ஊழல் வழக்கில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவை மன்னிக்குமாறு அந்நாட்டு ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கிற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடிதம் எழுதியுள்ளார்.
ஆட்சியில் இருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளில் லஞ்சம், மோசடி மற்றும் நம்பிக்கை மீறல் உள்ளிட்ட மூன்று குற்றச்சாட்டுகளில் நேதன்யாகு மீது நீதிமன்றத்தில் வழக்குகள் நடந்து வருகிறது.
குறிப்பாக அவரும் அவரது மனைவி சாராவும் கோடீஸ்வரர்களிடமிருந்து நகைகள் உள்ளிட்ட 260,000 டாலர்கள் மதிப்புள்ள ஆடம்பரப் பொருட்களை வாங்கியது, தனக்கு ஆதரவாக செய்திகளை வெளியிட ஊடகங்கள் மீது ஆதிக்கம் செலுத்தியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் இதில் அடங்கும்.
இந்நிலையில் நேதன்யாகு மீதான வழக்கை கைவிடும்படி டிரம்ப், இஸ்ரேல் ஜனாதிபதிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், இஸ்ரேலிய நீதித்துறையின் சுதந்திரத்தை மதித்து, நேதன்யாகுவுக்கு மன்னிப்பு வழங்க வேண்டும் என்றும், நேதன்யாகுவுக்கு எதிரான நடவடிக்கை அரசியல் ரீதியாக நியாயப்படுத்த முடியாதது என்றும் டிரம்ப் கடிதத்தில் சுட்டிக்காட்டினார்.
டொனால்டு டிரம்பின் பெரும் ஆதரவிற்கு நன்றி தெரிவிப்பதாக நேதன்யாகு கூறினார். இருப்பினும் இந்த கடிதத்திற்கு பதிலளித்த இஸ்ரேல் ஜனாதிபதி அலுவலகம், "யாராவது மன்னிப்பு பெற விரும்பினால், அவர்கள் நேரடியாக விண்ணப்பிக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளது.
இதற்கிடையே தன் மீதான ஊழல் வழக்கில் சாட்சியமளிப்பதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற நேதன்யாகு நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தார். ஆனால் தற்போதைய சூழ்நிலையில் அவரது கோரிக்கையை ஏற்க முடியாது என்று ஜெருசலேம் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


