TamilsGuide

பொறந்த கதை சிறிய கதை பொழைச்ச கதை பெரிய கதை...இதில்...

1978 ஆம் வருசம் ..
அந்தமான் காதலி படத்தை எடுக்க யூனிட் எல்லாத்தையும் அழைச்சுக்கிட்டு முக்தா சீனிவாசன் அந்தமான் தீவுக்கு போனார்.
நடிகர் திலகம் சிவாஜி மனைவி கமலாம்மாவை கூட கூட்டிட்டு போனார்.
அவங்க பிரயாணம் செஞ்ச கப்பலோட பேரு ஹர்ஷவர்த்தனா. ஒரு பெரிய நட்சத்திர ஓட்டல் கடலில் நீந்தி போற மாதிரி அந்தக் கப்பலோட அமைப்பு இருந்துச்சி.
அந்தப் படத்தோட வசனகர்த்தா பேராசிரியர் ஏஎஸ் பிரகாசம்.
கப்பல் போயிட்டு இருக்கு. சிவாஜி மேல் தளத்துலே இருந்து கடலை ரசிச்சு பார்த்துட்டு இருக்கிறார்.
சிவாஜி கூடவே பிரகாசமும் இருக்கிறார்.
அப்ப சிவாஜி சொன்னார்.
'அந்தமானுக்கு தியாகிகள் கைதிகளாக போனாங்க. இந்த திரைப்படக் குழு காதலிக்கப் போகுது '.
அந்தமானுக்கு போன ரொம்ப தியாகிகள் நாடு திரும்பாமலே அங்கேயே இறந்து போன பல உருக்கமான நினைவுகளை சிவாஜி அவர் கிட்ட அப்போ பகிர்ந்துகிட்டார் .
அந்தமான் காதலி படத்துக்கு சூட்டிங்குக்காக சிவாஜி அந்தமான் வர்றார் அப்படிங்கிற செய்தி அந்தமான் தமிழர்கள் கிட்ட பரவியிருந்துச்சு.அந்தமான் துறைமுகம் போர்ட் பிளேயர் போய் சேந்தது கப்பல்.
அந்தமான் தீவுகள்லே இருந்த ஏராளமான தமிழ்மக்கள் திரண்டு வந்து சிவாஜிக்கு பெரிய வரவேற்பு கொடுத்தாங்க.
வாழ்க சிவாஜின்னு பெரிய கரகோசம்.சிவாஜிஅவங்களோட அன்பை பாத்து ரொம்ப நெகிழ்ந்து போனார்.
அந்தமான் தமிழ் சங்கம் சிவாஜிக்கு பெரிய வரவேற்பு கொடுத்து ஒரு கூட்டம் நடத்துனாங்க.
அந்தமான் ரொம்ப வளமான பூமி.
ஆனா அந்த வளங்களை வளர்க்காம அங்க வாழற மக்களை திறந்த வெளிக் கைதிகளா வாழவிட்ட மத்திய அரசோட மாற்றாந்தாய் போக்கை கண்டிச்சு ,
"கோரிக்கையற்று கிடக்குதண்ணே இங்கு வேரில் பழுத்த பலா "..
என்ற பாரதிதாசன் பாட்ட கம்பீரமா முழங்கி சிம்மக்குரலில் சிவாஜி பேசியது அந்தமான் தீவு முழுக்க எதிரொலிச்சது .
முதல் முறையா கேமரா கண் படாத அந்த மான் தீவுலே அந்தமான் காதலி படப்பிடிப்பு நடக்குது .புகழ் பெற்ற அந்தமான் சிறையில் ஒரு காட்சி.வசனகர்த்தா பிரகாசம் வசனத்தை வாசிக்கிறார் .
"பொறந்த கதை சிறிய கதை பொழைச்ச கதை பெரிய கதை இதில் மறந்த கதை நூறு கதை மறச்ச கதை கோடி கதை "
சிவாஜி இந்த வசனத்தை ரசிச்சு கேட்கிறார்.
ஆனா இந்த வசனத்தை மாத்தணும் அப்படின்னு படத்தோட டைரக்டர் முக்தா ஸ்ரீனிவாசன் சொல்றார். இந்த வசனம் யாருக்கும் புரியாது அப்படிங்கறது முக்தா ஸ்ரீனிவாசனோட வாதம்.
பிரகாசத்துக்கு ஆதரவா சிவாஜி பேசினார்.
சினிமாகாரனுக்கு புதுசு பிடிக்காது .ஆனா மக்கள் இதை ஏத்துக்குவாங்கன்னு சொல்லி
அந்த வசனத்தை அப்படியே பேசினார்.
சினிமாவுல சில நாயகர்கள் எழுத்தாளர்களை தங்கள் இஷ்டம் போல எழுத சொல்வாங்க. எழுத்தாளர்களோட தோளுல ஏறி கொண்டு எழுத சொல்லுவாங்க .
நடிகர்திலகமோ எழுத்தாளர்களை தன்னோட தோள் மேல ஏற்றி எழுதச் சொல்வார்னு பேராசிரியர் ஏ எஸ் பிரகாசம் இப்படி சிவாஜி பற்றி சொல்லி இருக்கிறார்.
மனோகரா படத்துக்கு கலைஞர் கருணாநிதி எழுதின அனல் தெரிகிற வசனத்தை பிரபல இயக்குனர் L.V. பிரசாத் முதல்ல ரசிக்கவில்லை .
எல்வி பிரசாத் தெலுங்கு மொழியை சேர்ந்தவர். அந்த வசனங்களை சிவாஜி பேசி காட்டுன பின்னால தான் எல் வி பிரசாத்துக்கு திருப்தி ஆச்சு.
அந்தமான் காதலி நல்ல ஒரு வெற்றி படமாக அமைந்தது.
அந்தமான் காதலி பட வெற்றி விழாவில் சிவாஜி இப்படி பேசினார்.:
