பின்னர், எதிர்த் திசையில் வந்த மற்றுமொரு மோட்டார் சைக்கிளிலும் மோதுண்டதில் லொறி, அருகில் இருந்த சுவரில் மோதி வீதியில் கவிழ்ந்துள்ளது.

முதலாவதாக இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரும், இரண்டாவது விபத்தில் இரண்டு பேரும் படுகாயமடைந்து கொழும்பு வடக்கு ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

அதன்பின்னர், இரண்டாவது விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கம்பஹா பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதுடைய ஒருவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லொறியைத் களவாடி விபத்துக்களை ஏற்படுத்திய சந்தேகநபர் அப்பகுதி மக்களால் பிடிக்கப்பட்டு கந்தானைப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

சந்தேகநபர் தற்போது ராகம வைத்தியசாலையில் பொலிஸ் பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர் 46 வயதுடைய ஜாஎல பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் பொலிஸஸ் தடுப்புக்காவலில் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் கந்தானைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 

Leave a comment

Comment