TamilsGuide

கொட்டாஞ்சேனை துப்பாக்கி சூடு - பெண் உட்பட இருவர் கைது

கொழும்பு, கொட்டாஞ்சேனை பகுதியில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு உதவியதாக குற்றம் சாட்டப்பட்டு, பெண் ஒருவர் உட்பட இருவர் கொழும்பு மாவட்ட குற்றப்பிரிவினால் நேற்று (13) கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட ஆண் சந்தேக நபர், துப்பாக்கிச் சூடு நடத்தியவர் துப்பாக்கிச் சூடு நடத்தப் பயன்படுத்திய காரின் சாரதி என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவர் கொழும்பு 13ஐச் சேர்ந்த 27 வயதுடையவர் ஆவார்.

அதேநேரத்தில் கைது செய்யப்பட்ட பெண், சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர்களுக்கு தங்குமிடம் வழங்கியதாகக் கூறப்படுகிறது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இவர் 32 வயதுடைய மஹரகம பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.

தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் சந்தேக நபர்கள் மீது கொழும்பு மாவட்ட குற்றப்பிரிவு தற்போது மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

மேற்கண்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் நவம்பர் 07 ஆம் திகதி கொட்டாஞ்சேனையின் 16 ஆவது வீதியில் இடம்பெற்றது.

இதன்போது, காரில் வந்த ஒரு கும்பல் துப்பாக்கிச் சூடு நடத்தி, பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

சம்பவத்தில் காயமடைந்த 43 வயது நபர் உயிரிழந்தார்.

உயிரிழந்த நபர், பிரபல பாதாள உலகக் குழுத் தலைவர் பாலச்சந்திரன் புஷ்பராஜின் நண்பர் என்றும், அவர் “புகுடு கண்ணா” என்றும் அழைக்கப்படுகிறார் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
 

Leave a comment

Comment