எனக்கு முன்னால பேசின பேராசிரியர் பிரகாசம் சிவாஜி தொட்டதெல்லாம் பொன்னாகும் அப்படின்னு சொன்னார். இல்லை..நான் பொன்னை தான் தொடுவேன். இந்த பேராசிரியர் என்கிட்ட சினிமா சந்தர்ப்பம் கேட்டு வந்தப்ப சினிமா உங்களுக்கு வராது அப்படின்னு முதல்ல சொல்லி அனுப்பினேன் .
இன்னைக்கு பிரகாசம் படம் அப்படின்னா பிரியத்தோடு
ஏற்றுக்கொள்கிறேன்.
இதே யூனிட் அடுத்ததா இமயம் படத்துக்காக நேபாளம் போனாங்க.
கங்கை யமுனை இங்குதான் சங்கமம் -இந்த பாட்டை அந்த வரிகளுக்கு பொருத்தமா எந்த இடத்துலே ஷூட்டிங் பண்ணலாம்னு முக்தா சீனிவாசனுக்கு ஒரு குழப்பம் வந்துடுச்சு. நேபாளத்துல கங்கையும் யமுனையும் சந்திக்கிற இடம் எங்கே அப்படின்னு தேடித்தேடி அலையறார் .பாட்டு எழுதுன கண்ணதாசன் கிட்ட போன் போட்டு விசாரிச்சாங்க.
எனக்கென்ன தெரியும்னு கண்ணதாசன் சொல்லிட்டாரு.
இதையெல்லாம் பார்த்துகிட்டு இருந்த பிரகாசம் அந்த இடம் வேற எங்கேயும் இல்லை இங்கதான் இருக்குன்னு
ஸ்ரீவித்யாவோட டான்ஸ் ரிகர்சல் பாத்துட்டு இருந்த சிவாஜிய கைய காட்டறார்.
சிவாஜி ஒரு கங்கை ,அவரோட காதலி யமுனை அவங்க ரெண்டு பேரும் சேர்ந்து தழுவிக் கொள்ற இடம்தான் கங்கை யமுனை சங்கமம், அப்படின்னு பிரகாசம் ஒரு கோடு போட்டார் .
இதைக் கேட்ட சிவாஜி சபாஷ்னு பிரகாசத்தை பாராட்டினார்.
இந்தப் பாட்டுக்கு டான்ஸ் காட்சி அமைச்சவர் நடன இயக்குனர் சோப்ரா. டூயட் பாட்டுக்கு ரெண்டு பேருக்குமே டான்ஸ் சொல்லிக் கொடுப்பது வழக்கம். ஆனா நீங்க கதாநாயகிக்கு மட்டும் டான்ஸ் சொல்லிக் கொடுக்கறீங்களே ,
சிவாஜிக்கு இல்லையா அப்படின்னு பிரகாசம் சோப்ராவை கேட்டார்.
பாட்டு ஆரம்பிக்கட்டும். பாருங்க ..
பெண்ணை விட சிவாஜி அழகா ஆடுவார் அப்படின்னு சொன்னார். அப்படியே சிவாஜி அலுங்காம குலுங்காம நடையையே நளினமாக்கி நடனமா நடிச்சு அசத்திட்டார்.படத்துலே சிவாஜி ஆடுன டான்ஸ் எல்லாமே அவரோட சொந்தம். அது ஒரு தனி வகை.. தனி கலை..
இமயம் படமும் நல்ல வெற்றி அடைஞ்சது.
இதுக்கு பின்னாலே பேராசிரியர் பிரகாசம் சிவாஜியை வெச்சு ஒரு படம் டைரக்ஷன் பண்ணனும்னு ஆசைப்பட்டார்.
சிவாஜி அதுவரைக்கும் நடிக்காத ஒரு ரோல்தான் சினிமா டைரக்டர் வேஷம்.
இந்தப் படத்துல ஒரு காட்சிலே கதாநாயகி நளினிக்கு சிவாஜி ஒரு சின்ன வசனத்தை சொல்லி,அதுலே நடிக்கிறது எப்படின்னு நடிப்பு சொல்லிக் கொடுக்கிற காட்சி ஒண்ணு இருக்கும் .பின்னணி இசை அமைக்க இந்த காட்சியை பார்த்த இளையராஜா, சிவாஜி ஒரே வசனத்தை ஒன்பது விதமா மாத்தி மாத்தி பேசிக் காட்டின விதத்தையும் அவரோட முக பாவத்தையும் நடிப்பையும் பார்த்து பிரமித்துப் போனார்.
இயக்குனர் பிரகாசத்திடம், அவரோட முக பாவமே முழு உணர்வுகளையும் கொண்டு வந்துடுது, அதனால இந்த காட்சிக்கு பின்னணி இசை வேண்டாம் என்று திருப்தியானார் இளைய ராஜா .
சாதனை படத்துலே இந்திராகாந்தியோட கடைசி நமிடங்களை சிவாஜி டைரக்சன் செய்யற மாதிரிகாட்சி.இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட சில நாள்களில் எடுக்கப்பட்ட காட்சி அது. இந்திரா காந்தியாக நளினி வேடமிட்டு வந்த போது அதை பார்த்து சிவாஜி அழுதுவிட்டார் .
சாதனை படத்தின் முதல் நாள் படப்பிடிப்பு நடந்த போது தான்,
வாஹினி ஸ்டுடியோவில் நடித்துக் கொண்டிருந்த சிவாஜியிடம் இந்திராகாந்தி போனில் அழைத்து பேசியிருந்தார்.அந்தபடம் முடியறதுக்குள்ளேயே இந்திரா காந்தி இறந்ததை சிவாஜியாலே தாங்க முடியலே.இந்த காட்சியை சென்சார் போர்டு அனுமதிக்கலே.அந்த காட்சியை கட் பண்ண சொல்லிட்டாங்க.வழக்கு இப்போதான் நடந்துட்டு இருக்கு.அதனாலே இந்த காட்சிக்கு அனுமதி தர முடியாதுன்னு சொல்லிட்டாங்க.

