TamilsGuide

பெருமூச்சுவிட்ட அமெரிக்க மக்கள் - உணவு பொருட்களின் மீதான வரியை ரத்து செய்த டிரம்ப்

அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த ஏப்ரல் மாதம் பல்வேறு நாடுகள் மீது கூடுதல் வரிகளை விதித்தார். அண்டை நாடுகளான கனடா, மெக்சிகோ மற்றும் பிரேசில் உள்பட பல நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதல் வரிகள் விதிக்கப்பட்டன.

இறக்குமதி வரி உயர்ந்ததால் அமெரிக்காவில் பல்வேறு பொருட்களின் விலை அதிகரித்தது. குறிப்பாக உணவுப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் மக்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். இதையடுத்து சில உணவு பொருட்களுக்கான இறக்குமதி வரியை குறைக்க அமெரிக்க அரசு ஆலோசித்து வந்தது.

இந்தநிலையில் மாட்டிறைச்சி, காபி, பழங்கள் உள்ளிட்ட பல்வேறு உணவு பொருட்களின் மீதான வரிகளை நீக்குவதற்கான நிர்வாக உத்தரவில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார்.

இந்த புதிய வரி விலக்கு வருகிற 20-ந்தேதி நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த புதிய நிர்வாக உத்தரவு மூலம் தேயிலை, பழச்சாறு, கோகோ, மசாலா பொருட்கள், வாழைப் பழங்கள், ஆரஞ்சு, தக்காளி மற்றும் சில உரங்கள் உள்ளிட்ட பொருட்களின் மீதான வரிகள் நீக்கப்படுகின்றன.

இதுதொடர்பாக டிரம்ப் கூறுமபோது," காபி போன்ற சில உணவுகள் பொருட்கள் மீதான வரியை நாங்கள் குறைத்துள்ளோம்" என்றார்.

உணவு பொருட்களின் விலை அதிகரித்து வருவதாக நுகர்வோர்கள் புகார்கள் அளித்து வந்தனர். இது சமீபத்தில் நடந்த மேயர் மற்றும் உள்ளூர் தேர்தலில் எதிரொலித்தது.

இந்த தேர்தல்களில் டிரம்பின் குடியரசு கட்சி தோல்வியை சந்தித்தது. இதற்கு விலைவாசி உயர்வு பிரச்சினைதான் காரணம் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் மாட்டிறைச்சி உள்ளிட்ட உணவு பொருட்களின் மீதான இறக்குமதி வரியை ரத்து செய்வதாக டிரம்ப் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment