இலங்கை கடற்றொழில் துறையின் (Cold Chain) மேம்பாடு தொடர்பாக உலக வங்கி குழுவும் நெதர்லாந்தின் Wageningen பல்கலைக்கழக நிபுணர்களும் இணைந்து கடற்றொழில் அமைச்சருடன் முக்கிய கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளனர்.
இதன்போது, தற்போது இலங்கையில் 60 அடிக்கு குறைவான பெரும்பாலான பலநாள் மீன்பிடி படகுகள் பனிக்கட்டியை மட்டுமே பயன்படுத்தி வருகின்றன.
கப்பலிலுள்ள குளிரூட்டும் (refrigeration) அமைப்புகள் பெரும்பாலும் இல்லை. அதிகளவு பனிக்கட்டியை ஏற்றிச் செல்ல வேண்டியதனால் படகுகளின் எடை மற்றும் எரிபொருள் நுகர்வு அதிகரிக்கிறது. இதனால் மீன்களின் தரம் விரைவில் குறையும் அதேவேளை, இழப்புகளும் அதிகரிக்கின்றன என சுட்டிக்காட்டப்பட்டது.
மின்சாரச் செலவுகள் மற்றும் நிலையற்ற மின்சாரம் வழங்கல் காரணமாக பாரம்பரிய குளிர்மறைகளை இயக்குவது அதிகச் செலவாக இருப்பதாகவும், இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் (Ceylon Fisheries Corporation – CFC) 800 மெட்ரிக் தொன் கொள்ளளவு கொண்ட குளிர்சேமிப்பு வசதிகள் மற்றும் 7.5 தொன் பிளாஸ்ட் ஃப்ரீசர் ஆகியவை தற்போது புதுப்பித்தல் மற்றும் திறன் மேம்பாட்டைத் தேவைப்படுத்துகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், குறுகிய மற்றும் நடுத்தர தூரங்களுக்கு சூரிய ஆற்றல் அடிப்படையிலான குளிர்போக்குவரத்து வசதி இல்லாதது காரணமாக உள் நிலப்பகுதி சந்தைகள் மற்றும் நீர்தேக்க மீனவர்கள் தங்களது உற்பத்தியை சரியான முறையில் சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கலந்துரையாடலில், மீன்வளத் துறையில் காணப்படும் முக்கிய பிரச்சினைகள் எனப் பின்வருவன சுட்டிக்காட்டப்பட்டன:
.பனிக்கட்டியை மட்டுமே நம்பும் தற்போதைய முறை மீன்களின் ஆயுட்காலத்தையும் தரத்தையும் குறைக்கிறது.
·கூடுதல் பனிக்கட்டியின் எடை எரிபொருள் நுகர்வை உயர்த்துகிறது.
·மத்திய மீன் சந்தைகள் மற்றும் முக்கிய துறைமுகங்களில் மலிவான மற்றும் நம்பகமான குளிர்சேமிப்பு வசதிகள் இல்லை.
·கடைசி கட்ட (trishaw) மற்றும் நடுத்தர தூர (சிறிய ஃப்ரீசர் லொறிகள்) குளிர்போக்குவரத்து அமைப்புகள் போதுமானதாக இல்லை.
·பருவ காலங்களில் நீர்தேக்க மீனவர்கள் தற்காலிக சேமிப்பு வசதி இன்றி பெரும் இழப்பைச் சந்திக்கின்றனர்.
இதற்கான உடனடி தீர்வுகளாக பின்வரும் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன:
·60 அடிக்குக் குறைவான பலநாள் படகுகளுக்காக சூரிய ஆற்றல் அல்லது கலப்பு முறையில் இயங்கும் கப்பலிலுள்ள குளிரூட்டும் அமைப்புகளை அறிமுகப்படுத்துதல்.
·முக்கிய மீன்துறைமுகங்கள் மற்றும் மத்திய மீன் சந்தை (Peliyagoda) ஆகிய இடங்களில் சூரிய ஆற்றல் அடிப்படையிலான குளிர்மறைகள் மற்றும் பனியாலைகளை நிறுவுதல்.
·CFC குளிர்சேமிப்பு வசதிகளுக்கு வெப்பத் தடுப்பு, திறமையான கம்ப்ரசர்கள் மற்றும் சூரிய ஆற்றல் இணைப்பு போன்ற மேம்பாடுகள் செய்வது.
·நீர்தேக்க மீனவர்கள் உற்பத்தி அதிகரிக்கும் காலங்களில் பயன்படுத்தக்கூடிய சிறிய சூரிய குளிர்மறைகள் அமைத்தல்.
·நகரங்களுக்குள் விநியோகத்துக்காக சூரிய ஆற்றல் அடிப்படையிலான குளிர் டிரிஷாக்களை அறிமுகப்படுத்துதல் மற்றும் நடுத்தர தூர போக்குவரத்துக்கு சூரிய சார்ஜிங் வசதியுள்ள ஃப்ரீசர் லொறிகளைப் பயன்படுத்துதல்.
·சில்லறை விற்பனை நிலையங்களில் குறைந்த செலவு சூரிய குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் வெப்பத்தடுப்பு பெட்டிகளைப் பயன்படுத்த ஊக்குவித்தல்.
மேலும், மூன்று முதல் ஐந்து துறைமுகங்கள் அல்லது நீர்தேக்கப் பகுதிகளில் முன்னோடி (pilot) திட்டங்களை மேற்கொண்டு தொழில்நுட்ப மற்றும் வணிக ரீதியான சாத்தியக்கூறுகளை மதிப்பிடுவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. மேலும், இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு சுமார் 35 அமெரிக்க டொலர் நிதி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளதாக இதன்போது மேலும் தெரிவிக்கப்பட்டது.
இக்கலந்துரையாடலில், உலக வங்கியின் பிரதிநிதிகள், நெதர்லாந்தின் Wageningen பல்கலைக்கழக நிபுணர்கள், கடற்றொழில் அமைச்சின் செயலாளர் மற்றும் அதிகாரிகளும் கலந்துக் கொண்டனர்.


