அமெரிக்க அதிபர் டிரம்ப், குடியேற்றம் தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தார். இதில் அமெரிக்காவில் படிக்க விரும்பும் வெளிநாட்டு மாணவர்களுக்கு கடும் விசா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பல மாணவர்களின் விசாக்கள் ரத்து செய்யப்பட்டன.
இந்தநிலையில் வெளிநாட்டு மாணவர்களுக்கு ஆதரவாக டிரம்ப் திடீரென்று கருத்து தெரிவித்து உள்ளார்.
அவர் தனியார் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
அமெரிக்கப் பல்கலைக்கழகங்களுக்கு நிதி உதவி செய்வதில் வெளிநாட்டு மாணவர்களின் பங்கு முக்கியமானது. உலகம் முழுவதிலுமிருந்து வரும் மாணவர்களில் பாதி பேரை நீக்கிவிட்டு, நமது முழு பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி அமைப்பையும் அழிக்க யாரும் விரும்பமாட்டார்கள்.
நான் அதைச் செய்ய விரும்பவில்லை. சர்வதேச மாணவர்கள் இருப்பது நன்மை பயக்கும் என்று நான் நம்புகிறேன். நான் உலகத்துடன் ஒத்துப்போக விரும்புகிறேன்.
பல அமெரிக்க பல்கலைக்கழகங்கள் தொடர்ந்து செயல்பட வெளிநாட்டு மாணவர்களை நம்பி உள்ளன. சீனா மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை கடுமையாகக் குறைவது அமெரிக்காவில் உள்ள பாதி கல்லூரிகளை வணிகத்திலிருந்து வெளியேற்றக்கூடும்.
வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்க பொரு ளாதாரத்திற்கு டிரில்லியன் கணக்கான டாலர்களை பங்களிக்கிறார்கள். உள்நாட்டு மாணவர்களின் கல்விக் கட்டணத்தை விட 2 மடங்கு அதிகமாக செலுத்துகிறார்கள். நான் அவர்களை விரும்புகிறேன் என்பதைவிட அதை ஒரு வணிகமாகவே பார்க்கிறேன்.
வெளிநாட்டு மாணவர் சேர்க்கையைக் குறைப்பது சிறிய கல்லூரிகளையும், வரலாற்று ரீதியாக சர்வதேச கல்விக் கட்டணத்தை நம்பி உள்ள பல்கலைக்கழகங்களையும் பாதிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.


