TamilsGuide

ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் விஜய் தேவரகொண்டா இருப்பது வரம்- ராஷ்மிகா

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான ராஷ்மிகாவுக்கும், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தேவரகொண்டாவுக்கும் ஐதராபாத்தில் கடந்த மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. ஆனால் காதலை போலவே, இருவரும் இந்த விவகாரம் குறித்து வாயைத் திறக்காமல் ரகசியமாகவே வைத்திருந்தனர். ஆனாலும் ராஷ்மிகா விரலில் இருக்கும் நிச்சயதார்த்த மோதிரம் அதை சொல்லாமல் சொல்லியது.

இதனிடையே, தெலுங்கில் நடிகர் ஜெகபதி பாபு நடத்திய நிகழ்ச்சியில் ராஷ்மிகா கலந்துகொண்டார். அப்போது அவரது விரலில் அணிந்திருக்கும் மோதிரம் பற்றி பேச்சு எழுந்தது. இதற்கு ராஷ்மிகா, 'இது என் வாழ்நாளில் முக்கியமான ஒன்று' என்று கண்ணடித்து சிரித்தார்.

இதனை தொடர்ந்து, விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா ஜோடி அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 26-ந்தேதி ராஜஸ்தானின் உதய்பூரில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இருப்பினும் இந்த தகவல்கள் குறித்து இருதரப்பினரும் பதிலளிக்காமல் இருந்து வந்தனர்.

இந்த நிலையில், "ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஒரு விஜய் தேவரகொண்டா இருப்பார் என்று நான் நம்புகிறேன், ஏனென்றால் அது ஒரு வரம்" என்று ராஷ்மிகா பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ராஷ்மிகா நடிப்பில் வெளியான 'தி கேர்ள்பிரண்ட்' படத்தின் வெற்றிவிழா ஐதராபாத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் படத்தில் நடித்த நடிகர்கள், பணியாற்றியவர்கள் என பலரும் கலந்து கொண்டனர். மேலும் இந்நிகழ்ச்சியில் விஜய் தேவரெகொண்டாவும் பங்கேற்று இருந்தார்.

அப்போது நிகழ்ச்சியில் பேசிய ராஷ்மிகா, நீங்கள் (விஜு) ஆரம்பத்திலிருந்தே இந்தப் படத்தின் ஒரு பகுதியாக இருந்து வருகிறீர்கள், படத்தின் வெற்றியிலும் நீங்கள் ஒரு பகுதியாக இருக்கிறீர்கள். இந்த முழு பயணத்திலும் நீங்கள் தனிப்பட்ட முறையில் ஒரு பகுதியாக இருந்திருக்கிறீர்கள். ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஒரு விஜய் தேவரகொண்டா இருப்பார் என்று நான் நம்புகிறேன், ஏனென்றால் அது ஒரு வரம் என்று பேசினார்.

இவ்வாறு ராஷ்மிகா பேசியதும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் ஆரவாரம் செய்தனர். இதுதொடர்பான வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

முன்னதாக, நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகாவுடன் கைகுலுக்கும் போது அவரது கையை பிடித்து முத்தமிட்டது தொடர்பான வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இருவரும் முதல் முறையாக பொது நிகழ்வில் தங்களது காதலை வெளிப்படுத்தி உள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். 

Leave a comment

Comment