பராசக்தி படத்துலே அது பேசாது (தெய்வம் ) 'கல்' என்று சிவாஜி பேசுன வசனம் கட் செய்யப்பட்டது.இதுலே கல்னு சொல்ற வார்த்தை குரல் சத்தம் தான் கட்டானது. கல் என்ற வசனம் மக்களுக்கு நல்லா புரிஞ்சது.சிவாஜி தன்னோட முகபாவனை உச்சரிப்பாலே அதை மக்களுக்கு புரிய வெச்சார்.அதுதான் சிவாஜியோட நடிப்பு.
சாதனை படத்துலயும் இந்திரா சுடப்படற காட்சிலே இயக்குனரா நடிச்ச சிவாஜியோட முக பாவனை நடிப்பை வைத்தே அந்த உருக்கமான காட்சியை ரசிகர்களாலே புரிஞ்சு கொள்ள முடிஞ்சது.
சிவாஜியை வெச்சு பிரகாசம் சில படங்களை எடுக்க கதை ரெடி பண்ணி வெச்சிருந்தார்.அதுலே ஒருகதைதான்..
ஏழு ஜென்மங்கள் .ஒரே ஜோடி .ஏழு காலங்கள் 7 நாடுகளில் ஏழு நாகரிகங்களில் ஏழு பாத்திரங்களில் பிறந்து தொடர்ந்து காதலிக்கும் ஏழு காதல் கதையை களமா வெச்சு கதை பண்ணி வெச்சிருந்தார்.சிவாஜிக்கு ஜோடியா ஜெயலலிதாவை ஒப்பந்தம் செஞ்சு ஏசி திருலோகச்சந்தர் டைரக்சன்லே எம் எஸ் விஸ்வநாதன் இசையில் ஒரு பாட்டு கம்போஸ் நடந்து பூஜை போடப்பட்டு படமும் தொடங்குச்சு.
ஆனா தயாரிப்பாளராலே அந்தப் படம் தொடர முடியாமல் நின்னு போச்சு.சிவாஜிக்கு கதை சொல்ல பிரகாசம் வர்றப்ப எல்லாம் ஏழு ஜென்மங்கள் கதை என்னாச்சு அப்படின்னு சிவாஜி கேட்பாராம்.
இதேபோல ஏ எஸ் பிரகாசம் சொல்லி சிவாஜி நடிக்க விரும்பின கதை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஓட விடுதலைப் போர் அப்படிங்கிற வீரகாவியம்.
இந்திய தேசிய ராணுவத்தை திரட்டி வெள்ளையர்களை எதிர்த்து ஜெய்ஹிந்த் டெல்லி சலோன்னு முழங்கி இம்பால் வரைக்கும் படை கொண்டு வந்த நேதாஜியின் விடுதலை போர் பிண்ணணியில் ஒரு காதல் கதை.சுபாஷ் சந்திர போஸ் வரலாறை சொல்லும் படம்.இதற்கு செலவு செய்ய வேண்டிய தயாரிப்பாளர் கிடைக்கும்போது பண்ணலாம் என்று சிவாஜிசொல்லி விட்டார்.
இந்தப் படங்கள் எல்லாம் தயாரிக்கப்பட்டு வெளிவந்திருந்தா ரசிகர்கள் விரும்பி பார்க்க நல்ல படங்கள் கிடைத்திருக்கும்.

 

செந்தில்வேல் சிவராஜ்

Leave a comment

Comment